செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (11:59 IST)

விக்கல் ஏன் ஏற்படுகிறது? விக்கலை நிறுத்த தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?

உங்களுக்கு கடைசியாக எப்போது விக்கல் ஏற்பட்டது என்பது நினைவில் இருக்கிறதா?
 
சிலருக்கு அடிக்கடி விக்கல் ஏற்படும், சிலருக்கு எப்போதாவது ஒருமுறை விக்கல் வரும். ஆனால் இந்த விக்கல் ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?
 
விக்கல் என்றால் என்ன?
டையபிராம் (diaphragm) என்ற தசையில் ஏற்படும் தன்னியல்பான சுருக்கங்களே மருத்துவ ரீதியாக 'விக்கல்' என்று குறிப்பிடப்படுகிறது.
 
டையபிராம் என்ற இந்த தசை மார்பையும், வயிறையும் பிரிக்கும் இடத்தில் அமைந்திருக்கும்.
 
மனிதர்கள் சுவாசிப்பதில் இந்த தசையின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
 
விக்கலை மருத்துவ மொழியில், 'சிங்குல்ட்' என்று அழைக்கிறார்கள். இது லத்தீன் வார்த்தையான சிங்குல்ட் என்ற சொல்லில் இருந்து உருவாகியுள்ளது.
 
லத்தீன் மொழியில் 'சிங்குல்ட்' என்றால், "அழும்போது ஒருவரின் மூச்சைப் பிடிப்பது" என்று பொருள்.
 
நம்மில் பெரும்பாலானோருக்கு, விக்கல் என்பது எரிச்சலூட்டும் விஷயமாக இருக்கும். பலருக்கும் அவை நீண்ட நேரம் நீடிக்காது.
ஆனால் சிலருக்கு விக்கல் வந்தால், இரண்டு நாட்களுக்கு மேல் கூட நீடிக்கிறது.
 
விக்கல் எப்படி ஏற்படுகிறது?
 
 
விக்கல் என்பது பல உடல்பாகங்களின் ஒரு ரிஃப்ளெக்ஸ் வெளிப்பாடு. நமது உடலில் உள்ள நியூரோமோட்டார் பாதையில் ஏற்படும் உணர்வு மாற்றங்களுக்கு ஒரு வடிவம் தருவது தான் விக்கல்.
 
மூளை, காது, மூக்கு, தொண்டை, டையபிராம், மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் ஏற்படும் உணர்வு மாற்றங்களை அடுத்து ஒருவருக்கு விக்கல் வருகிறது.
இந்த உணர்வு, மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு, முதுகுதண்டுவடத்தின் மேல் பகுதியுடன் தொடர்பில் இருக்கும் மூளையின் ஒரு பகுதியில் பதிவாகிறது. இதை 'விக்கல் மையம்' என்று அழைக்கிறார்கள்.
 
விக்கல் மையத்தில் இருந்து திரும்பும் இந்த உணர்வு சமிக்ஞை, டையபிராம் மற்றும் மார்பு பகுதியில் உள்ள விலா எலும்புகளின் தசைகளில் உராய்வை ஏற்படுத்தி விக்கலை வரவைக்கிறது.
 
இந்த தசையில் ஏற்படும் திடீர் சுருக்கத்தால், நுரையீரலுக்குள் அதிக காற்று உள்ளே நுழைகிறது. இதன் விளைவாக குரல் நாணில்(vocal cord) ஏற்படும் மாற்றங்களே விக்கலுக்கு ஒலியை உருவாக்குகிறது.
 
விக்கல் எப்படி தூண்டப்படுகிறது?
 
உடலில் உள்ள உணர்வு வளைவை(reflex arc) பாதிக்கும் செயல்களால் விக்கல் ஏற்படுகிறது.
 
அளவுக்கு அதிகமாக உணவை எடுத்துக் கொள்வது தான் விக்கல் வருவதற்கான மிகவும் பொதுவான காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
கேஸ் அதிகமாக இருக்கும் பானத்தை குடிக்கும் போதோ, பெரிய தட்டு நிறைய உணவை சாப்பிட்ட பிறகோ அந்த உணவுக்கு ஏற்ப நமது வயிற்றின் தசைகள் விரிவடையும்.
 
இந்த மாற்றம் நிகழும் போது உணர்வு வளைவு தூண்டப்படுவதால், சாப்பிட்ட பிறகு நமக்கு விக்கல் வருகிறது.
 
காரமான உணவு, மதுபானம், சிகரெட், அதிக உற்சாகம் போன்றவையும் விக்கல் வரவைப்பதற்கான காரணமாக இருக்கின்றன.
வயிற்றில் இருக்கும் கருவுக்கும் விக்கல் வருவது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலமாக சில நேரங்களில் தெரியவந்துள்ளது. குழந்தை பிறக்கும் போது, நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை உள்ளே இழுப்பதற்கு தயாராகும் வகையில் குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படுவதாக சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
 
விக்கலை நிறுத்த என்ன செய்ய வேண்டும்?
சாதாரணமாக விக்கல் வந்தால், நம்ம ஊரில் தண்ணீர் குடிக்கச் சொல்லி சிலர் சொல்வார்கள். சிலர் வெள்ளை சாதத்தை உருண்டையாக பிடித்து சாப்பிட சொல்லி அறிவுரை வழங்குவார்கள்.
 
