1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (17:16 IST)

பெலாரூஸ் நாட்டில் என்ன நடக்கிறது? அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்

பெலாரூஸ் நாடு பெரிய போராட்டங்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. நீண்டகாலம் அதிபராக இருந்து வந்த அலெக்ஸாண்டர் லூகஷென்கோவுக்கு ஆதரவாக தேர்தலில் தில்லுமுல்லு வேலைகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்ததால் அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.

பெலாரூஸ் நாட்டில் எதிர்கட்சிகளின் பேரணிகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
 
ஆகஸ்ட் 16 ஆம் தேதி, மின்ஸ்க் நகரின் மத்தியில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். லூகஷென்கோவுக்கு  ஆதரவான பேரணியில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் கலந்து கொண்டனர்.
 
போராட்டங்கள் குறித்து ஊடக செய்திகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக ஆயிரக்கணக்கானோர் கூறுகின்றனர்.
 
பின்னணி என்ன?
 
ஐரோப்பாவில் நீண்டகாலம் ஆட்சி செய்து வருபவராக அதன் அதிபர் லூகஷென்கோ இருந்து வருகிறார். கடந்த 26 ஆண்டுகளாக அவர் அதிபராக இருந்து வருகிறார்.  1991ல் சோவியத் யூனியன் பிளவுபட்டபோது ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து 1994ல் இவர் பதவிக்கு வந்தார்.
 
ஐரோப்பாவின் ``கடைசி சர்வாதிகாரி'' என வருணிக்கப்படும் இவர், சோவியத் கம்யூனிஸ சித்தாந்த அம்சங்களை அமல்படுத்த முயற்சித்து வருகிறார். உற்பத்தித்  துறையின் பெரும்பகுதி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
 
முக்கியமான தொலைக்காட்சி சேனல்கள், அரசுக்கு விசுவாசமானவையாக உள்ளன. சக்திவாய்ந்த ரகசிய காவல் துறையின் பெயரும் கூட, இன்னமும் கே.ஜி.பி  என்றே குறிப்பிடப்படுகிறது.
 
அதேசமயத்தில் தன்னை கண்டிப்பான தேசியவாதியாக காட்டிக் கொள்வதற்கும் லூகஷென்கோ முயற்சித்து வருகிறார். அன்னிய சக்திகளின் தாக்கங்களால் பாதிப்பு  ஏற்படாமல் பாதுகாத்து, ஸ்திரத்தன்மையை உறுதி செய்பவராக இருக்கிறார்.
 
அவருடைய ஆட்சியில் நடைபெற்ற தேர்தல்கள் நியாயமான மற்றும் நேர்மையான முறையில் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இந்தக்  காரணங்களால் அவருக்கு இதுவரையில் வலுவான அடிமட்ட ஆதரவு இருக்கிறது.
 
ஆனால் அவரைப் பற்றிய எண்ணங்கள் சமீப காலத்தில் மாறிவிட்டன. பரவலான ஊழல், வறுமை, வாய்ப்புகள் மறுப்பு, குறைவான ஊதியம் என்று பல புகார்களை  மக்கள் எழுப்பியுள்ளதால், மக்களின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சியினர் கருதுகின்றனர்.
 
கொரோனா வைரஸ் தாக்குதலால் இது மேலும் தீவிரமாகியுள்ளது.
 
பெலாரூஸ் : அடிப்படை விஷயங்கள்
 
பெலாரூஸ், அதன் முந்தைய எஜமான நாடாக ரஷியாவுக்கு கிழக்குப் பகுதியிலும், தெற்கில் யுக்ரேன் நாட்டையும் கொண்டிருக்கிறது. வடக்கு மற்றும் மேற்கில்  லாட்வியா, லிதுவேனியா மற்றும் போலந்து என்ற ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ நாடுகள் உள்ளன.
 
பிரச்னைக்குரிய விஷயம் என்ன?
 
9.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாடு, யுக்ரேனைப் போல மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷியாவுக்கு இடையிலான பகையில் சிக்கிக்  கொண்டுள்ளது.
 
ரஷியாவுடன் தோழமை கொண்டிருக்கும் அதிபர் லூகஷென்கோ, ``ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி'' என்று அழைக்கப்படுகிறார்.
 
கடந்த 26 ஆண்டுகளாக அவர் ஆட்சியில் இருக்கிறார். பொருளாதாரத்தின் பெரும் பகுதி அரசின் வசம் தான் இருக்கிறது. எதிர்ப்பாளர்கள் மீது தணிக்கை முறை  மற்றும் காவல் துறை அடக்குமுறைகளை கட்டவிழ்த்து வருகிறார்.
 
