வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 நவம்பர் 2024 (16:51 IST)

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

Trump

அமெரிக்காவில் அமையவிருக்கும் புதிய நிர்வாகம், யுக்ரேன் ரஷ்யாவிடம் இழந்த பிராந்தியங்களை மீட்பதற்கு உதவுவதைக் காட்டிலும், அமைதியை நிலை நிறுத்தவே முக்கியத்துவம் அளிக்கும் என்று டொனால்ட் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் கூறியுள்ளார்.

 

ப்ரையன் லான்ஸா என்ற அந்த ஆலோசகர் 2024-ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் டிரம்பின் பரப்புரை பணிகளில் பங்கேற்றார். பிபிசியிடம் பேசிய அவர், "வருகின்ற புதிய நிர்வாகம், யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கியிடம் உள்ள அமைதியை நிலை நிறுத்துவதற்கான திட்டங்கள் என்ன என்று கேட்கும்" என்று கூறினார்.

 

"அவர் இங்கே வந்து, கிரைமியாவை திரும்பப் பெற்றால்தான் எங்களால் அமைதியாக இருக்க முடியும் என்று கூறினால், அவர் இந்த விவகாரத்தில் தீவிரமாக இல்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்," என்று கூறினார் ப்ரையன்.

 

டிரம்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவரிடம் இது குறித்து பேசிய போது டொனால்ட் டிரம்பின் பிரதிநிதியாக ப்ரையன் பேசவில்லை என்று கூறினார்.

 

"கிரைமியாவை மீட்பது இனி சாத்தியமில்லை "
 

2014-ஆம் ஆண்டு ரஷ்யா, கிரைமியா தீபகற்பத்தை தன்னுடைய நாட்டோடு இணைத்தது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, யுக்ரேன் மீது முழுவீச்சில் போர் தொடுத்த ரஷ்யா, யுக்ரேனின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பிராந்தியங்களை கைப்பற்றியது.

 

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் தொடர்ச்சியாக போரை நிறுத்துவது குறித்தும், யுக்ரேனுக்கான உதவிகளை குறைப்பது குறித்தும் பேசி வருகிறார். அவரைப் பொறுத்தமட்டில் யுக்ரேனுக்கு ராணுவ ரீதியாக அளிக்கும் உதவிகள் அமெரிக்காவின் வளங்களில் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.

 

ஆனால் தற்போது வரை, இந்த போரை அவர் எவ்வாறு நிறுத்துவார் என்பது குறித்து ஏதும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால் யுக்ரேன் விவகாரத்தில் தன்னுடைய ஆலோசகர்களின் கருத்துகள் அனைத்தையும் அவர் கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

டிரம்பிற்கு ஆலோசகராக 2016 மற்றும் 2024 தேர்தல்களில் செயல்பட்ட ப்ரையன், பிபிசியிடம் பேசும் போது யுக்ரேனின் கிழக்கு பிராந்தியம் குறித்து ஏதும் பேசவில்லை. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து கிரைமியாவைப் பெறுவது சாத்தியமற்றது என்றும் அமெரிக்காவின் இலக்கு அது அல்ல என்றும் கூறினார்.

 

ஜெலன்ஸ்கி , எங்களுக்கு கிரைமியா கிடைத்தால் மட்டுமே சண்டையிடுவதை நிறுத்துவோம் என்று கூறினால் அவருக்காக நாங்கள் ஒரு செய்தியை வைத்திருக்கிறோம். அது என்னவென்றால், "கிரைமியா ஏற்கனவே கையைவிட்டு சென்றுவிட்டது," என்று பிபிசியின் உலக சேவையில் அவர் தெரிவித்தார்.

 

கிரைமியாவை திரும்பப் பெறுவதற்கு அமெரிக்க வீரர்கள் போரிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதனை நீங்கள் தனியாக தான் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

அமெரிக்கா தன்னுடைய துருப்புகளை யுக்ரேனுக்கு போருக்காக அனுப்பவில்லை. கீவும் அமெரிக்க துருப்புகளை அனுப்புங்கள் என்று கோரிக்கையும் வைக்கவில்லை. தங்களுடைய ராணுவ வீரர்களுக்கு அமெரிக்க ராணுவம் உதவ வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்திருக்கிறது யுக்ரேன்.

