ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2023 (15:18 IST)

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 3 நாட்களில் இரு முறை மீட்கப்பட்ட தாயும் பச்சிளம் குழந்தையும் - துரத்தும் துயரம்

BBC
ஒரே வாரத்தில் இருமுறை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சிரியாவை சேர்ந்த பெண்ணும் அவரது பச்சிளம் குழந்தையும் குணமடைந்து வருகின்றனர் என தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள ஜிண்டய்ரிஸ் நகரில் உள்ள டிமாவின் வீடு நிலநடுக்கத்தில் சேதமடைந்தபோது அவர் ஏழுமாத கர்ப்பிணியாக இருந்தார்.

நிலநடுக்கத்தில் சிறு காயங்களுடன் தப்பித்த டிமா, மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அட்னான் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை ஆப்ரின் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் சிரிய அமெரிக்க மருத்துவ அமைப்பின் (சாம்ஸ்) உதவியுடன் பிறந்தான்.

குழந்தையுடன் டிமா தனது வீட்டிற்கு வந்தார். ஆனால் மூன்று நாட்கள் கழித்து அந்த வீடு இடிந்துவிழுந்தது.

மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்ட அட்னான், அஃப்ரினில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் அழைத்து செல்லப்பட்டான். நீர்ச்சத்து குறைபாடு, மஞ்சள் காமாலையால் அவன் பாதிக்கப்பட்டிருந்தான். டிமாவுக்கு கீழ் மூட்டில் தீவிர காயம் ஏற்பட்டிருந்தது.

குழந்தைகள் நல மருத்துவரான அப்துல்கரிம் ஹுசைன் அல் இப்ராஹிம், குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவன் தேறி வருகிறான் என்றும் வாட்சப் மூலம் பிபிசியிடம் தெரிவித்தார்.

கையில் க்ளூகோஸ் ஏற்றப்பட்டு இன்குபேட்டரில் அமைதியாக உறங்கும் அட்னானின் வீடியோவும் வெளியிடப்பட்டது.

டிமா மருத்துவமனையிலிருந்து மீண்டு வந்து தனது கணவருடன் ஒரு கூடாரத்தில் உள்ளார், அவருடன் அவர்களின் உறவினர்களின் குழந்தைகள் ஒன்பது பேர் உள்ளனர், அட்னானை அவர் தினமும் மருத்துவமனைக்கு சென்று பார்த்து வருகிறார்.

ஜிண்டய்ரிஸில் தங்குவதற்கு இடம் ஏதும் இல்லாததால் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வீட்டில் தங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தனர் டிமாவும் அவரது உறவினர்களும்.
BBC

வட மேற்கு சிரியாவில் இருக்கும் ஜிண்டய்ரிஸ், நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை எந்த உதவிகளும் கிட்டவில்லை. பல ஆயிரம் மக்கள் எந்த உதவியும் இன்றி தவித்து வருகின்றனர்.

ஜிண்டய்ரிஸ் பகுதி 12 வருடங்களாக சிரியா அதிபர் பஷார் அல் அசாத்திற்கு அதரவான படைகளுக்கு எதிராக போரிட்டு வரும் ஜிகாதிகள் மற்றும் போராளிகளின் கோட்டையாக உள்ளது. எனவே நிலநடுக்கத்திற்கு முன்னதாகவும் அங்குள்ள 41 லட்சம் பேர் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மனிதநேய உதவிகளை நம்பித்தான் இருந்தனர்.

அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலால் பாதியளவிலான மருத்துவமனைகளே தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பெரும்பாலும் சிரிய அரசும் ரஷ்யாவும் காரணம் என்று சொல்லப்பட்டது. அல் ஷிஃபாவில் உள்ள மருத்துவமனையில் 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஷெல் குண்டு தாக்குதலில் அந்த மருத்துவமனையின் பெரும் பகுதி அழிந்துவிட்டது. பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் பலர் கொல்லப்பட்டனர்.

திங்களன்று வெறும் 58 லாரிகளில் மட்டுமே ஐ.நாவின் உதவிப் பொருட்கள் துருக்கியிலிருந்து இட்லிப் மாகாணத்தில் உள்ள பப் அல் ஹாவின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைந்தது. இந்த ஒரு எல்லையில் மட்டுமே ஐ.நாவுக்கான உதவிகள் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் திங்களன்று மேலும் இரண்டு எல்லைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக ஐநா தெரிவித்தது.

அதேபோல துருக்கியில் உள்ள மோசமான சாலைகள் காரணமாகவும் உதவிகள் சென்றடைவது தாமதமானது.

இடிபாடுகளிலிருந்து மீட்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள், மருத்துவ உதவிகள், படுக்கைகள், போர்வைகள் என எதுவும் இல்லை என மருத்துவர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

"எல்லா மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன." என்றார் அவர்.

அந்த பகுதியில் 55 மருத்துவ சேவை மையங்கள் நிலநடுக்கத்தால் சேமடைந்துவிட்டன என்றும், 31 மையங்கள் தங்களின் சேவையை நிறுத்தி வைத்துள்ளன என்றும் ஐநா தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், தண்ணீர், சுத்தம் செய்து கொள்வதற்கான மருந்துகள், உறைவிடம் எனவும் எதுவும் இல்லை என சாம்ஸ் அமைப்பின் நிறுவனர் பசேல் டெமானினி தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பு இதுவரை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 2,000 பேரை காப்பாற்றியுள்ளது.
"பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு நாங்கள் சிகிச்சையளிக்க முடியும். ஆனால் சிகிச்சை முடிந்த பிறகு அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். போஷாக்கான உணவு, சுத்தமான நீர் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஐநா மற்றும் சர்வதேச நாடுகள் மிக மோசமாக திட்டமிட்டு உதவிகளை சரியாக கொண்டு சேர்க்க தவறிவிட்டன என பசேல் குற்றம்சாட்டியுள்ளார்.
BBC

சாம்ஸ் அமைப்பு, ஒயிட் ஹெல்மட் மற்றும் சிரியா ஃபோரம் ஆகிய உதவி அமைப்புகள் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உதவி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் தேவைகள் மிக அதிக அளவில் உள்ளதாகவும், மனிதநேய நெருக்கடியை தடுப்பதற்கு சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிரியா மற்றும் துருக்கியில் 7.8 அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

சிரியா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அலப்போ நகருக்கு திங்களன்று வருகை தந்த ஐநா உதவிகளுக்கான தலைவர் மார்டின் க்ரிஃபித்ஸ், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் அரம்பக் கட்ட பணிகள் முடிவை எட்டவுள்ளதாகவும் அடுத்து உறைவிடம், உணவு, உளவியல் சிகிச்சைகள், குழந்தைகளுக்கான கல்வி போன்ற எதிர்காலத்திற்கான உதவிகள் அவசரமாக தேவைப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

சிரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களுக்கு உடனடியாக உறைவிடம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுகின்றன.

அதேபோல சிரியா அரசுக்கு எதிரான படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கும் உதவிகள் வழங்கப்படும் என ஐநா நம்புவதாக அவர் தெரிவித்தார். சிரியா உள்நாட்டு போர் சமயத்திலும்கூட இது நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.