அங்கே என்ன நடக்கிறது? புதிய ஜனநாயகத் தலைமை மற்றும் பொருளாதார சீர்திருத்தம் கோரி அங்கே பெரிய அளவில் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி  வருகின்றன. ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடந்த தேர்தலில், லூகஷென்கோ முறைகேடு செய்திருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
 
ஆனால், அவர் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய கண்டிப்பான செயல்பாடு காரணமாகத்தான் நாடு  ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
 
வைரஸ் பற்றி திரு லூகஷென்கோ கூறிய கருத்துகள் அலட்சியமானவை என்றும், உலக நடப்புகளில் அவருக்கு தொடர்பு விட்டுப் போய்விட்டது என்றும் எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். வோட்கா அருந்துதல், நீராவிக் குளியல், கடின உழைப்பின் மூலம் வைரஸ் நெருங்காமல் விரட்டலாம் என அவர் கூறியதை  எதிர்கட்சிகள் குறிப்பிடுகின்றன.
 
அதிபர் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சியினர் மீது அடக்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சிறையில் தள்ளப்பட்டனர்.  இன்னொருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றார். அந்த இயக்கங்களில் நெருக்கமாக செயல்பட்ட 3 பெண்மணிகளின் வலிமையான கூட்டணி இதனால் உருவானது.
 
தேர்தலில் என்ன நடந்தது?
 
வேட்பாளராகப் பதிவு செய்திருந்த தன் கணவர் செர்கே டிகானோவ்ஸ்கி கைது செய்யப்பட்டதால், ஸ்வெட்லனா திகனோவ்ஸ்கியா வேட்பாளராக மாறினார்.
 
37 வயதான ஆங்கில ஆசிரியையான அவரும், இரண்டு தோழமை கட்சியினரும் நாடு முழுக்கப் பயணம் செய்தனர். அரசியல் மாற்றம் இல்லாததால் கொதித்துப்  போயிருக்கும் மக்கள் ஏராளமாக திரண்டு இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
 
முறைகேடுகள் நடக்கும் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்த சூழ்நிலையில் வாக்குப் பதிவு நடந்தது. சுதந்திரமான பார்வையாளர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்காததால் இந்த அச்சம் அதிகரித்தது. பல முறைகேடுகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. உள்நாட்டில் பல நாட்களுக்கு தடை உத்தரவுகள் அமல்  செய்யப்பட்டிருந்தன.
 
எதிர்க்கட்சிகளை "எலிகள்" என்று அலெக்ஸாண்டர் லூகஷென்கோ குறிப்பிட்டுள்ளார்.
 
வாக்குப் பதிவு முடிந்த பிறகு, வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. மறுநாள் வாக்கு எண்ணிக்கை முடிந்தபோது  அதிபருக்கு ஆதரவாக 80 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. கருத்துக் கணிப்பிலும் இதே முடிவுதான் தெரிவிக்கப்பட்டிருந்தது. திகனோவ்ஸ்கியாவுக்கு 10 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்திருப்பதாகவும் முடிவு அறிவிக்கப்பட்டது.
 
அந்த முடிவுகளுக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். வாக்கு எண்ணிக்கை சரியாக நடந்திருந்தால், தங்களுக்கு 60 முதல் 70 சதவீதம் வரையில் வாக்குகள்  கிடைத்திருக்கும் என்று பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் கூறுகிறார்.
 
தேர்தல் முடிவில் தில்லுமுல்லு நடந்திருப்பதாக வெளியில் வேகமாகத் தகவல் பரவியது. இதனால் நம்பிக்கையின்மையும் கோபமும் ஏற்பட்டது.
 
வாக்குப்பதிவு நடந்த நாளன்று இரவு மின்ஸ்க் நகரிலும் மற்ற இடங்களிலும் நடந்த வன்முறைகளில் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர். காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர், ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர் மற்றும் பேரொலி எழுப்பும் வெடிகுண்டுகளை வீசினர். கூட்டத்தைக் கலைப்பதற்கு பெலாரூஸில்  இதற்கு முன்பு இப்படி நடந்தது கிடையாது.
 
அடுத்த நாள்களில் இரவில் நடந்த வன்முறைகளில் நாடு முழுக்க 3,700 பேர் கைது செய்யப்பட்டனர். அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர் ஒருவர்,  தனது சீருடைகளை தூக்கி வீசிவிட்டார்.
 
