உண்மையை ஒத்துக்கொண்ட பாலிவுட் சூப்பர்ஸ்டார் – கோலிவுட் ஹீரோக்கள் கவனத்திற்கு….

Last Modified சனி, 1 டிசம்பர் 2018 (09:37 IST)
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர் கான் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தின் விமர்சனங்கள் குறித்து பதிலளித்துள்ளார் அமீர்கான்.

பாலிவுட்டைப் பொறுத்தவரை வெற்றி, தோல்வி விவரங்கள் மற்றும் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் போன்றவை ஓரளவு நேர்மையான முறையில் வெளிவரும். அதிலும் அமீர்கான் நடித்த படங்களின் புள்ளி விவரங்கள் ரொம்பவே துல்லியமாக வெளிவரும். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவான கஜின், 3 இடியட்ஸ், பிகே மற்றும் டங்கல் போன்ற திரைப்படங்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளன.

அதுபோலவே வசூல் சாதனை செய்யும் என எதிர்ப்பார்ப்பில் வெளியானது அமிர்கானின் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான். அமிர்கானோடு அமிதாப் பச்சனும் முதல் முறையாக இணைந்த படம் என்பதால் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுக்கவே இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறிவிட்டது. இதனால் இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் குறைந்தது. விமர்சன ரீதியாகவும் நிறைய எதிர்மறை கருத்துகள் வரத்தொடங்கின.

இந்நிலையில் அமீர்கான் இப்போது அதுகுறித்து பேசியுள்ளார். ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படம் பார்த்து ரசித்தவர்களுக்கு நன்றி. ஆனால் அவர்கள் வெகு சிலரே என்பது எனக்குத் தெரியும். இந்த முறை எங்களால் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாததற்கு வருந்துகிறோம். அடுத்த முறை சிறப்பான படத்தோடு உங்களை திருப்திபடுத்துவோம்’ எனத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சூப்பர்ஸ்டாரான் அமீர்கான் தன் படம் குறித்து, அதுவும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதே இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமீர்கானைப் பார்த்து நீங்களும் கொஞ்சம் திருந்துங்க கோலிவுட் ஹீரோஸ்களே…


இதில் மேலும் படிக்கவும் :