வியாழன், 26 டிசம்பர் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. அ.கேஸ்டன்
Written By கேஸ்டன்
Last Updated : சனி, 21 ஜனவரி 2017 (17:00 IST)

டெல்லியில் நடந்த அரசியல் புரட்சி தமிழகத்தில் சாத்தியமா?: இளைஞர் சக்தியை வழிநடத்த சகாயம் ஐஏஎஸ் வருவாரா?

டெல்லியில் நடந்த அரசியல் புரட்சி தமிழகத்தில் சாத்தியமா?: இளைஞர் சக்தியை வழிநடத்த சகாயம் ஐஏஎஸ் வருவாரா?

தமிழகத்தின் எழுச்சியை நாடே மிரட்சியுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒன்றுகூடி போராட்டம் நடத்தும் இளைஞர், மாணவர் பட்டாளம் தமிழகத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகின்றனர்.


 
 
தெளிவான சிந்தனை, முழுமையான அரசியல் புரிதலுடன் அறவழிப்போராட்டத்தால் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளான் தமிழக இளைஞன். மறைந்த மக்கள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கண்ட கனவுகள், இளைஞர் பட்டாளத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துப்போகவில்லை.
 
எந்த ஒருங்கிணைப்பாளர்களும் இல்லாமலும் ஒவ்வொருவரும் ராணுவ கட்டுப்பாட்டுடன் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவே இதுபோன்ற ஒரு போராட்டத்தை இதற்கு முன்னர் பார்த்ததில்லை. லட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் இந்த போராட்டத்தில் சிறு அசம்பாவிதங்கள் கூட நடைபெறவில்லை.
 
ஒரு பெண் எப்பொழுது தனியாக நடு இரவில் பத்திரமாக நடந்து போக முடியுதோ அதுதான் இந்தியாவின் உண்மையான சுதந்திரம் என்றார் காந்தி. காந்தி கண்ட சுதந்திர இந்தியா தமிழகம் தான் என உணர்த்தியுள்ளனர் தமிழக இளைஞர்கள். பகல், இரவு என பெண்களும் இளைஞர்களின் போராட்டத்தில் தங்களை இணைத்து தங்கள் வீரத்தை உலகுக்கு உணர்த்தி வருகின்றனர். எங்குமே சிறு சபலம் கூட ஏற்படவில்லை. சுதந்திர இந்தியாவின் உத்தம புருஷர்கள் நம் தமிழ் இளைஞர்கள் என மார் தட்டிக்கொள்ளலாம். அந்த அளவுக்கு நெறி தவறாமல், தடம் பிறழாமல் செயல்பட்டு வருகின்றனர்.
 
மத்திய மாநில அரசுகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் இழப்பே இந்த போராட்டம் என உரக்க கூறி வருகின்றனர் இளைஞர்கள். அதன் வெளிப்பாடே போராட்டக்களத்திற்கு வந்து சுய லாபம் பெறலாம் என துடித்த அரசியல்வாதிகள் திரும்ப அனுப்பப்பட்ட நிகழ்வுகள்.
 
அரசியல்வாதிகளை நம்பி நம்பி ஏமாந்த மக்கள் இன்று எங்கள் தேவையை நாங்களே நிறைவேற்றிக்கொள்கிறோம் என வீதிக்கு வந்துள்ளனர். இந்த கூட்டம் தமிழக அரசியலை சுத்தம் செய்து ஒரு புனிதத்தை உருவாக்காத என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு தமிழனின் மனதிலும் கனலாய் எரிந்துகொண்டிருக்கிறது.
 
இளைஞர் சக்தி தமிழகத்தை ஆளாதா? தமிழகத்தின் அரசியல் சாக்கடைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு அப்புறப்படுத்தப்படாதா என்ற பெரும் ஆவல் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழனின் மனதிலும் தீயாய் எரிந்துகொண்டிருக்கிறது.
 
இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த போராட்டம் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து பிரச்சனைக்கான போராட்டம் என கூறுகின்றனர் போராட்டத்தில் உள்ள இளைஞர்கள். ஆனால் சொல்வதோடு நின்றுவிடக்கூடாது இளைஞர்களே நாளைய விடியல் உன்னுடையதாக இருக்க வேண்டும்.
 
டெல்லியில் நடந்த அரசியல் மாற்றம் தமிழகத்தில் ஏன் நடைபெறக்கூடாது. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் இளைஞர்களே, நீங்கள் தான் சக்தி, நீங்கள் தான் ஆற்றல். இளைஞர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா என சமூக வலைதளத்தில் இது வரை எழுதி வந்தீர்கள், தற்போது வரலாற்றை மாற்றி எழுதுங்கள். இனிவரும் காலம் இளைஞர்களின் காலம் என உலகுக்கு உணர்த்துங்கள். யாரும் உங்களை அரசியலுக்கு கூட்டி வந்து உன்னை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க மாட்டார்கள். நீயாகத்தான் முன்வர வேண்டும். இது தான் அதற்கான சரியான வாய்ப்பாக ஒவ்வொரு தமிழனும் நினைக்க வேண்டும்.
 
டெல்லியில் அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி அரசியலை மாற்றி அமைக்கவில்லையா. காங்கிரஸ், பாஜக போன்ற பழமை வாய்ந்த கட்சியை ஓரம் கட்டிவிட்டு ஆட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றவில்லையா? அது போல ஒரு மாற்றத்தை அளிக்க தமிழக மக்கள் தயாராக உள்ளார்கள். மாற்றம் உங்களால் வர வேண்டும், உங்களிடத்தில் இருந்து தான் வர வேண்டும். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளுக்கு ஓய்வு கொடுங்கள் இளைஞர் சக்தியே. தமிழகத்தை தூய்மைப்படுத்த ஒரே சித்தாந்தத்தின் கீழ் ஒருங்கமைந்து அரசியல் புரட்சியை ஏற்படுத்துங்கள்.
 
தமிழக இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஐயாவுக்கு அடுத்தபடியாக மதிக்கும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு நபர் சகாயம் ஐஏஎஸ் அவர்கள். ஊழலுக்கு எதிராக எந்த கொம்பனாக இருந்தாலும் எதிர்த்து நின்று நடவடிக்கை எடுக்கும் ஆண்மை கொண்ட ஆளுமை அவர். லஞ்ச லாவன்யமற்ற, ஊழலற்ற, நேர்மையான அரசை அமைக்க சகாயம் ஐஏஎஸ் போன்றோர்கள் இந்த இளைஞர் சக்தியை ஒருங்கமைக்க வேண்டும்.
 
பிரச்சனை வேண்டாம் என ஒதுங்கிப்போனால் பிரச்சனை தேடி தான் வரும். தூய்மையான ஆட்சி அமைய. தமிழர்களின் உரிமைகள் மீட்கப்பட, விவசாயிகளின் வாழ்க்கை பிரகாசிக்க அவர்கள் வாழ்க்கையில் சகாயம் வர சகாயம் போன்றோர்கள் இந்த இளைஞர் சக்தியை ஒருங்கிணைத்தாலே சாத்தியம்.