1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : சனி, 22 நவம்பர் 2014 (12:29 IST)

சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு வதிவிட உரிமம் - ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமலேயே அமெரிக்காவின் குடிவரவுக் கொள்கையிலும் கட்டமைப்பிலும் மாற்றங்களைச் செய்துள்ளார்.
 
தனது இந்த நடவடிக்கையின் மூலம் எதிரணியிலுள்ள குடியரசுக் கட்சிக்கு அதிபர் ஒபாமா சவால் விடுத்துள்ளார்.
 
அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ள இந்த மாற்றங்களினால் அமெரிக்காவில் உரிய வதிவிட ஆவணங்கள் இன்றி வாழ்ந்துவருபவர்களில் சுமார் ஐம்பது லட்சம் சட்டவிரோதக் குடியேறிகள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அமெரிக்காவில் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் உரிய வதிவிட ஆவணங்கள் இல்லாமல் வாழ்ந்துவருவதாக மதிப்பிடப்படுகிறது.
 
அவர்களில் ஐந்து ஆண்டுகாலத்துக்கும் அதிகமான காலம் அமெரிக்காவில் வாழ்ந்தவர்கள் மட்டுமே ஒபாமா அறிவித்துள்ள இந்த புதிய மாற்றத்தால் பலனடைய முடியும்.
 
இந்த திட்டத்தின்படி, உரிய வதிவிட ஆவணங்கள் இல்லாமலேயே அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து, அமெரிக்காவில் பிள்ளை பெற்றதன் காரணமாக, சட்டபூர்வமான அமெரிக்கப் பிரஜையாக இருக்கும் ஒரு பிள்ளைக்குப் பெற்றோராக இருப்பவர்கள் மட்டும், அரசாங்கத்திடம் விண்ணப்பித்து மூன்று ஆண்டு காலத்துக்கான வேலைக்கான வதிவிட உரிமம் பெற முடியும்.
 
அமெரிக்காவுக்குச் சிறுபிள்ளையாக வந்தவர்களுக்கு தற்காலிக சட்ட அந்தஸ்து வழங்கும் இன்னொரு மாற்றத்தின் மூலமாக வேறு லட்சக்கணக்கானோரும் பலனடைவார்கள் எனத் தெரிகிறது.
 
சட்டவிரோதக் குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கும் நடவடிக்கையல்ல தனது திட்டம் என ஒபாமா தெளிவுபடுத்தினார்.
 
"அமெரிக்காவுக்குள் அண்மையிலே சட்டவிரோதமாக நுழைந்தவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. எதிர்காலத்தில் சட்டவிரோத வரக்கூடியவர்களுக்கும் இது பொருந்தாது.
 
சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களாக இருப்பவர்கள் சட்ட அந்தஸ்துடன் வேலை பார்க்க முடியுமே ஒழிய அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதாகவோ, மற்ற அமெரிக்கர்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகளை வழங்குவதாகவோ எனது திட்டம் அமைந்திருக்கவில்லை" என்றார் அதிபர் ஒபாமா.
 
சட்டவிரோதக் குடியேறிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை நாடு கடத்தவும், எல்லைகளை இறுக்கி எதிர்காலத்தில் எவரும் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய வழியில்லாமல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒபாமா குறிப்பிட்டார்.
 
காங்கிரஸ், செனட் போன்ற சட்டம் இயற்றும் மன்றங்களின் ஒப்புதல் பெறாமல் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நிறைவேற்று அதிகார உத்தரவாக ஒபாமா இந்த மாற்றங்களை கொண்டுவந்திருப்பது சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
 
குடியரசுக் கட்சியினர் காட்டமாக எதிர்வினையாற்றிவருகிறார்கள்.
 
அரிசோனா மாகாண குடியரசுக் கட்சி செனெட் உறூப்பினரான ஜான் மெக்கெய்ன், ஒபாமாவின் செயல் சட்டவிரோத அதிகார அபகரிப்பு என்றார்.
 
அமெரிக்காவின் குடிவரவுக் கொள்கையும் கட்டமைப்பும் ஒழுங்காக செயல்படாமல் இருப்பதன் அடிப்படையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த திட்டம் தவறிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.
 
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டுள்ள நிலையில், ஒபாமாவின் இந்தச் சர்ச்சைக்குரிய நடவடிக்கை, குடிவரவு விவகாரத்தை அடுத்த அதிபர் தேர்தலில் முக்கிய விவகாரமாக மாற்றிவிடும் என்றே தெரிகிறது.