1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 12 ஏப்ரல் 2021 (07:34 IST)

இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்?

எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்குக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 
இந்த அரச குடும்பத்து இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில், வரும் ஏப்ரல் 17-ம் தேதி சனிக்கிழமை, பிரிட்டன் நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த இறுதி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படவிருக்கின்றன.
 
இறுதிச் சடங்குகள் எங்கு நடைபெறும்?
ஆடம்பரமற்ற எளிமையான இறுதி நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுமாறு இளவரசர் ஃபிலிப் கேட்டுக் கொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு அவரது உடல் இருக்கும் சவப் பெட்டியை, பொது வெளியில் மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் வைக்கப்படப் போவதில்லை.
 
அதற்கு பதிலாக, இளவரசர் ஃபிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை, வின்சர் கோட்டையில் இருக்கும் தனி தேவாலயத்தில் வைக்கப்படவிருக்கிறது.
 
இளவரசரின் உடல் இருக்கும் சவப் பெட்டியின் மீது, அவரது கொடிகள் போர்த்தப்பட்டிருக்கின்றன. அக்கொடி அவரது வாழ்கைக் கூறுகளைப் பிரதிபலிக்கிறது. அவர் கிரேக்க பாரம்பரியம் முதல் பிடிட்டிஷ் பாரம்பரியத்து அரச பட்டங்களைப் பெற்றது வரை இருக்கின்றன. அச்சவப் பெட்டி மீது பூங்கொத்துகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.
 
இளவரசர் ஃபிலிப், அப்போதைய இளவரசி எலிசபெத்தை 1946-ம் ஆண்டு நிச்சயம் செய்து கொண்ட போது, தன் கிரேக்க அரச பட்டங்களைத் துறந்து, தன் தாயின் ஆங்கிலமயமாக்கப்பட்ட பெயரான மவுன்ட் பேட்டன் என்கிற பெயரை ஏற்று கொண்டு பிரிட்டன் குடிமகனானார்.
 
இறுதிச் சடங்கு நாளில் என்ன ஆகும்?
 
இளவரசர் ஃபிலிப்புக்கான இறுதி நிகழ்ச்சி அரசு முறை நிகழ்வாக இல்லாமல், சடங்குகளாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு மெல்லிய வேறுபாடு உள்ளது. அரசு மரியாதையுடனான இறுதிச் சடங்குகள் மன்னர்களுக்கு மட்டுமே உரித்தானது. இருப்பினும், போர்காலத்தில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அரச மரியாதை உடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதாலும், இறுதி நிகழ்வில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதாலும், இளவரசரின் இறுதிச் சடங்குகள் அதிக ஆராவாரமின்றி நடக்கும். அது கோமகன் ஃபிலிப்பின் விருப்பம் எனக் கூறுகிறது பிரிட்டன் அரண்மனை. இருப்பினும் அவரது வாழ்கை சேவையை அரண்மனை கொண்டாடும் எனவும் கூறியுள்ளது.
 
இறுதிச் சடங்கு நடக்கும் நாளன்று, வின்சர் கோட்டையின் தனி தேவாலயத்தில் இருக்கும் இளவரசர் ஃபிலிப்பின் சவப் பெட்டி, வின்சர் கோட்டையின் 'ஸ்டேட் என்ட்ரன்ஸ்' என்றழைக்கப்படும் நுழைவாயிலில் வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அச்சவப் பெட்டி, மாற்றியமைக்கப்பட்ட லேண்ட் ரோவர் காரில் வைக்கப்படும். அந்த காரை வடிவமைக்க இளவரசரே உதவினார்.
 
கிரனடியர் கார்ட்ஸ் என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு பிரிவினரின் பேண்ட் வாத்தியங்கள் அணி வகுப்பு எட்டு நிமிடங்கள் நடைபெறும். ராயல் மரின்ஸ் மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தின் மற்ற படைப் பிரிவினரைச் சேர்ந்தவர்கள் இளவரசரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் சவப் பெட்டியைச் சுமக்கவிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாகனத்துடன் செல்வார்கள்.
 
பிரிட்டன் ராணுவத்தினர் வழி நெடுகிலும் காவலுக்கு நிற்பர். வேல்ஸ் இளவரசர் உட்பட அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் கோமகன் ஃபிலிப்பின் சவப் பெட்டிக்குப் பின் நடந்து செல்வர்.
 
