ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (12:33 IST)

வாரிசு படம் எப்படி இருக்கிறது? ரசிகர்கள் கூறுவது என்ன?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம், குடும்பங்களை தியேட்டருக்கு அழைத்து வரும் என படம் பார்த்த ரசிகர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்
 
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில், நடிகர் விஜய், சரத்குமார், பிரகாஷ் ராஜ், ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் உலகமெங்கும் இன்று வெளியானது.
 
நேற்று இரவே சென்னையில் வாரிசு படத்தில் சிறப்புக் காட்சி வெளியானது. அதில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ, நடிகை ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் வம்சி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
 
இதையொட்டி, நேற்று இரவில் இருந்தே வாரிசு படத்தின் விமர்சனம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.
 
ரசிகர்களுக்கான முதல் காட்சி தமிழ்நாட்டில் இன்று காலை 4 மணிக்கு வெளியானது. சென்னையில் முதல் காட்சியை பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்கள், வாரிசு திரைப்படம் குறித்து பிபிசி தமிழிடம் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
 
"குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு"
"வாரிசு திரைப்படம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். பல வருடங்களுக்கு பிறகு கிளாசிக் விஜய்யை வாரிசு படத்தில் பார்த்தோம்," என்று ரசிகர் ஒருவர் தெரிவித்தார். குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்கூறும் வகையில் வாரிசு படம் அமைக்கப்பட்டுள்ளது," என ரசிகை ஒருவர் பேசினார்.
 
"குடும்ப படமாக இருந்தாலும், திரையில் பார்க்க சீரியல் போல இருக்கிறது," என படம் குறித்து தனது விமர்சனத்தை ரசிகர் ஒருவர் முன்வைத்தார்.
 
வாரிசு படத்தின் கதை என்ன?
சரத்குமாரின் குடும்பம் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். சரத் குமாரின் மூன்று பிள்ளைகளில் இளையவராக விஜய் இருக்கிறார். சில பிரச்னை காரணமாக குடும்பத்தில் பிளவு ஏற்படுகிறது.
 
பிரிந்த கூட்டுக்குடும்பத்தை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று நினைக்கும் தந்தையின் கனவுகளை மகன் விஜய் நிறைவேற்றினாரா என்பது தான் வாரிசு படத்தின் கதை சுருக்கம். 
 
படம் எப்படி இருக்கிறது?
 
"குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போக வேண்டும் என்ற செய்தியை வாரிசு படம் முன்வைக்கிறது," என்று ரசிகர் கூறினார்.
 
"படத்தில் விஜய்யும், அவரது அப்பாவாக வரும் சரத் குமாரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்," என மற்றொரு ரசிகர் கூறினார்.
 
பார்த்து பழகிய கதை தான், ஆனால் விஜய்யின் நடிப்பில் பார்க்கும் போது படம் நன்றாக இருந்தது என ரசிகை ஒருவர் தெரிவித்தார்.
 
"படத்தில் தனது அப்பாவுக்காக விஜய் செய்யும் தியாகத்தை பார்த்த போது எனக்கு அழுகை வந்து விட்டது. எனது அப்பாவை ஞாபகப்படுத்தும் வகையில் விஜய்யின் நடிப்பு இருந்தது," என ரசிகர் ஒருவர் உணர்ச்சிப்பெருக்குடன் பேசினார்.
 
படத்தில் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. குடும்ப செண்டிமெண்ட், ஆக்சன், காமெடி, பாடல்கள் என அனைத்து அம்சங்கள் சிறப்பாக வந்துள்ளது.
 
விஜய்யின் நடனத்தை திரையில் பார்க்கும் போது உற்சாகம் அதிகரிக்கிறது. அவருக்கு வயதானது போல தெரியவில்லை என்று ரசிகர்கள் பேசினர்.
 
"படத்தின் பெரும்பாலான காட்சிகள் விஜய் மட்டுமே வந்து செல்வதால், நாயகி ராஷ்மிகா மந்தனாவுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை," என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.