வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (11:15 IST)

உத்தராகண்ட் பனிச்சரிவு: காணாமல் போன 170 பேர் நிலைமை என்ன ஆனது?

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமொலி மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு மற்றும் அதையொட்டி ஆறுகளில் உண்டான வெள்ளம் ஆகியவற்றால் இதுவரை எட்டு உயிரிழந்துள்ளனர் என்றும் ஆறு பேர் காயமடைந்து உள்ளனர் என்றும், 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
 
விடிய விடிய நடந்த மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
 
சுமார் 154 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவிக்கிறது.
 
இவர்களில் பெரும்பாலானோர் பொதுத்துறை நிறுவனமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC) மற்றும் ரிஷி கங்கா மின் திட்டம் ஆகியவற்றில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள்.
 
இதே தகவலை அந்த மாநிலத்தின் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் நேற்று மாலை தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக 9 முதல் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது என்று தேசிய பேரிடர் மீட்பு படையினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
"வெள்ளப்பெருக்கின் வேகம் மிகவும் அதிகமாக இருந்ததால் பனிச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து மிகவும் தொலைவில் உள்ள பகுதிகளில் கூட இறந்த உடல்கள் சிக்கியுள்ளன. சில உடல்கள் ஆழமான பகுதிகளிலும் சுரங்கப் பாதைகளிலும் சிக்கியுள்ளன. இதன் காரணமாக மீட்பதில் சிக்கல் உள்ளது," என்று தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஐ.ஜி. அமரேந்திர குமார் செங்கர் தெரிவித்துள்ளார் என ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.
 
ஞாயிறு என்ன நடந்தது?
 
ஞாயிறு காலை, சமொலி மாவட்டத்தின் ரெனி எனும் கிராமத்தில், நந்தா தேவி பனிப்பாறையில் திடீர் பனிச் சரிவு ஏற்பட்டது.
 
இதனால் தெளலிகங்கா மற்றும் அலக்நந்தா ஆகிய ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு உண்டானது.
 
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC) மற்றும் ரிஷி கங்கா மின் திட்டம் ஆகியவை வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டன.
 
அங்கு பணியாற்றுக்கொண்டிருந்தவர்களின் நிலைமை என்ன ஆனது என்று அப்போது தெரியவில்லை.
 
சமொலி மாவட்டத்தின் தபோவன் அணை பகுதியில் ஒரு சுரங்கப் பாதைக்குள் சிக்கித் தவித்த 16 தொழிலாளர்களை இந்தோ - திபெத்திய காவல் படையினர் ஞாயிறன்று மீட்டுள்ளனர்.
 
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவியை உத்தராகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
 
உயிருடன் மீட்கப்பட்ட சிலர் மயக்க நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் படை தெரிவிக்கிறது.
 
'இமைய மலையின் சுனாமி 2013'
கடந்த 2013ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தின் கேதர்நாத் பகுதி ஒரு மிகப்பெரிய இயற்கை பேரிடரை சந்தித்தது.
 
2004ஆம் ஆண்டு நடந்த சுனாமிக்கு பிறகு, இந்தியா எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கைச் சீற்றம் இதுவாகும்.
 
'இமய மலையின் சுனாமி' என்று ஊடகங்களால் கூறப்பட்ட அந்தப் பெருவெள்ளத்தில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர்.
 
இதுவரை இறந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை தெரியவில்லை என்கின்றனர் அதிகாரிகள். இதில் 5,700 பேருக்கும் மேல் இறந்ததாக கருதப்படுகிறது என்று அப்போது அந்த மாநில அரசு கூறியிருந்தது.
சுமார் நான்காயிரம் கிராமங்களை பாதித்த இந்த வெள்ளத்தால், பல மலை கிராமங்கள் இருந்த சுவடே தெரியாமல் போனது.
 
இந்துக்கள் புனிதமாக கருதும் இடங்களுக்கு பயணம் சென்றிருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கடும் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.
 
2013ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த பெருவெள்ளத்தில் மீட்பு பணிகளில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர், பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.
 
மலைப் பகுதிகளில் ஹெலிகாப்டர்களும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.