1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 13 ஜூன் 2019 (21:27 IST)

சந்திரயான் 2 திட்டம் சாதிக்கப்போவது என்ன?

விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் அடுத்த மாதம் 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திராயன் 2 விண்கலம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். அதாவது, தரையிறங்குவதற்காக உள்ள ஒரு கலனையும் (லேண்டர்), சுற்றுவட்டப்பாதையிலிருந்து ஆய்வு செய்வதற்காக செயற்கைகோள் போன்ற ஒரு கலனையும் (ஆர்பிட்டர்), நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காக ஒரு வாகனத்தையும் (ரோவர்) கொண்டுள்ளது.
 
மேற்குறிப்பிட்ட மூன்று பகுதிகளும், நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்குரிய ஆய்வு கருவிகளை தனித்தனியே கொண்டிருக்குக்கும். அவற்றை பயன்படுத்தி, நிலவின் தண்ணீர், தாதுக்கள் இருப்பு போன்றவை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்.
 
சந்திரயான் 2 விண்கலமானது, ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஜூலை மாதம் 15ஆம் தேதி அதிகாலை 02:51 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதாவது, ரோவர் பகுதி லேண்டர் பகுதிககுள்ளும், லேண்டர் ஆர்பிட்டுக்கு மேற்பகுதியிலும் வைக்கப்பட்டு ராக்கெட்டுக்குள் நிலைநிறுத்தப்படும்.
 
ஜூலை 15ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கும் சந்திராயன் 2 விண்கலம், சுமார் 45 நாட்கள் பயணித்து, செப்டம்பர் மாதம் 6 அல்லது 7ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்திலுள்ள இரண்டு மிகப் பெரிய பாறைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் விண்கலத்தை தரையிறுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
தென்துருவத்தின் முக்கியத்துவம்
 
"தடையற்ற தொலைத்தொடர்பு, கற்பாறைகள் அற்ற நிலப்பரப்பு, சூரிய மின்கலன் மூலம் விண்கலத்தை இயக்குவதற்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வசதி ஆகிய காரணங்களினால்தான் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் தரையிறக்க முடிவுசெய்துள்ளோம்" என்று பிபிசியிடம் பேசிய இஸ்ரோவின் தலைவர் சிவன் கூறினார்.
 
நிலவில் மனிதர்களின் குடியிருப்புக்கு சாத்தியமான இடங்களில் ஒன்றாக தென்துருவம் கருதப்படுகிறது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரேல் முதல் முறையாக விண்ணுக்கு அனுப்பிய பேரேஷீட் விண்கலம் இதே பகுதியில் தரையிறங்கும்போதுதான் விபத்தில் சிக்கியது. இருந்தபோதிலும், நிலவின் வேறுபட்ட பகுதிகளில் விண்கலங்களை தரையிறுக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டிய அவசியம் உள்ளதாக இஸ்ரோ கூறுகிறது.
 
விண்ணில் செலுத்தப்பட்டதும் என்ன நடக்கும்?
 
ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட 15 நிமிடங்களில், சந்திரயான் 2 விண்கலம் சுற்றுவட்டபாதையில் வலம் வர ஆரம்பிக்கும். பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்ததும், சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதியிலிருந்து லேண்டர் தனியே பிரிந்து தென்துருவத்தில் தரையிறங்கும்.
 
ஆர்பிட்டரிலிருந்து தனியே பிரியும்போது, நொடிக்கு 100 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் லேண்டர் அடுத்த 15 நிமிடங்களில் தனது வேகத்தை நொடிக்கு 30 கி.மீ. வேகத்துக்கு குறைப்பதே இஸ்ரோ இதுவரை கையாண்டதிலேயே மிகவும் சவாலான காரியமாக இருக்கும் என்று கூறுகிறார் சிவன்.
 
மெதுவாக தரையிறங்கிய பிறகு, ரோவர் ஒரு நொடிக்கும் ஒரு சென்டிமீட்டர் வேகத்தில் நகர்ந்து நிலவின் பரப்பை ஆய்வு செய்யத் தொடங்கும்.
 
ஆனால், இந்த ரோவர் வாகனம் தனது ஆயுட்காலத்தில் மொத்தமாக 500 மீட்டருக்கு மேலாக நகராது என்பது குறிப்பிடத்தக்கது.
 
என்னென்ன ஆய்வுகளை மேற்கொள்ளும்?
 
நிலவிலுள்ள தாதுக்கள் குறித்த ஆராய்ச்சியை ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளும், லேண்டரிலுள்ள கருவிகள் நிலவில் ஏற்படக்கூடிய அதிர்வுகள் குறித்தும் ஆய்வுகளையும் மேற்கொள்ளும்.
 
அதே சூழ்நிலையில், ஆர்பிட்டர் கலன் நிலவின் சுற்றுவட்ட பாதையை அதன் வேகத்திலேயே சுற்றிக்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும்.
 
செலவு எவ்வளவு?
சந்திரயான் 2 திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக 603 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், மொத்த திட்ட செலவில் 80 சதவீதத்தை நாட்டின் தனியார் நிறுவனங்கள் பூர்த்தி செய்துள்ளன.
 
ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை வடிவமைப்பதற்காக மொத்தம் 375 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இதிலும் 60 சதவீத தொகையை 120 தனியார் நிறுவனங்கள் பங்களித்துள்ளன.
 
"நிலவில் மனிதன் வாழ முடியுமா என்பது குறித்து உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு இந்த சந்திரயான் 2 திட்டம் முன்மாதிரியாக விளங்கும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் சிவன்.
 
இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள், புயல்களிலிருந்து லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கும், கிராமப்புற இந்தியாவிற்கான பிராட்பேண்ட் இணைப்பைக் கொண்டுவருவதற்கும் உதவியதை போன்று, நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் 2 திட்டமும் மனிதகுலத்திற்கு உதவும் விடயங்களை வெளிக்கொணரும் என்று எதிர்பார்க்கலாம்.