தேர்தல் முடிந்த மறுநாள் மதியம், தேர்தல் முடிவுகள் பொய்யானவை என்று தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கூற திகனோவ்ஸ்கியா முயற்சி செய்தார். அவர் ஏழு  மணி நேரம் காவலில் வைக்கப்பட்டு, கட்டாயமாக லிதுவேனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தனது பிள்ளைகளை ஏற்கெனவே அங்கு தான் அவர்  அனுப்பியிருந்தார்.
 
தனது ஆதரவாளர்களுக்கு காணொளி மூலம் அளித்துள்ள செய்தியில், தனது பலத்தை அபரிமிதமாக கணக்கிட்டுவிட்டதாகவும், குழந்தைகளின் நலனுக்காக நாட்டை  விட்டு வெளியேறியதாகவும் அவர் உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
 
தஞ்சம் புகுந்த நாட்டில் ஸிவெட்லனா டிகனோவ்ஸ்கயா உரை
 
பின்னர் அதிகார மாற்றத்துக்கு ``ஒத்துழைப்புக் கவுன்சில்'' உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்வைத்தார். ``மக்கள் இயக்கப் பிரதிநிதிகள், பெலாரூஸ்  நாட்டில் மதிப்புக்கு உரியவர்கள், தொழில்முறையாளர்கள்'' இதில் இடம் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.
 
தேர்தல் நடக்கும் வரையில் பெலாரூஸ் நாட்டை வழிநடத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி லிதுவேனியாவில் இருந்து ஆற்றிய  உரையில் அவர் கூறினார். பாதுகாப்புப் படையினர் தங்களின் லூகஷென்கோ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

போராட்டங்கள் எப்படி உருவாயின?
 
தேர்தலுக்குப் பிறகு நடந்த மோதல்களில், காவல் துறையினர் கொடூரமாக நடந்து கொண்டது பற்றியும், கைதானவர்களை கடுமையாகத் தாக்கியது பற்றியும்,  ஏற்கெனவே நெரிசலாக உள்ள சிறைகளில் அவர்களை கட்டாயமாக அடைத்தது பற்றியும் தகவல்கள் பரவின.
 
விடுதலையான பலரும் தங்களுடைய காயங்களை படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு, தங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகக் கூறியிருந்தனர்.
 
இதனால் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய விவரங்களை அறிய அவர்களுடைய நண்பர்களும், உறவினர்களும் தடுப்புக்  காவல் மையங்கள் எதிரே குவிந்தனர். பெண்கள் வெள்ளை உடை அணிந்து ரோஜா பூக்களை ஏந்தி கைகளை கோர்த்தபடி சாலைகளில் நடந்து சென்றனர்.
 
அரசுக்குச் சொந்தமான ஒரு பெரிய நிறுவனத்தில், தேர்தல் முறைகேடு பற்றியும், கைதானவர்களின் நிலை பற்றியும் தொழிலாளர்கள் தங்கள் மேலாளர்கள் மற்றும்  உள்ளூர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். சில இடங்களில் வேலைநிறுத்தம் அறிவித்து, தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
 
ஆகஸ்ட் 17 ஆம் தேதி அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சியின் ஊழியர் அங்கிருந்து வெளியேறி லூகாஷென்கோ மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதை  எதிர்த்து, போராட்டத்தில் கலந்து கொண்டார். முன்னதாக உயர் பதவிகளில் இருந்த பலர் ராஜிநாமா செய்தனர். அதற்கு முன்பு தேர்தல் மற்றும் போராட்டங்கள்  குறித்த விஷயங்களில் அரசின் நிலைப்பாட்டை தொலைக்காட்சி சேனல் பின்பற்றியது.
 
டிராக்டர் உற்பத்தி தொழிற்சாலைக்கு திரு. லுகாஷென்கோ சென்றபோது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அவரை முற்றுகையிட்டனர். தற்போதைய  காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல அதிகாரிகள் ராஜிநாமா செய்துவிட்டனர். ஸ்லோவேகியாவிற்கான பெலாரூஸ் தூதர் இகோர் லெஷ்சென்யா,  போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
பெலாரூஸ் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் டைரக்டர் தனது பழைய காவல் துறை சீருடையை குப்பையில் வீசிவிட்டார். சர்வதேச கால்பந்து வீரர் இல்யா  ஷ்குரின், அதிபர் லூகஷென்கோ பதவி இறங்கும் வரையில், தனது நாட்டுக்காக விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
 
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.