வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 16 மே 2023 (11:00 IST)

மியான்மரின் இந்த மாகாணம் மீது இந்தியா, சீனா மற்றும் வங்கதேசத்தின் பார்வை விழுவது எதனால்?

மியான்மரின் வடமேற்கு கடற்கரை பகுதியில் உள்ள ஒரு நகரம் சித்வே. இது ரக்கைன் மாகாணத்தின் தலைநகரம். உள்ளூர் பர்மிய மொழியின் படி, இந்தப்பெயருக்கு "போர் நடந்த இடம்" என்று பொருள்.
 
1784 ஆம் ஆண்டில் பர்மிய மன்னர் போதவ்பாயா இந்த மாகாணத்தை ஆக்கிரமித்தபோது ரக்கைன் போராளிகள் கலாதான் ஆற்றங்கரையில் அவருக்கு எதிராக கடுமையான சண்டையிட்டனர்.
 
பின்னர் 1825ஆம் ஆண்டில், ஆங்கிலோ-பர்மியப் போரின் போது பிரிட்டிஷ் படைகள் சித்வேயின் கரையில் இறங்கின. நகரின் பண்டைய அக்யாயப் டான் பகோடாவைச் சுற்றி தங்கள் முகாமைக் கட்டிய படைகள் அங்கு குடியேறின.
 
சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான 'ஆசாத் ஹிந்த் ராணுவம்', ஜப்பானியப் படைகளுடன் இணைந்து பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக போரிட்டு, கோஹிமாவையும், அராக்கானையும் (இப்போது ரக்கைன் என்று அழைக்கப்படுகிறது) வென்றது என்று சில நவீன வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
 
மியான்மர் அரசின் 2014 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ரக்கைனின் மொத்த மக்கள் தொகை சுமார் 21 லட்சம். இதில் 20 லட்சம் பேர் பௌத்தர்கள்.
 
இந்தியா, சீனா மற்றும் வங்கதேசம் இடையே போட்டி
 
மாகாணத்தின் மக்கள்தொகையில் சுமார் பத்து லட்சம் பேர் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் என்று கூறப்படுகிறது, அவர்களில் பெரும் பகுதியினர் தலைநகர் சித்வேக்கு வெளியே தடைச்செய்யப்பட்ட பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதே ரக்கைன் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது மட்டுமல்லாமல் இந்தியா, சீனா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே கடுமையான போட்டியின் இடமாகவும் மாறியுள்ளது.
 
கடந்த செவ்வாயன்று, இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் மியான்மரின் துணைப் பிரதமர் அட்மிரல் டின் ஆங் சான் இணைந்து கலாதான் திட்டத்தின் கீழ் புதிய சித்வே துறைமுகத்தை திறந்து வைத்தனர்.
 
கொல்கத்தாவில் உள்ள ஷ்யாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கி சித்வே துறைமுகத்தை அடைந்த முதல் இந்திய சரக்குக் கப்பலை சர்பானந்தா சோனோவால் வரவேற்றார்.
 
"இந்தியாவின் வடகிழக்கு பகுதி இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, மேலும் இந்த புதிய திட்டம் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலும், வடக்கு மற்றும் மத்திய மியான்மரிலும் புதிய வர்த்தகம், போக்குவரத்து மற்றும் வணிகத்தை ஊக்குவிக்கும்,” என்று மியான்மரின் யாங்கூன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியரான சோன் வின் கூறினார்.
 
கலாதான் திட்டத்தால் இந்தியாவுக்கு என்ன பலன்
 
கலாதான் மல்டிமாடல் திட்டம், கொல்கத்தா துறைமுகத்தை மியான்மரின் சித்வே துறைமுகத்துடன் கடல் வழியாக இணைக்கிறது. இதன் நன்மை என்னவென்றால், சித்வே துறைமுகத்தில் இருந்து பலேத்வா நதி வழியாக பலேத்வாவை இந்தியாவின் எல்லையுடனும், மியான்மரை சாலை வழியாக மிசோரமின் லாங்ட்தலாயுடனும் இந்தத்திட்டம் இணைக்கிறது.
 
2008 இல் இத்திட்டத்தின் பட்ஜெட் 500 கோடி ரூபாயாக இருந்தது, ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக இதற்கு 2,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவானது.
 
இந்தத் திட்டம் 1991 ஆம் ஆண்டு "கிழக்கு நோக்கிய பார்வை"(லுக் ஈஸ்ட்) கொள்கையின் கீழ் தொடங்கப்பட்டது. தற்போது பாஜகவின் நரேந்திர மோதி அரசால் "கிழக்கு நோக்கிய செயல்பாடு"(ஆக்ட் ஈஸ்ட்) என்ற மறுவடிவமைக்கப்பட்ட கொள்கையாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சாலைகள், பாலங்கள் மற்றும் மிதக்கும் தடுப்பணைகள் போன்ற விரிவான உள்கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளதால் கலாதான் திட்டத்திற்கு மல்டிமாடல் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
இந்தியாவிலிருந்து நிலத்தால் சூழப்பட்ட வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்லும் ஒரே பாதை மேற்கு வங்காளத்தில் உள்ள குறுகலான சிலிகுரி வழித்தடம் மட்டுமே. இது 'சிக்கன் நெக்' என்று அழைக்கப்படுகிறது.
 
