1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:11 IST)

தாலிபன்களை விரட்டத் தயாராகும் அடிபணியாத 'சிங்கப் படை' - கள நிலவரம்

தாலிபன்கள் யாரும் எதிர்பாராத மின்னல் வேகத்தில் ஆப்கானிஸ்தானின் பல முக்கியமான பகுதிகளை கைப்பற்றினர்.
 
ஆனால் அவர்கள் காபூலில் இருந்து புதிய அரசு அமைப்பதைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த நகருக்கு அருகிலேயே அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருக்கிறது. காபூலுக்கு வடகிழக்கே தாலிபன்களை எதிர்க்கும் ஒரு சிறிய பள்ளத்தாக்கு பகுதி விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. அந்தப் பள்ளத்தாக்கின் பெயர் பஞ்ஷிர்.
 
பஞ்ஷிர் பகுதியில் வசிப்பவர்கள் தங்களது ஆயுதங்களைக் கைவிடும்படி தாலிபன் இயக்கத்தின் மூத்த தலைவர் அமீர் கான் மோடாக்கி கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் பஞ்ஷிர் மக்கள் அடிபணிவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி காபூலைக் கைப்பற்றிய பிறகு பஞ்ஷிரை நோக்கி தாலிபன்கள் குறிவைத்து போரிட்டு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. மாறாக தாலிபன்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
 
பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் உண்மையில் என்ன நடக்கிறது - தாலிபன்கள் இதுபற்றிக் கவலைப்பட வேண்டுமா?
 
தாலிபன்களை எதிர்க்கும் போராளிகள் யார்?
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்கு தேசிய எதிர்ப்பு முன்னணியின் (NRF) இருப்பிடம். இந்த அமைப்பு பல இனக்குழுக்கள் மற்றும் முன்னாள் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்களைக் கொண்டது.
 
இந்த வாரம் இவர்கள் தொடர்பான பல புகைப்படங்கள் வெளியாகின. கடுமையான பயிற்சியும், ஆயுதங்களையும் பெற்றவர்களாக இவர்கள் தோன்றுகிறார்கள்.
 
NRF உடன் ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலேஹ் இணைந்திருக்கிறார். குழுவின் தலைவராக இருப்பவர் அஹ்மத் மசூத். இவரது தந்தை பஞ்ஷிரின் சிங்கம் என்று அழைக்கப்படும் அஹ்மத் ஷா மசூத்.
 
1980 களில் சோவியத் படையெடுப்புக்கு எதிராகப் போரிட்டது மட்டுமல்லாமல், 1990 களில் தாலிபன்களையும் தடுத்து நிறுத்தினார். செப்டம்பர் 11 தாக்குதலுக்கு இரு நாள்களுக்கு முன்பு நடந்த ஒரு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
 
அவரது மகன் அஹ்மத் மசூத் 32 வயதானவர். லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் சாண்ட்ஹர்ஸ்ட் ராணுவக் கல்லூரி ஆகியவற்றில் பயின்றவர். தந்தையைப் போலவே தாலிபன்களை தங்களது இடத்துக்குள் வரவிடாமல் விரட்டியடித்துக் கொண்டிருக்கிறார். அதில் தொடர்ந்து உறுதியாகவும் இருக்கிறார்.
அவர் உள்நாட்டில் மட்டும் ஆதரவைத் தேடிக் கொண்டிருக்கவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோங்கை அவர் சந்தித்துப் பேசினார். அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு விலகிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததால், புதிய நட்பு நாடுகளைச் சேர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருந்தார்.
 
தாலிபன்கள் சற்றும் மாறவில்லை என்று சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மசூத் தெரிவித்தார். "இன மற்றும் பாலின பேதமின்றி அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளும், சுதந்திரமும் காக்கப்பட வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
 
தாலிபான்களுக்கு என்ன வேண்டும்?
அனைத்து ஆப்கானியர்களுக்குமான இஸ்லாமிய எமிரேட்டை கட்டமைப்பதற்கு தாலிபன்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
 
ஆனால் காபூலின் நுழைவு வாயிலாக இருக்கும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு இதற்குத் தடையாக இருக்கிறது.
 
