'கிம்முடன் ஏன் எந்த உடன்பாட்டையும் எட்டாமல் வெளியேறினேன்?'' - அதிபர் டிரம்ப் விளக்கம்

bbc
Last Modified வியாழன், 28 பிப்ரவரி 2019 (18:17 IST)
வியட்நாமில் நடந்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் - கிம் உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
ஹனோயில் நடந்த உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
 
அணு ஆயுதத்தை முழுமையாக கைவிட வடகொரியா ஒப்புக்கொள்ளுமா என்பதே பேச்சுவார்த்தையின் முக்கிய விஷயமாக இருந்தது.
 
வடகொரியா தன் மீதான பொருளாதார தடையை முழுமையாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை அமெரிக்கா நிராகரித்ததையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உச்சிமாநாடு எந்தவித உடன்பாட்டையும் எட்டாமல் முடிந்தது.
 
உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் கூட்டு உடன்படிக்கைகையில் கையெழுத்திடும் நிகழ்வுக்கும் அதைத் தொடர்ந்து மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் உடன்பாடு எட்டப்படாததையடுத்து இரு தரப்பும் இந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்தன.
 
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அதிபர் டிரம்ப், '' எதாவது உடன்பாட்டு எட்டப்பட்டு கையெழுத்திடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நாங்கள் கிம் ஜாங் உன் உடன் முழு தினத்தையும் செலவிட்டோம். அவர்கள் முழுமையாக பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அதை எங்களால் செய்ய முடியாது.
 
உச்சி மாநாட்டின் முடிவில் நாங்கள் நல்ல நண்பர்களாகியிருக்கிறோம் என நினைக்கிறேன். வடகொரியா நாங்கள் விரும்பிய சில விஷயங்களை செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால் நாங்கள் சொல்லும் இடத்தில் நிறைவேற்றத் தயாராக இல்லை,'' என்றார்.
 
அதாவது வடகொரியா சில இடங்களை அணு ஆயுதமற்ற பகுதியாக்க ஒப்புக்கொள்கிறது. ஆனால் அமெரிக்கா விரும்பும் இடங்களில் அதை நடைமுறைப்படுத்த தயாராக இல்லை.
''வடகொரியா தங்கள் மீதுள்ள தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்று கோரியது. ஆனால் அவர்கள் கோரிக்கையைஏற்க முடியவில்லை. நாங்கள் எதிர்பார்ப்பதை அவர்கள் செய்யத் தயாராக இல்லை. செய்தால், தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம்.
 
அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்கும் வடகொரியாவின் தயார் நிலைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. குறிப்பாக, அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக. முக்கியத்துவம் அல்லாத அம்சங்களில் அவர்கள் சமரசம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
 
ஆனால் அது அமெரிக்காவுக்கு ஏற்புடையது அல்ல. அவர்கள் மீதான தடை அனைத்தும் அமலில் இருக்கின்றன.
 
அதே நேரத்தில், இனி புதிதாக எந்தவித அணு ஆயுத சோதனையும் நடத்த மாட்டோம் என தெரிவித்திருக்கிறார். அந்த வார்த்தையை அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே நேரத்தில், மைக் பேம்பியோ அவர்கள், வடகொரிய அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசுவார்.
 
இன்றைய பேச்சுவார்த்தையின்போது, உடன்படிக்கைக்கான ஆவணங்களை அமெரிக்கா தயாராக வைத்திருந்த போதிலும், இது அதற்கான தருணம் அல்ல என்பதை உணர்ந்திருக்கிறோம்.
 
வடகொரியாவுக்கு பொருளாதார ரீதியாக பெரும் உதவிகளைச் செய்யவும் தயாராக இருக்கிறோம். ஆனால், அமெரிக்காவின் நிலைப்பாட்டை அவர்கள் ஏற்க வேண்டும்.
 
வடகொரியாவுக்கு சீனாவும், ரஷ்யாவும் உதவிகரமாக இருக்கின்றன. குறிப்பாக, 93 சதவீதம் பொருட்கள் சீனாவிலிருந்துதான் வடகொரியாவுக்கு இறக்குமதியாகின்றன.
 