அரசி தேவாலய சேவைக்காக தனியே செல்வார். இந்த ஊர்வலத்தின் போது ராணுவ துப்பாக்கிகள் முழங்கும். ஊரடங்கு மணி அடிக்கப்படும்.
 
தேவாலயத்தின் மேற்குப் பகுதி படிக்கட்டில், இளவரசர் ஃபிலிப்பின் உடல் இருக்கும் சவப் பெட்டியை, மரியாதை செலுத்தும் வீரர்கள் மற்றும் 'ரைஃபில்' என்கிற பிரிட்டனின் ராணுவப் பிரிவனரின் வாத்தியக் குழுவினர் பெற்றுக் கொள்வார்கள். ஹார்ஷோ க்ளாய்ஸ்டரில் இளவரசரின் சவப் பெட்டி நுழையும் போது தேசிய கீதம் வாசிக்கப்படும்.
 
தேவாலயத்தின் மேற்குப் படிக்கட்டிலிருந்து, எட்டு பேர் இளவரசரின் சவப் பெட்டியை எடுத்துச் செல்வர். அச்சவப் பெட்டியின் மீது கோமகனின் கொடி, இளவரசரின் கப்பற்படை தொப்பி மற்றும் வாள் எடுத்துச் செல்லப்படும்.
 
வின்சரின் மதகுரு மற்றும் கண்டர்பரியின் பேராயர், இளவரசர் ஃபிலிப்பின் சவப்பெட்டியை வரவேற்பர். தேவாலயத்தில் சேவைகள் தொடங்கப்படுவதற்கு முன், பிரிட்டன் நேரப்படி அன்று மாலை 15.00 மணியளவில், நாடு முழுக்க ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்படும்.
 
தேவாலய சேவைக்குப் பிறகு, எடின்பரோவின் கோமகன் ஃபிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
 
யார் எல்லாம் இந்த இறுதி நிகழ்வில் பங்கெடுப்பர்?
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் விதிமுறைகளின்படி, 30 பேர் மட்டுமே சமூக இடைவெளியோடு இறுதி ஊர்வலத்தில் பங்கெடுக்கலாம். இந்த 30 பேர் எண்ணிக்கையில் சவப் பெட்டியைச் சுமந்து வருபவர்கள் மற்றும் மதகுருமார்கள் கிடையாது.
 
யார் எல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது யார் எல்லாம் இறுதி நிகழ்வில் பங்கெடுக்கவிருக்கிறார்கள் என்கிற விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
 
இளவரசர் ஹாரி இந்த இறுதி நிகழ்வில் பங்கெடுக்கவிருக்கிறார். ஆனால் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ளப்போவதில்லை. கடந்த ஆண்டு மூத்த அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிய பின், சஸ்ஸெக்ஸின் கோமகன் மற்றும் சீமாட்டி இருவரும் பிரிட்டனுக்குத் திரும்பி வரவில்லை. அவர்கள் அமெரிக்காவிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.
 
ஆயிரக் கணக்கான மக்கள் லண்டன் மற்றும் வின்சரில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலரோ இளவரசருக்கான இறுதி ஊர்வல ராணுவ மரியாதையைக் காண சரியான இடத்தைக் கண்டுபிடிக்க வெளியே முகாமிட்டு இருக்கிறார்கள்.
 
நூற்றுக் கணக்கான பாதுகாப்புப் படை வீரர்கள், இளவரசரை கெளரவிக்கும் விதத்தில் சாலையில் அணிவகுத்து நிற்பார்கள். அவர்களோடு ஆயிரக்கணக்கான காவல் அதிகாரிகளும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த உடன் இருப்பார்கள்.
 
கொரோனா பெருந்தொற்று வந்ததிலிருந்து, இளவரசர் இறந்துவிட்டால் கூட்டம் அதிகமாகக் கூடிவிடக்கூடாது என, அவசரகால திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் நிர்வாகிகள்.
 
அடுத்து என்ன?
தற்போது பிரிட்டன் தேசிய துக்க காலத்தில் இருக்கிறது. இந்த துக்க காலம் இளவரசர் நல்லடக்கம் செய்யப்படும் வரை தொடரும்.
 
அதுவரை பிரிட்டனின் அரசுக் கட்டடங்களில் இருக்கும் பிரிட்டனின் யூனியன் ஜாக் என்றழைக்கப்படும் கொடி மற்றும் ஐக்கிய ராஜ்யத்தில் அங்கமாக உள்ள நாடுகளின் தேசியக் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசி வசிக்காத இடங்கள் தவிர மற்ற அரசு கட்டடங்களில் இருக்கும் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்.
 
இறையாண்மை மற்றும் முடியாட்சியின் தொடர்ச்சியைக் குறிக்கும் 'தி ராயல் ஸ்டாண்டர்ட்' என்று அழைக்கப்படும் கொடி, எப்போதும் அரை கம்பத்தில் பறக்காது. அரசி இருக்கும் இடத்தில் அது முழு கம்பத்தில்தான் பறக்கும். அரச குடும்பத்தினர், இளவரசர் ஃபிலிப்பின் மரணத்துக்காக இரண்டு வார காலத்தை துக்க நாளாக அனுசரிப்பார்கள். ஆனால் தங்களின் அன்றாட பணிகளை மேற்கொள்வர், தேவையான இடங்களில் கோமகன் ஃபிலிப் காலமான துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக கருப்புப் பட்டையை அணிந்து கொள்வர்.
 
நேற்று (ஏப்ரல் 10, சனிக்கிழமை) மதியம் பிரிட்டன் மற்றும் கிப்ரால்டர் பகுதியில், இளவரசருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் ராணுவ துப்பாக்கிகள் முழங்கின. எடின்பரோ, கார்டிஃப், லண்டன், வடக்கு அயர்லாந்தில் இருக்கும் ஹில்பரோ கோட்டை போன்ற பல பகுதிகள் மற்றும் டெவோன்போர்ட் மற்றும் போர்ட்ஸ்மவுத் போன்ற கப்பற்படைத் தளங்களிலும் நிமிடத்துக்கு ஒரு முறை என 40 நிமிடங்களில் 41 முறை சுடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
 
கடலில் இருக்கும் பிரிட்டனின் ராயல் நேவியின் படகுகளான ஹெச்.எம்.எஸ் டைமண்ட் மற்றும் ஹெச்.எம்.எஸ் மான்ட்ரோஸ் ஆகியவையும் குண்டுகளை ஏவி மரியாதை செலுத்தின. எடின்பரோவின் கோமகன் இரண்டாம் உலகப் போரின் போது கப்பற்படையில் பணியாற்றியவர், லார்ட் ஆஃப் ஹை அட்மிரல் என்கிற பதவியையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளில், அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தேர்தலுக்கான பிரசார கூட்டங்களை முக்கிய கட்சிகள் மரியாதை கருதி ரத்து செய்துள்ளன. ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் என்றழைக்கப்படும் பிரிட்டனின் நாடாளுமன்ற அவை, நாளை (ஏப்ரல் 12, திங்கட்கிழமை) கூடி மறைந்த கோமகன் ஃபிலிப்புக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
 
மக்கள் எப்படி அஞ்சலி செலுத்த முடியும்?
பொது சுகாதார அறிவுரைகளைக் கருத்தில் கொண்டு, இறுதிச் சடங்கின் எந்த ஒரு நிகழ்சியிலும் பொது மக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
 
அதே போல அரண்மனைக்கு வெளியே மக்கள் மலர் கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டாம் எனவும் அரச குடும்பத்தினர் மக்களிடம் அன்புக் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
பூங்கொத்துகளை வைப்பதற்கு பதிலாக, கோமகனின் நினைவாக அறக்கட்டளை பணிகளுக்கு நன்கொடை அளிக்குமாறு அரச குடும்பம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இரங்கல் தெரிவிக்க வசதியாக, அரச குடும்பத்து இணையதள பக்கத்தில் இரங்கல் பதிவிடும் வகையில் இணைய பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
 
அரச குடும்பத்தின் கோரிக்கைக்குப் பிறகும், மக்கள் அரண்மனைக்கு வெளியிலும், வின்சர் கோட்டைப் பகுதியிலும், மலர்கள் மற்றும் கடிதங்களை விட்டுச் சென்றிருக்கின்றனர்.