 

யுக்ரேன் மக்கள் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருப்பதாக தெரிவித்த அவர், அவர்கள் சிங்கங்களைப் போன்ற பலமான இதயங்களைக் கொண்டவர்கள் என்று குறிப்பிட்டார். மேலும், "ஆனால் அமெரிக்காவின் முன்னுரிமை அமைதியை நிலைநிறுத்துவதும், உயிரிழப்புகளை தடுப்பதும் தான்," என்றார்.

 

"அமைதிக்கான உண்மையான பார்வை என்ன? அது வெற்றி பெறுவதில் அல்ல. மாறாக அமைதியை உருவாக்கக் கூடியது. நாம் ஒரு நேர்மையான உரையாடலை தொடங்குவோம் என்று தான் யுக்ரேனிடம் கூற இருக்கிறோம்," என்றார் அவர்.

 

யுக்ரேன் மீது அதிகரிக்கும் அழுத்தம்
 

இதற்கு பதில் அளித்த, ஜெலென்ஸிகியின் ஆலோசகர் திம்த்ரோ லைட்வைன், ப்ரையனின் கருத்துகள் அமைதிக்காக யுக்ரேன் மீது அழுத்தம் தருவது போன்று இருக்கிறது. உண்மையில் ரஷ்ய அதிபர் புதின் தான் போரை நீட்டிக்கிறார்," என்று கூறினார்.

 

"2022ம் ஆண்டில் இருந்தே நாங்கள் அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். சாத்தியமான முன்மொழிவுகளை தான் நாங்கள் முன்வைத்தோம். ஆனால், அமைதி வேண்டும் என்றும், அது சாத்தியமானது என்றும் ரஷ்யாவைத் தான் கேட்க வைக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

 

டிரம்பின் வருங்கால நிர்வாகத்தை அமைக்க இருக்கும் குழுவின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து பேசும் போது, "ப்ரையன் பிரசார நிகழ்வுக்காக நியமிக்கப்பட்ட ஒரு ஒப்பந்ததாரர். அவர் டொனால்ட் டிரம்பின் கீழ் பணியாற்றவும் இல்லை. அவரின் கருத்துகளை பிரதிபலிக்கவும் இல்லை" என்று கூறினார்.

 

அதிகாரத்திற்கு வந்த பிறகு, நெருங்கிய வட்டங்களுடன் அமர்ந்து இந்த விவகாரத்தை எப்படி கையாளுவது என்பது குறித்து டொனால்ட் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதழில், டிரம்பின் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றிய, பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர், "ட்ரம்பின் வட்டாரத்தில் ஒருவர் எவ்வளவு மூத்தவராக இருந்தாலும் சரி, டிரம்பின் திட்டங்கள் குறித்து நன்றாக தெரிந்து வைத்திருப்பதாக கூறினாலோ, அல்லது மாறுபட்ட கருத்துகளை கொண்டிருப்பதாக தெரிவித்தாலோ, அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்," என்று கூறியுள்ளார்.

 

நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து எடுக்கப்படும் எந்த முடிவையும் தானாக எடுக்கும் பழக்கத்தை டிரம்ப் கொண்டிருக்கிறார் என்றும், பல நேரங்களில் அந்த நொடியில் எடுக்கப்படும் முடிவுகளாகவே அவை இருந்திருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

 

தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜெலென்ஸிகியுடன் போனில் உரையாடினார் டிரம்ப். அந்த அழைப்பில் ஈலோன் மஸ்க்கும் உடனிருந்ததாக கூறப்படுகிறது.

 

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இரு நாட்டு தலைவர்களும் போனில் உரையாடினார்கள் என்று யுக்ரேனின் அதிபர் அலுவலக தரப்பில் இருந்து பிபிசியிடம் தெரிவிக்கபப்ட்டது.

 

"மிக முக்கியமான விவகாரங்களுக்கான அழைப்பு போன்று அது இல்லை. அமைதியான முறையில் மகிழ்ச்சியான ஒரு உரையாடலாக அது இருந்தது," என்று யுக்ரேன் அதிபர் அலுவலக தரப்பில் கூறப்பட்டது.

 

போரில் யுக்ரேன் பின்வாங்கினால் என்ன நடக்கும்?
 

புதினுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஜனநாயகக் கட்சியினர் டிரம்ப் மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர். யுக்ரேனை அடிபணிய வைக்கும் நோக்கில் தான் அவர் போரை அணுகுகிறார் அது ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் ஆபத்தில் கொண்டு போய் நிறுத்திவிடும் என்றும் குற்றம்சுமத்துகின்றனர்.

 

எஸ்தோனியாவின் பிரதமர் பிபிசியிடம் பேசும் போது, யுக்ரேன் இந்த போரில் பின்வாங்கிவிட்டால், ரஷ்யாவின் பசி அதிகரிக்கத்தான் செய்யும் என்றார்.

 

சண்டே வித் லாரா குவென்ஸ்பெர்க் என்ற பிபிசி நிகழ்ச்சியில் பேசிய கிறிஸ்டன் மைக்கேல், "நீங்கள் பின்வாங்க முடிவு செய்துவிட்டால், அதற்காக அதிகம் இழக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்," என்று கூறினார்.

 

"நீங்கள் எங்காவது ஒரு எல்லைக் கோட்டை நிர்ணயம் செய்து, அங்கே படைகளைக் கொண்டு அந்த பகுதியை காக்க நினைத்தால் ரஷ்யாவும் அதையே செய்யும். ஆனால் அதனை பொறுமையாக செய்யாது. அது திட்டத்திலேயே இல்லை" என்றார் அவர்.

 

கடந்த மாதம் 'வெற்றிக்கான திட்டம்' ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்;gபித்தார் அதிபர் ஜெலன்ஸ்கி. அதில், யுக்ரேனின் பிராந்தியங்களையும் இறையாண்மையையும் இணைக்க மறுத்தல் என்ற சொற்றொடரும் இடம் பெற்றிருந்தது.

 

தேர்தல் பிரசாரங்களின் போது ஒரே நாளில் போரை நான் நிறுத்திவிடுவேன் என்று டிரம்ப் கூறிக் கொண்டே இருந்தார். ஆனால், அதனை அவர் எவ்வாறு செய்வார் என்பது குறித்த விவரம் எதையும் வழங்கவில்லை.

 

அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கலாம். ஆனால் ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யுக்ரேன் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் அங்கே இருக்க வேண்டும் என்று, டிரம்பின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர்கள் இருவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

"போரில் தான் இழந்த பிராந்தியங்களை மீட்கும் செயல்பாடுகளை யுக்ரேன் கைவிடக் கூடாது. ஆனால் அது தற்போதைய எல்லைகளின் அடிப்படையில் அதற்கான பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்த வாரத்தின் துவக்கத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பை வாழ்த்தினார் புதின்.

 

2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா யுக்ரேன் மீது துவங்கிய படையெடுப்பிற்கு பிறகு யுக்ரேனுக்கு பைடன் - ஹாரிஸ் நிர்வாகம் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ஆதரவையும் ப்ரையன் விமர்சனம் செய்தார்.

 

"உண்மை நிலவரம் என்னவென்றால், பைடன் நிர்வாகமோ, ஐரோப்பிய நாடுகளோ இந்த போரில் யுக்ரேன் வெல்வதற்கு தேவையான ஆயுதங்களை வழங்கவில்லை. யுக்ரேன் வெல்வதற்கு தடையாக இருக்கும் அம்சங்களையும் அவர்கள் அகற்றவில்லை" என்று குற்றம்சுமத்தினார் அவர்.

 

இந்த ஆண்டின் துவக்கத்தில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை, ரஷ்யாவுக்கு எதிரான யுத்தத்தில் யுக்ரேனுக்கு உதவ 61 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க ஒப்புதல் அளித்தது.

 

யுக்ரேனுக்கு அதிக அளவில் ஆயுதங்களை விநியோகிக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. 2022 பிப்ரவரி துவங்கி 2024 ஜூன் வரையான காலகட்டங்களில் 55.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது அல்லது தருவதாக ஒப்புக் கொண்டுள்ளது என்று ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சி அமைப்பான கியெல் இன்ஸ்டிட்யூட் ஃபார் தி வேர்ல்ட் எக்கானமி தெரிவித்துள்ளது.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு