வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2022 (22:49 IST)

இந்தியர்கள் சிலர் தாயகத்தை விட்டு வெகு தூரம் செல்ல என்ன காரணம்?

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பழமைவாத கொள்கைகள் கொண்ட பகுதியில் வாழும் தன்பாலின ஈர்ப்பாளரான ஜஷன் ப்ரீத் சிங்கின் வாழ்க்கை நீண்ட காலமாக கடினமாக இருந்தது.

 
34 வயதான சிங், பல ஆண்டுகளாக, தமது சொந்த ஊரான ஜலந்தரில் தினமும் பாகுபாடுகளை சந்தித்தார். அவரது அண்டை வீட்டார் அவரை தினமும் இழிவுப்படுத்தினர், அடித்தனர். மேலும் அவரது குடும்பம் அவரை முற்றிலும் புறக்கணித்தது. ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது முற்றிலும் வேறாக இருந்தது.

 
கலிஃபோர்னியாவின் ஃப்ரெஸ்னோவில் இருந்து பிபிசியிடம் பேசிய அவர், "15 அல்லது 20 பேர் என்னைக் கொல்ல முயன்றனர். நான் அங்கிருந்து ஓடி என் உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன். ஆனால் அவர்கள் என் உடலில் பல பாகங்களை வெட்டினர்," என்று கூறினார்.

 
அந்த தாக்குதலில், அவரது ஒரு கை சிதைந்து விட்டது. கட்டை விரல் வெட்டப்பட்டது.
 
அவர் அங்கிருந்து தப்பி ஓடிய பின், துருக்கி மற்றும் பிரான்ஸ் வழியாக செல்லும் பயணத்தில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இறுதியில், அது அவரை கிட்டத்தட்ட 12,800 கி.மீ தொலைவில் உள்ள அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு அழைத்துச் சென்றது. அங்கிருந்து அவர் அமெரிக்காவில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக கலிஃபோர்னியாவுக்குச் சென்றார்.
 
இது அவருடைய கதை மட்டுமல்ல. பல ஆண்டுகளாக, அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் வருகை மெதுவாக இருந்தாலும், தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வோர் மாதமும் பலரும் அல்லது நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
 
ஆனால், இந்த ஆண்டு இந்த புள்ளிவிவரங்கள் அதிகரித்துள்ளன.
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், மெக்சிகோ எல்லையில் 16 ஆயிரத்து 290 இந்திய குடிமக்கள் அமெரிக்க காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன் 2018ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 8,997 என் அதிகபட்சமாக பதிவானது. இதற்கு காரணங்களாக வல்லுநர்கள் பல விஷயங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.

 
இந்தியாவில் நிலவும் பாகுபாடான சூழல், தொற்றுநோய் காலக் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தது, புகலிடம் தேடி வருபவர்களை வரவேற்கும் தற்போதைய அமெரிக்க நிர்வாகம், முன்னதாக கடத்தல் பின்னணியில் இருந்தவர்கள் அதிகரித்து இருப்பது ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன.
 
 
சில புலம்பெயர்ந்தோர் பொருளாதார காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு வருகிறார்கள் என்றாலும், பலரும் சொந்த ஊரில் தாம் சந்திக்கும் துன்புறுத்தலிருந்து தப்பி வருகின்றனர் என்று டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியாவில் இந்திய குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குடியேற்ற வழக்கறிஞர் தீபக் அலுவாலியா கூறினார்.

 
சொந்த ஊரில் இருந்து துன்புறுத்தல் காரணமாக வருபவர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பின் தங்கிய நிலையில் உள்ள இந்துக்கள்முதல் தீவிர இந்து தேசியவாதிகள் அல்லது பிரிவினைவாத இயக்கங்களின் ஆதரவாளர்களுக்கு அஞ்சும் எல்.ஜி.பி.டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், கடந்த 2020ம் ஆண்டு முதல் நடக்கும் போராட்டங்களால் பஞ்சாப் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆகியோர் உள்ளனர்.

 
இந்த குழுக்களில் பலவற்றின் நிலை சமீபத்திய ஆண்டுகளில் மோசமடைந்துள்ளன என்று சர்வதேச பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
 
 
சிங்கைப் பொருத்தவரை, தமது நாட்டை விட்டு வெளியேறுவது எளிதான முடிவு அல்ல. அவர் முதலில் இந்தியாவில் உள்ள வேறொரு நகரத்துக்கு தான் செல்ல நினைத்தார். ஆனால் அவர் அங்கும் மோசமாக நடத்தப்படுவார் என்று பயந்தார்.
 
 
"தன்பாலின ஈர்ப்பாளர்களை ஏற்றுகொள்ளும் நிலை அங்கு இல்லை. அங்கே தன்பாலின ஈர்ப்பாளராக இருப்பது ஒரு பெரிய பிரச்னை," என்று அவர் கூறுகிறார்.

 
இந்தியா 2018ஆம் ஆண்டில்தான் தன்பாலின சேர்க்கை குற்றமற்றத்தாக அறிவிக்கப்பட்டது. தன்பாலின திருமணம் இன்னும் இந்தியாவில் சட்டத்துக்கு புறம்பானது.

 
அவரது சகோதரர் மூலம் அவருக்கு இந்தியாவைத் தளமாகக் கொண்ட 'டிராவல் ஏஜென்சி' தொடர்பு கிடைத்தது. இது ஓர் அதிநவீன, விலையுயர்ந்த கடத்தல் நெட்வோர்க்கின் ஒரு பகுதியாகும்.அது அவரை முதலில் துருக்கிக்கு அழைத்துச் சென்றது. அங்கு அவருக்கு வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. பின்னர் பிரான்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் சிறிது காலம் தங்கியிருந்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த முழு பயணமும் அவருக்கு ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்தது.
 
 
இறுதியில், அந்த டிராவல் ஏஜென்ட், அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்களின் ஒரு சிறிய குழுவில் அவரை சேர்க்க ஏற்பாடு செய்தார். ஜஷன் ப்ரீத் சிங் உட்பட, அங்கு பலரும் குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தனர்.
 
"அவர் எங்களிடம் நிறைய பணம் வசூலித்தார். ஆனால், பிரான்சில் இருந்து அவர் என்னை கான்கன் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மெக்சிகோ நகரம் மற்றும் வடக்கு நோக்கி அழைத்து சென்றனர்."
 
ஒரு கடினமான பயணம்
 
ஜஷன் ப்ரீத் சிங் போன்ற புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவை நல்ல வாழ்க்கைக்கான இறுதி வழியாக பார்க்கிறார்கள் என்று வழக்கறிஞர் அலுவாலியா கூறினார்.
 
ஆனால், அமெரிக்காவுக்கு பயணம் செய்ய இருக்கும் தூரம், இந்த பயணத்தை மிகவும் சவாலானதாக மாற்றுகிறது.
 
வழக்கமாக, அமெரிக்க-மெக்சிகன் எல்லைக்கு வரும் இந்திய புலம்பெயர்ந்தோர், இந்தியாவிலிருந்து தென் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய கடத்தல் தொழிலில் ஈடுப்பட்டவர்களையே நாடுக்கின்றனர்.
 
அவர்கள் பெரும்பாலும் அந்நாட்டு மொழியைப் பேசுபவர்களால் வழி நடத்தப்படுகிறார்கள். தனித்தனியாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் செல்வதை விட, அவர்கள் சிறு குழுக்களாகப் பயணம் செய்கிறார்கள்.
 
பைக் மெக்கானிக் வேலை செய்யும் மத்திய பிரதேச பழங்குடிப் பெண்கள்
 
இந்த நெட்வொர்க்குகள், பெரும்பாலும் இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட 'டிராவல் ஏஜன்ட்கள்' மூலம் வேலையை தொடங்குகின்றன. அவை பயணத்தின் சில பகுதிகளை லத்தீன் அமெரிக்காவில் உள்ள சில கிரிமினல் குழுக்களுடன் அவுட்சோர்ஸ் செய்கின்றன.
 
வாஷிங்டனை தளமாகக் கொண்ட மைக்ரேஷன் பாலிசி இன்ஸ்டிடியூட்டின் (Migration Policy Institute) ஆய்வாளர் ஜெசிகா போல்டர், இந்தச் சேவைகளைப் பயன்படுத்தி பயனடைந்தவர்கள், இந்தியாவில் உள்ள தங்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அதை பரிந்துரைப்பது மூலம் இந்திய புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகக் கூறினார்.
 
"இது அதிக புலம்பெயர்ந்தோரை ஈர்க்கிறது. நிச்சயமாக, அங்கிருப்பவர்கள் முதலில் வெளியேற விரும்பாமல் அது நடக்காது," என்று அவர் கூறினார்.
 
பஞ்சாபைச் சேர்ந்த 20 வயது இளைஞரான மன்ப்ரீத்தின் அனுபவங்கள் கடந்த காலங்களில் தெற்குப் பாதையில் சென்றவர்களைப் போலவே இருந்தன. அவர் தமது முதல் பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டனர்.
 
இந்தியாவை ஆளும் கட்சியான பா.ஜ.கவின் கடுமையான விமர்சகரான, அவர் தமது அரசியல் நம்பிக்கைகளுக்காக துன்புறுத்தப்பட்ட பின்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.
 
"நான் ஈக்வடாரில் இருந்து கொலம்பியாவிற்கு பேருந்தில் சென்றேன், கொலம்பியாவில் இருந்து பனாமாவிற்கு பேருந்தில் சென்றேன். அங்கிருந்து, ஒரு படகு வழியாக, நான் நிகரகுவா மற்றும் குவாத்தமாலா சென்றேன். பின்னர் மெக்சிகோ மற்றும் அமெரிக்காவிற்குள் நுழைந்தேன்.," என்று கலிபோர்னியாவில் இருந்து பிபிசிக்கு அளித்த பேட்டியில் மன்பிரீத் நினைவு கூர்ந்தார்.
 
அனுபவம் வாய்ந்த கடத்தல்காரர்களால் வழி நடத்தப்பட்டாலும் கூட, எல்லைக்கான பயணம் பெரும்பாலும் ஆபத்துகள் நிறைந்ததாக இருக்கிறது. உள்ளூர் கும்பல்களும், ஊழல் அதிகாரிகளும் மிரட்டி பணம் பறித்தல், கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடக்கும். அல்லது, தீவிரமான வானிலை, நோய்வாய்ப்படுதல், காயங்கள் ஆகியவை நடக்கும்.
 
2019ஆம் ஆண்டில், பஞ்சாபைச் சேர்ந்த 6 வயது இந்தியப் பெண் அரிசோனாவின் எல்லை நகரமான லுகேவில்லுக்கு அருகிலுள்ள எரியும் பாலைவனத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டப்போது, இந்த ஆபத்துகள் சுட்டிக்காட்டப்பட்டன. இது இந்தியாவில் தலைப்புச் செய்திகள் ஆகின. பின்னர் அவரை அவரது தாய் ஒரு இந்திய குழுவின் விட்டுவிட்டு, தண்ணீர் தேடி சென்ற போது, 42 செல்சியஸ் வெப்பநிலையில் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
 
அமெரிக்காவில் சிங் போன்ற புலம்பெயர்ந்தோர் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க சட்டப்பூர்வ நீண்ட நெடிய செயல்முறையைத் தொடங்குகின்றனர். பெரும்பாலும், இது அமெரிக்க அதிகாரிகள் 'அச்சுறுத்தும் நேர்காணல்' என குறிப்பிடப்படுகிறது. அதில் அவர்கள் வீடு திரும்பினால் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் வேண்டி இருக்கும் என்று அதிகாரிகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
 
"இந்த முதல் படி மிக முக்கியமானது. அவர் (அதிகாரி) அவ்வளவு பயம் இல்லை என்று கருதினால், உங்கள் வழக்கு ஒருபோதும் அடுத்த கட்டத்திற்கு செல்லாது. அது மிகவும் பேரிழப்பை ஏற்படுத்தும்," என்று அலுவாலியா விளக்கினார்.
 
இந்த அச்சங்கள் நம்பம்படி இருக்கின்றன என ஒரு புகலிட அதிகாரி நம்பினால், புகலிடம் கேட்பவர்கள் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும் குடிவரவு நீதிபதியிடம் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்படலாம்.
 
இந்த வழிமுறை மிகவும் நீண்டது. இதற்காக பல ஆண்டுகள் காத்திருப்பது அமெரிக்காவில் வழக்கமாகியுள்ளது. ஆனால், இதற்கு நேர்மறையான முடிவு கிடைக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை.
 
ஜூன் மாத இறுதியில் இருந்து அமெரிக்காவில் இருக்கிறார் சிங். இப்போது, அவர் தனக்கான ஒரு வழக்கறிஞரை பெற பணத்தைச் சேமித்து வருகிறார்.
 
அமெரிக்காவில் அவரது நீண்ட கால எதிர்காலத்திற்கு எந்த வகையிலும் உத்தரவாதம் இல்லை என்றாலும், அவரது பயணம் நீண்டதாக இருந்தாலும், சொந்த ஊரில் கஷ்டப்படுவதை விட இது சிறந்தது என்றார்.
 
"என் உயிருக்கு எப்போதும் பயந்திருக்கிறேன். ஆனால், நான் இங்கே வந்ததிலிருந்து, ஒருபோதும் அப்படி உணர்ந்ததில்லை," என்று அவர் கூறினார்.