இது எல்லா நேரங்களிலும் பலனைத் தருவதில்லை. குறிப்பாக சிலருக்கு விக்கல் வந்தால், அவை 48 மணி நேரம் வரை நீடிக்கின்றன.
 
48 மணி நேரத்திற்கும் குறைவாக நீடிக்கும் விக்கல் தாக்குதல் கவலைக்குரியது அல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வகையான விக்கல் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தானாகவே சரியாகின்றன.
 
ஆனால் உங்களுக்கு வரும் விக்கல் நிற்கவில்லை என்றால் என்ன செய்யலாம்?
 
விக்கல் தானாகவே நிற்காத போது, விக்கல் ஏற்படுவதற்கு காரணமாக உணர்ச்சி வளைவை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.
 
இப்படிச் செய்ய நாம் 'வல்சால்வா முறையை'(Valsalva maneuver) பின்பற்றி முயற்சி செய்ய வேண்டும். இந்த முறைப்படி 4 கட்டங்களாக விக்கலை நிறுத்த முயற்சி செய்ய வேண்டும்.
மூச்சை நன்கு உள்ளே இழுத்து, வாயை மூடி மூக்கால் மூச்சை இழுத்து பிடிக்க வேண்டும்.
உள்ளே இழுத்த மூச்சை, மூக்கு,வாய் வழியாக வெளியே விடாமல் 15 முதல் 20 விநாடிகள் வரை அடக்கி வைத்திருக்க வேண்டும்.
20 விநாடிகளுக்கு பிறகு வாயைத் திறந்து மூச்சை வெளியே விட வேண்டும்.
விக்கல் நிற்கவில்லை என்றால், இதே முறையை மீண்டும் தொடர வேண்டும்.
இது மட்டுமின்றி விக்கல் ஏற்படும் போது அதிக குளிர்ச்சியுள்ள குளிர்பானங்களை குடிப்பது, கண் இமைகளுக்கு லேசான அழுத்தம் தருவது மூலம் விக்கலை நிறுத்த முடியும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
 
ஒரு காகிதம் அல்லது பிளாஸ்டிக் பையினுள் சுவாசிப்பது மூலமாக ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவை அதிகரிக்கச் செய்து விக்கலை உண்டாக்கும் தசையை கட்டுப்படுத்தி விக்கலை அடக்க முடியும்.
 
ஆனால் இப்படி செய்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவான அளவில் இருக்கிறது. ஆயினும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் கடுமையான விளைவுகளை உருவாக்கக்கூடும் என்பதால், மருத்துவ கண்காணிப்பின் கீழ் மட்டுமே விக்கலை நிறுத்த இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
ஆனால் இந்த முறையின் மூலம் விக்கலை நிறுத்துவது குறித்து குறைவான சான்றுகளே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
 
விக்கல் வருவது கவலைக்குரியதா?
மனிதர்களுக்கு ஏற்படும் விக்கல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், அது 'தொடர்ச்சியான விக்கல்' என்று அழைக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்தால், அது 'தீர்க்க முடியாத விக்கல்' என்று அழைக்கப்படுகிறது.
 
இந்த இரண்டு வகை விக்கலும், 'நீண்டகால விக்கல்' என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து ஏற்படும் விக்கலால் மன உளைச்சல் ஏற்படுகிறது. இதை சரி செய்ய மருத்துவர்களை அணுக வேண்டியது அவசியம்.
 
நீண்டகால விக்கல் உள்ளவர்கள், தங்களை ஒரு முழுமையான மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த சோதனையின் மூலம் அவர்களுக்கு விக்கலைத் தூண்டும் காரணத்தை கண்டுபிடிக்க முடியும்.
 
வலிப்பு நோயை கட்டுப்படுத்தும் மருந்துகள், மதுபானம், புகைப்பழக்கம், போதை மாத்திரைகள் மூலமாக இது போன்ற நீண்டகால விக்கல் ஏற்படுகின்றன.
 
உங்களுக்கு ஏற்படும் விக்கல் நிற்காமல் இருப்பதற்கான காரணத்தை கண்டறிய, நுரையீரலின் ஸ்கேன் அல்லது தொண்டைக்குழியினுள் எண்டோஸ்கோபி பரிசோதனைகள் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
 
காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றையும் சோதனை செய்ய வேண்டும். இந்த சோதனை மூலமாக உங்கள் காதுகளுக்குள் இருக்கும் கட்டி, தூசி போன்றவற்றால் உணர்வு வளைவுகள் தூண்டப்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும்.
 
விக்கல் காரணமாக முகத்தில் உள்ள தசைகள் பலவீனமடைந்தாலோ, பேச்சு குளறல் இருந்தாலோ, மூளையை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
 
நீண்டகால விக்கலுக்கு என்ன சிகிச்சை?
நீண்டகால விக்கலை தூண்டுவதற்கான காரணத்தை சோதனையின் மூலம் கண்டறிந்த பிறகு, அதை சரிசெய்யும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
நெஞ்செரிச்சல் அல்லது செரிமானக் கோளாறு காரணமாக விக்கல் ஏற்படும் போது, அதை சரி செய்ய தேவையான மருந்துகளை மருத்துவ பரிந்துரையின் அடிப்படையில் எடுத்துக் கொள்ளலாம்.
 
மேலும் தசைகளின் இருக்கத்தை சரி செய்ய உதவும் மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.