பட்ஜெட் முன்மொழிவுகளும் ஒதுக்கீடுகளும் விவசாய நெருக்கடியை தீர்க்க உதவாது, மாறாக தீவிரப்படுத்தவே செய்யும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து வெளியிட்ட ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது நிதிநிலை அறிக்கையில் மக்கள் மீதான மறைமுக வரிகளை உயர்த்தியும், விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் கொள்முதல் விலைகளை தர மறுத்தும் கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை வெட்டி சுருக்கியும் கல்வி, ஆரோக்கியம், குழந்தை மற்றும் மகளிர் நலன், தலித் மற்றும் பழங்குடியினர் நலன் ஆகியவற்றை புறக்கணித்தும் சொல்லொணாத் துயரங்களுக்கு மக்களை தள்ளியுள்ளது.
நல்ல நாள் வருகிறது என்று உடுக்கை அடித்துக்கொண்டே மக்களை வாட்டி வதைக்கும் பாஜக நடவடிக்கை வரிசையில் 2016-17 க்கான மத்திய பட்ஜெட்டும் பயணிக்கிறது.
வழக்கம் போல், ஏழை உழைப்பாளி மக்கள் மீது அதிக சுமையாக விழும் மறைமுக வரிகளை உயர்த்தி 20,000 கோடி ரூபாய் திரட்டுவது, மறுபுறம் செல்வந்தர்களையும் பெரும் கம்பெனிகளையும் தொடர்ந்து மகிழ்விக்கும் வகையில் நேர்முகவரிகள் சுமையை 1000 கோடி ரூபாய் குறைப்பது என்று பட்ஜெட் அமைந்துள்ளது.
நாட்டின் பெரும் பகுதி வரி வருமானம் இவ்வாறு மறைமுக வரிகள் மூலம் திரட்டப்படுவது உழைக்கும் மக்களை தொடர்ந்து வஞ்சிப்பதாகும்.
இந்த பட்ஜெட்டில் இன்னும் ஒரு படி மேலே சென்று வரி ஏய்ப்பு செய்துள்ளவர்களை கூவி அழைத்து அவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் திட்டத்தை நிதி அமைச்சர் முன்வைத்துள்ளது மிகவும் மோசமான முன்மாதிரியாகும்.
1997 ல் அன்றைய நிதி அமைச்சர் கொண்டுவந்த இதேபோன்ற திட்டத்தை பாஜக எதிர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திட்ட ஒதுக்கீடுகளில் முன்னேற்றம் இல்லை. பட்ஜெட் உரையில் விவசாயம் பற்றி பசப்பான பேச்சு உள்ளது. ஆனால் பட்ஜெட் முன்மொழிவுகளும் ஒதுக்கீடுகளும் விவசாய நெருக்கடியை தீர்க்க உதவாது, மாறாக தீவிரப்படுத்தவே செய்யும். ஊராக வேலை திட்டத்திற்கு ஒதுக்கீடு பண அளவில் சென்ற ஆண்டை விட அதிகரித்திருந்தாலும் விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் சரிவு தான்.
ஒரு சில ஆண்டுகளுக்குமுன் ரூபாய் 40 ஆயிரம் கோடியாக இருந்த ஒதுக்கீடு ரூபாய் 38 ஆயிரம் கோடியாகத்தான் இந்த ஆண்டு உள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான ஒதுக்கீடும் குறைந்துள்ளது. கல்வித்துறையின் நிலைமையும் இதுதான். நடப்பு ஆண்டு உற்பத்தி வளர்ச்சி 7.5% என்று சொல்லும் அரசு ஒதுக்கீடுகள் எதையும் அந்த அளவுக்குக்கூட உயர்த்தவில்லை.
மாறாக உண்மையளவில் பல துறைகளுக்கான ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டுள்ளன. நிதிப்பற்றாக் குறையை குறைப்பதே நோக்கமாக கொண்டு பட்ஜெட் போடப்படுவது பன்னாட்டு நிதி மூலதனத்தை தாஜா செய்வதற்கே. இது நாட்டு வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வை மேம்படுத்தவும் எந்த வகையிலும் உதவாது.
தாராளமய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றும் பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை வன்மையாக கண்டிக்கிறேன் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.