1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 25 ஜூன் 2016 (12:34 IST)

’இனி நான் பேச மாட்டேன்’ - சர்ச்சை நடிகர் அதிரடி முடிவு

இனி நான் குறைவாக பேசுவதே நல்லது; எது பேசினாலும் அது வேறு விதமாக சித்தரிக்கப்படுகிறது’ என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.
 

 
சல்மான்கான் ‘சுல்தான்’ என்ற இந்திப் படத்தில் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஒரு இணையதளம் அவரை சமீபத்தில் பேட்டி எடுத்தது. 
 
அப்போது சுல்தான் படத்தில் மல்யுத்த வீரராக நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று செய்தியாளர் கேட்டார்.
 
அதற்கு சல்மான்கான் கூறும்போது “படப்பிடிப்பின் போது, ஒவ்வொரு நாட்களும் சண்டை காட்சிகள் ஆறு மணி நேரம் எடுக்கப்பட்டது. அப்போது 120 கிலோ எடை கொண்ட எதிரியை நான் அலேக்காக தூக்கி கீழே எறிய வேண்டும். அதுவும் பலமுறை, வெவ்வேறு திசைகளில் தூக்கி போட வேண்டும். 
 
படப்பிடிப்பு முடிந்து செல்லும்போது என்னால் நேராக நடக்க கூட முடியாது. ஒரு கற்பழிக்கப்பட்ட பெண் போல் என் உடம்பு ரணமாக இருக்கும். அதன்பின் சாப்பிட்டு விட்டு, மீண்டும் பயிற்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. அதை நிறுத்தவும் முடியாது” என்று கூறியிருந்தார். 
 
அவரின் இந்த கருத்துக்கு பல பெண்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண்களை கேலி செய்யும் விதமாக, சல்மான்கான் கூறியிருப்பதாக சர்ச்சைகள் கிளப்பப்பட்டன.
 
இவ்விவகாரத்தில் சல்மான்கான் 7 நாட்களுக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் கூறியது. மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையமோ, சல்மான்கான் ஜூன் 29-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குள், ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது. எனினும் சல்மான்கான் இதுவரை மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை.
 
இந்நிலையில் ஐரோப்பாவில் நடைபெற்று வரும் 17-ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ள சல்மான்கான், `இனி நான் குறைவாக பேசுவதே நல்லது; எது பேசினாலும் அது வேறு விதமாக சித்தரிக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.