1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 26 நவம்பர் 2014 (03:50 IST)

கேரளாவில் பறவைக்காய்ச்சல் தொடர்ந்து தொற்றுவது ஏன்?

தென்னிந்திய மாநிலமான கேரளாவில் இரண்டு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் வாத்துக்கள் பல பறவைக்காய்ச்சலுக்கு பலியானதைத் தொடர்ந்து, இந்த பகுதியில் சுமார் 20,000 வாத்துக்களை அழிக்கும் நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டிருக்கிறது.
 
இந்த பகுதியில் இறந்து போன வாத்துக்களின் ரத்தமாதிரிகளை சேகரித்த கேரள கால்நடைத்துறை அதிகாரிகள் அதை போபாலுக்கு சோதனைக்கு அனுப்பினார்கள். அந்த சோதனை முடிவுகளில் வாத்துக்கள் அனைத்தும் பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக இறந்து போனது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. “எச் 5” ரக பறவைக் காய்ச்சல் அந்த பகுதியில் பரவியிருப்பதை இந்த பரிசோதனை முடிவுகள் தெரிவித்திருக்கின்றன.
 
இந்த எச் 5 ரக பறவைக்காய்ச்சல் கேரளாவின் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கவும், இந்த பறவைக்காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு தொற்றாமல் இருக்கவும் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் அனைத்து வாத்துக்களையும் அழிக்கும் பணியை கேரள மாநில அரசும் அந்த பகுதி விவசாயிகளும் செய்து வருகின்றனர்.
 
கேரளாவின் இந்த குறிப்பிட்ட பகுதியில் கடந்த ஆண்டும் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருந்தது. மீண்டும் அதே பகுதியில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பதற்கு பறவைக்காய்ச்சலை தோற்றுவிக்கும் வைரஸ் அந்த பிராந்தியத்தில் இருந்து முழுமையாக அழிக்கப்படவில்லை எனபதே காரணம் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயிர்நுட்பவியல் துறையின் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் பி ராமசாமி.
 
பறவைக்காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் பன்றிகளின் உடலை பாதுகாப்பாக பதுங்கியிருப்பதற்கான இடமாக பயன்படுத்துவதாக கூறும் பேராசிரியர் பி ராமசாமி, இந்த குறிப்பிட்ட பறவைக்காய்ச்சல் வைரஸை தன் உடலில் சுமக்கும் பன்றிகள் அடையாளம் கண்டு அழிக்கப்படாமல் இருப்பது தான் இந்த ஆண்டும் அதே பகுதியில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட முக்கியக் காரணம் என்று விளக்கினார்.
 
இந்த பறவைக்காய்ச்சல் வைரஸானது, தான் பதுங்கியிருக்கும் பன்றிகளை பாதிப்பதில்லை என்பதாலும், அவை மனிதர்களுக்கு உடனடியாக தொற்றுவதில்லை என்பதாலும் இது குறித்து ஒருவித மெத்தனம் காணப்படுவதாக தெரிவிக்கும் ராமசாமி, இந்த வைரஸ் வெகு விரைவில் மரபணு மாற்றம் செய்து மனிதர்களைத் தாக்கும் தன்மை கொண்டது என்பதால், இதை முற்றாக இல்லாமல் செய்ய வேண்டியது மிகவும் அவசியமான தற்காப்பு நடவடிக்கை என்கிறார்.