இன்றை பேச்சுவார்த்தையின்போது சீனாவைப் பற்றியும் விரிவாகப் பேசப்பட்டது'' என்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
 
'இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக வடகொரியா நீண்ட தூர இலக்குகளை தாக்கும் வகையிலான ஏவுகணை சோதனை அல்லது அணு ஆயுத சோதனைகள் போன்றவற்றைச் செய்யாது என கிம் உறுதியளித்திருந்தார். நான் இந்த உறவை தக்க வைக்கவே விரும்புகிறேன். வரும் காலங்களில் என்ன நடக்கிறது என பார்ப்போம்,'' என டிரம்ப் கூறியுள்ளார்.
 
வட கொரியா யாங்பியானில் உள்ள அணுஆயுத உலைகளை அகற்ற தயாராக உள்ளதாக கிம் கூறினால். ஆனால் தன் மீதான அனைத்து தடைகளை நீக்க வேண்டும் என்கிறார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் அதற்கு அவர் தயாராக இல்லை என்று கூறினார்.
 
தென் கொரியாதான் வட கொரியா அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அனைத்து முன் முயற்சிகளையும் எடுத்தது.
 
இந்த பேச்சுவார்த்தை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பத்திரிகையாளர்கள் தென் கொரிய அதிபர் மூனுக்கு என்ன பதில் கூறுவீர்கள் என்று வினவினார்கள்.
 
மூனின் ஆட்சிகாலம் விரைவில் முடிய போகிறது. அவர் வட கொரியாவுடனான இணக்கத்திற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்தார். கிம் ஜாங் உன்னுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
 
'அந்த மக்களும் வாழ வேண்டும்'
 
வட கொரியா மீது மேலும் அதிகமான பொருளாதார தடைகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, "ஏற்கனெவே அந்நாட்டின் மீது வலுவான தடைகள் விதிக்கப்பட்டுள்ளது." என்றார் டிரம்ப்.
 
வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அணு ஆயுத நீக்கம் என்பதில் இரு வேறு புரிதல்கள் உள்ளன என்பது தெளிவாகியிருக்கிறது.
 
வடகொரியா தலைவர் கிம்மை பொருத்தவரையில் அணு ஆயுத நீக்கம் என்பதை ஒட்டுமொத்த கொரிய தீபகற்பத்தில் இருந்து ஆணு ஆயுத சக்திகளை அகற்ற வேண்டும் என நினைக்கிறார். அதாவது இந்த பிராந்தியத்தில் அமெரிக்க படைகள் தென் கொரியாவை ஆணு ஆயுத குடையின் கீழ் பாதுகாத்து வருகின்றன. அவை ஒட்டுமொத்தமாக அகற்றப்படவேண்டும் என்கிறார் என பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
ஆனால் டிரம்ப் '' அணு ஆயுத நீக்கம்'' குறித்து தெளிவாக இருக்கிறார்.
 
'பலரும் இது குறித்து என்னவென தெரியாமல் இருக்கிறார்கள் ஆனால் நான் சற்று தெளிவாக இருக்கிறேன் அவர்கள் அணுவாயுதத்தை கைவிட வேண்டும்'' என்கிறார்
பத்திரிகையாளர்கள் சந்திப்பை முடித்த டொனால்ட் டிரம்ப், "நான் எனது விமானத்திற்கு திரும்ப இருக்கிறேன். அங்கிருந்து ஒரு அற்புதமான இடத்திற்கு செல்ல இருக்கிறேன். அந்த இடத்திற்கு வாஷிங்டன் டி.சி என்று பெயர்" என கூறினார்.
 
நேற்று நடந்தது என்ன?
 
புதன்கிழமை நடந்த சந்திப்பில் செய்தியாளர்கள் சுருக்கமான கேள்விகள் கேட்கவே அனுமதிக்கப்பட்டனர். மேலும் இரு நாட்டு தலைவர்களும் தனியாக சந்தித்து பேசினார்கள்.
நேற்று இரவு விருந்தில் இரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது அமெரிக்க பாதுகாப்பு செயலர் மைக் பாம்பியோ மற்றும் கிம்மின் மூத்த ராஜிய தூதுவர் கிம் யாங் - சோல் உடனிருந்தனர்.
 
கிம்முடனான சந்திப்புக்கு பிறகு டிரம்ப் தனது ட்வீட்டில் ''வியட்நாமில் வடகொரியாவின் கிம் ஜாங் உன் உடனுனான இரவு விருந்தும் சந்திப்பும் அருமையாக இருந்தன . பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெற்றது'' என தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக, புதன்கிழமை சந்திப்பின்போது, கொரிய போர் முறைப்படி அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, '' பார்க்கலாம்...'' என்றார் டிரம்ப்.
 

 

இதில் மேலும் படிக்கவும் :