வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2015 (16:18 IST)

தொடர்ந்து பாகிஸ்தானிடம் மண்டியிடும் இலங்கை; முதல் டி-20 இல் பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது.
 

 
கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் இரண்டு டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-2 என்ற கனக்கிலும் பாகிஸ்தான் வென்றுள்ளது.
 
இந்நிலையில், முதல் டி-20 போட்டி நேற்று கொழும்பு பிரமதேசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
 
அந்த அணியில் அதிகப்பட்சமாக அஹ்மது ஷேஷாத், சோயப் மாலிக், உமர் அக்மல் ஆகிய மூவரும் தலா 46 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் திசாரா பெரேரா 2 விக்கெட்டுகளையும், ஃபெர்னாண்டோ, மேத்யூஸ், மலிங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்களை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர். குசல் பெரேரா (4), தில்ஷன் (6), விதனேஜ் (1) என அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் வந்த தனஞ்செயா (31), மேத்யூஸ் (23), ஸ்ரீவர்தனா (35), சமர கபுகேதரா (31) என அணியின் வெற்றிக்குப் போராடினாலும் அந்த அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
 
இறுதியாக இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், அந்த அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியது. பாகிஸ்தான் தரப்பில் சொஹைல் தன்வீர் 3 விக்கெட்டுகளையும், அன்வர் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
ஆட்டநாயகன் விருது 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷோகைல் தன்வீருக்கு வழங்கப்பட்டது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.