வங்கதேசம் வழியாக நாட்டின் வடகிழக்கு மாநிலங்களுக்கு சரக்குகள், உணவுப் பொருட்கள் மற்றும் தானியங்களை கொண்டு சென்றால், செலவு குறைவாக இருக்கும் என்பதால் இந்தியா பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
"இந்தியாவுக்கு முதன்முறையாக மியான்மரில் காலூன்ற வலுவான இடம் கிடைத்துள்ளது.," என்று அசாமின் சில்சார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ஜெய்ஸ்ரீ ரெளத் கூறுகிறார்.
 
”மியான்மரின் அரசியல் சூழ்நிலையில் பல தசாப்தங்களாக ஏற்ற இறக்கம் நிலவி வந்துள்ளது. அது மீண்டும் வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
 
இப்போது கேள்வி என்னவென்றால், இந்த சூழலில், இந்தியாவும் தனது செயல் உத்தி-பொருளாதார நலன்களை நிறைவேற்றும் சவாலை எதிர்கொள்ளும், ஏனெனில் மியான்மர், சீனா மற்றும் வங்கதேசத்தின் அண்டை நாடாகவும் உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
 
ரக்கைனுக்கான போட்டி
 
2021 இல் மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதன் பிறகு ராணுவ அரசுக்கும், இன உரிமைகளைக் கோரும் குறைந்தது ஒரு டஜன் கிளர்ச்சிக் குழுக்களும் இடையே மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
 
இவற்றில் ரக்கைன் மாகாணத்தின் விவகாரம் எல்லாவற்றையும் விட அதிக நாசூக்கானது. இதற்கு மியான்மருக்கு வெளியேயும் பல பரிமாணங்கள் உள்ளன.
 
சீனா தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக ராக்கைனில் மும்முரமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கூடவே இந்தியாவும், வங்கதேசமும் இதில் பின்தங்கியிருக்க விரும்பவில்லை.
 
"வன்முறைக்கு உள்ளான பத்து லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் ரக்கைனில் இருந்து வங்கதேசத்திற்கு தள்ளிவிடப்பட்டனர். அவர்கள் காக்ஸ் பஜாரில் உள்ள முகாம்களில் வாழ்கின்றனர். மறுபுறம் வங்க அரசு இந்த இடம்பெயர்வை தற்காலிகம் என்று அறிவித்து இவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப சாத்தியமான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது,” என்று வாஷிங்டனை தளமாகக் கொண்ட வில்சன் சென்டர் சிந்தனைக் குழுவின் இயக்குனரான மைக்கேல் குகல்மேன், வெளியுறவுக் கொள்கை இதழில் ஒரு பகுப்பாய்வில் எழுதியுள்ளார்.
 
மியான்மர் எல்லையில் அமைந்துள்ள ரக்கைன் மாகாணத்தில் வன்முறை தொடருவதை வங்கதேசம் விரும்பவில்லை. ஏனெனில் அதனால் அந்த நாட்டிற்கு பல பிரச்சனைகள் ஏற்படும். எல்லைகளைப் பாதுகாக்க அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதற்கு அதிகமாகச்செலவாகும்.
 
ஆனால் ரோஹிஞ்சா அகதிகளை திருப்பி அனுப்ப வங்கதேசம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் இப்போதுவரை தோல்வியடைந்து வருகிறது.
 
சீனாவைப் பற்றி பேசினால் அதற்கு ரக்கைன் மாகாணத்தில் சொந்த நலன்கள் உள்ளது. தென் சீனாவிற்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே போக்குவரத்து மற்றும் பொருளாதார வழித்தடத்தை பாதுகாப்பது இதில் முக்கியமானது.
 
சமீபத்தில் வங்காள விரிகுடாவில் கட்டி முடிக்கப்பட்ட கியாக்பியு துறைமுகத்திலிருந்து போடப்பட்டுள்ள எரிவாயு குழாய் மற்றும் இந்த துறைமுகத்தில் இருந்து தெற்கு சீனா செல்லும் ரயில் பாதை ஆகியவற்றின் பாதுகாப்பு சீனாவுக்கு முக்கியமானது.
 
இவை காரணமாக சீனாவுக்கு முதல் முறையாக ராக்கைன் வழியாக வங்காள விரிகுடாவிற்கு அணுகல் கிடைத்துள்ளது. இதை இழக்க அந்த நாடு விரும்பாது.
 
கலாதான் துறைமுகத் திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு வர்த்தகம் மற்றும் வணிகத்திற்காக மியான்மர், வங்கதேசத்தைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இறக்குமதி-ஏற்றுமதி நேரடியாக இருக்கும் என்றும் இந்தியா கருதுகிறது.
 
"இந்தியா, சீனா மற்றும் வங்கதேசம் ஆகிய எல்லா நாடுகளும் தற்போது விரும்பும் மிட்டாய் ரக்கைன். மியான்மரில் வேகமாக மாறிவரும் சூழ்நிலைக்கு இடையில் தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மூன்று அண்டை நாடுகளும் இருக்கின்றன,” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசியாவின் நிபுணர் பேராசிரியர் சுதீந்திர குமார் குறிப்பிட்டார்.