1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 28 நவம்பர் 2014 (05:59 IST)

ஹியூக்ஸ் குடும்பத்தினர் சார்பாக மைக்கேல் கிளார்க் உணர்ச்சிப்பூர்வமான அறிக்கை

மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் குடும்பத்தினர் சார்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் உணர்ச்சிப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டார். ஹியூக்ஸ் மரணம் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட மைக்கேல் கிளார்க் கண்ணீர் விட்டு அழுதார்.
 
இந்த அறிக்கை ஹியூக்ஸின் தந்தை கிரேக், தாய் விர்ஜினியா, சகோதரர் ஜான்சான் மற்றும் தங்கை மேகான் சார்பாக வெளியிடப்படுகிறது என்று பேச்சை மைக்கேல் கிளார்க் தொடங்கினார். "நாங்கள் எங்களுடைய மிகவும் அன்பு நிறைந்த மகன் மற்றும் சகோதரன் இறப்பினால் பெரும் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளோம். "இது மிகவும் கடினமானதாக இருக்கும், நாங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வீரர்கள், ஆஸ்திரேலியா கிரிக்கெட் மற்றும் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து ஆதரவையும் பாராட்டுகிறோம்." கிரிக்கெட் ஹியூக்ஸின் வாழ்க்கை. கிரிக்கெட்டின் மீதான அவரது அன்பை நாங்களும் பகிர்ந்து கொண்டோம். ஹியூக்ஸை காப்பாற்ற போராடிய அனைத்து டாக்டர்கள், மருத்து உதவியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் உங்களை விரும்புகிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆஸ்திரேலியாவில் ‘ஷெப்பீல்டு ஷீல்டு’ கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிட்னியில் நடந்த நியூ சவுத்வேல்சுக்கு எதிரான ஆட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக களம் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர் பிலிப் ஹியூக்ஸ் 63 ரன்களில் ஆடிக் கொண்டிருந்தபோது, எதிரணி வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் வீசிய பந்தில் படுகாயமடைந்தார். மணிக்கு 90 மைல் வேகத்தில் எழும்பி வந்த பந்தை (பவுன்சர்) அவர் ‘புல்ஷாட்’ அடிக்க முயற்சித்த போது, கணிப்பு தப்பவே பந்து தலையின் இடது பக்கத்தில் சூறாவளித்தனமாக தாக்கியது. ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் துரதிர்ஷ்டவசமாக அவர் இந்த விபரீதத்தில் சிக்கினார். நிலைகுலைந்து மைதானத்தில் மயங்கி விழுந்த அவர் சுயநினைவின்றி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
மேலும் அடுத்த பக்கம்..

பின்னர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அருகில் உள்ள சிட்னி செயின்ட் வின்சென்ட்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மூளையின் அழுத்தத்தை தணிக்க 1½ மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆனாலும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. செயற்கை சுவாச கருவியான ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்டிருந்தது. அவர் குணமடைய வேண்டி உலகம் முழுவதும் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹியூக்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிலிப் ஹியூக்ஸ் 2009 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்டில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். 26 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். வரும் 30 ஆம் தேதி தனது 26 பிறந்த நாளை கொண்டாடவிருந்த நிலையில் பிலிப் ஹியூக்ஸ் மரணம் அடைந்தார். அவரது உயிரிழப்பு அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.