சமூக வலைத்தளங்களிலும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் உள்ள தாலிபன் எதிர்ப்புப் போராளிகளுக்கு ஆதரவு தென்படத் தொடங்கியிருக்கிறது.

 
பஞ்ஷிரில் உள்ள என்ஆர்எஃப் போராளிகளுடன் தாலிபன்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். போரைத் தவிர்க்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பதாக இரு தரப்பினரும் கூறுகின்றனர். ஆனால் இதுவரையிலும் பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சமரசத்துக்குப் பதிலாக வெளிப்படையான சண்டைக்கே இந்தப் பேச்சுவார்த்தை வழிவகுத்திருப்பதாகத் தெரிகிறது.
 
பஞ்ஷிரைக் கைப்பற்றுவதற்காக நூற்றுக்கணக்கான போராளிகளை அனுப்பியதாக தாலிபன் கூறுகிறது. ஆனால் எதற்கும் தயாராக இருக்கிறது பஞ்ஷிர். பள்ளத்தாக்கின் விளிம்புப் பகுதிக்குச் செல்லும் தாலிபன் போராளிகள், துப்பாக்கிக் குண்டுகளாலும், எறிகணைகளாலும் வரவேற்கப்படுகிறார்கள். எல்லைப் பகுதியில் மணல் மூட்டைகள், இயந்திரத் துப்பாக்கிகள், எறிகணைகள், கண்காணிப்புக் கோபுரங்கள் என பஞ்ஷிர் முழுமையாகத் தயாராக இருப்பதாக ஏஃப்பி செய்தி நிறுவனம் கூறுகிறது.
 
இதுவரை நடந்திருக்கும் சண்டையில் உயிரிழப்பை ஏற்படுத்தியிருப்பதாக இரு தரப்பினருமே கூறுகிறார்கள். ஆனால் உண்மையான எண்ணிக்கையைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சில பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாக தாலிபன்கள் கூறியிருப்பதை என்ஆர்எஃப் மறுத்திருக்கிறது.
 
பஞ்ஷிர் பள்ளத்தாக்குக்கு அத்தியாவசியப் பொருள்கள் செல்லும் வழிகளை அடைப்பதற்கு தாலிபன்கள் முயற்சி செய்து வருகின்றனர். இதன் மூலம் எதிர்ப்பைக் கைவிட பஞ்ஷிர் பள்ளத்தாக்கை நிர்ப்பந்திக்கலாம் என தாலிபன்கள் கருதுகின்றனர்.
 
பஞ்ஷிர் பள்ளத்தாக்கு எப்படி இருக்கும்?
பஞ்ஷிர் என்பது ஆப்கானிஸ்தானின் மிகச்சிறிய மாகாணங்களில் ஒன்று. பஞ்ஷிர் ஆற்றின் மேலே 9,800 அடி உயரமுள்ள மலை சிகரங்களுக்கு நடுவே அமைந்திருக்கிறது. இங்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் மக்கள் வசிப்பதாக மதிப்பிடப்படுகிறது.
 
சண்டையில்லாத அமைதியான ஆண்டுகளில் இந்தப் பகுதியின் மக்கள் வியத்தகு இயற்கை காட்சிகளைக் காண்பதற்காக ஏராளமான மக்கள் இங்கு வந்தார்கள்.
 
இது பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் இடம். தஜிக் இனத்தவர் இவர்களில் பெரும்பான்மையினர். வெளியே இருந்து வருவோரை எதிர்த்துப் போராரிடும் துணிச்சலுக்காக இந்தப் பள்ளத்தாக்கு மக்கள் புகழ்பெற்றவர்கள்.
 
சுரங்கங்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றுக்காகப் பெயர்பெற்றது இந்தப் பள்ளத்தாக்கு. கடந்த சில ஆண்டுகளில் வெளி முதலீடுகளால் நன்மை கிடைத்தது. கடந்த இருபது ஆண்டுகளில் நீர்மின் திட்டத்துக்கான அணைகள், சாலைகள், காற்றாலைகள், வானொலிக் கோபுரம் ஆகியவை இங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன.