வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Updated : திங்கள், 25 அக்டோபர் 2021 (23:38 IST)

மன்னரை விஷ மோதிரம் மூலம் கொல்ல இளவரசர் யோசனை கூறினார்: முன்னாள் அதிகாரி

மன்னர் அப்துல்லாவைக் கொல்ல சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் "விஷ மோதிரத்தை" பயன்படுத்த பரிந்துரைத்தார் என்று அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

 
தனது தந்தையை மன்னராக்குவதற்காக அவ்வாறு செய்ய விரும்புவதாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது உறவினரிடம் கூறியதாக சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சாத் அல் ஜாப்ரி கூறினார்.
 
அடுத்த வாரிசு யார் என்பது தொடர்பாக அப்போது ஆளும் குடும்பத்திற்குள் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
 
ஜாப்ரியை புனை கதைகளைக் கூறும் நம்பகமில்லாத அதிகாரி என்று சௌதி அரேபிய அரசு கூறுகிறது.
 
சௌதி அரேபியாவின் உண்மையான ஆட்சியாளராக இருக்கும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், "ஒரு மனநோயாளி, கொலைகாரர், மத்திய கிழக்கின் எல்லையற்ற செல்வங்களைக் கொண்டு, தனது மக்களுக்கும், அமெரிக்காவுக்கும், இந்த ஒட்டுமொத்த பூமிக்கும் அச்சுறுத்தலாக இருப்பவர் " என்று சிபிஎஸ்ஸின் "60 நிமிடம்" நிகழ்ச்சிக்கான பேட்டியில் ஜாப்ரி கூறியுள்ளார்.
 
கச்சா எண்ணெய் உற்பத்தி தொடரும்; கார்பன் உமிழ்வையும் குறைப்போம்: சௌதி அரேபியா
ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கு: “செளதி இளவரசர் தண்டிக்கப்பட வேண்டும்” - ஹாடீஜா ஜெங்கிஸ்
2014-ஆம் ஆண்டு நடந்த சந்திப்பின்போது அப்போது உள்துறை அமைச்சராக இருந்த இளவரசர் முகமது பின் நயேபிடம் "மன்னர் அப்துல்லாவைக் கொல்ல ஏற்பாடு செய்ய முடியும்" என்று சல்மான் கூறியதாக ஜாப்ரி தெரிவித்துள்ளார்.
சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (இடது) மற்றும் இளவரசர் முஹம்மது பின் நயேஃப்
 
"அவர்(சல்மான்) கூறினார்: 'நான் மன்னர் அப்துல்லாவை படுகொலை செய்ய விரும்புகிறேன். எனக்கு ரஷ்யாவிலிருந்து ஒரு விஷ மோதிரம் கிடைத்திருக்கிறது. அவருடன் கைகுலுக்கினால் போதும், அவர் முடிந்து விடுவார்" என்று ஜாப்ரி கூறினார்.
 
"தற்பெருமை பேசியிருக்கலாம்… ஆனால் அவர் அப்படிச் சொன்னார், நாங்கள் அதை கவனமாக எடுத்துக் கொண்டோம்"
 
இந்த விவகாரம் அரச நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் தீர்க்கப்பட்டது என்று கூறிய ஜாப்ரி, இந்த சந்திப்பு ரகசியமாக படமாக்கப்பட்டது என்றும், அந்தக் காணொளி பதிவின் இரண்டு பிரதிகள் எங்குள்ளது என்பது தனக்கு தெரியும் என்றும் கூறினார்.
 
முன்னாள் மன்னர் அப்துல்லா 2015-ஆம் ஆண்டு 90 வயதில் இறந்தார், அவருக்குப் பிறகு அவரது சகோதரரும் முகமது பின் சல்மானின் தந்தையுமான சல்மான் மன்னரானார். அவர் முகமது பின் நயேப்பை பட்டத்து இளவரசராக அறிவித்தார்.
 
2017 ஆம் ஆண்டில் நயேஃபுக்கு பதிலாக முகமது பின் சல்மான பட்டத்து இளவரசரானார். நயேஃபின் உள்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
முகமது பின் நயேஃப் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஜாப்ரி கனடாவுக்கு தப்பிச் சென்றார்.
 
துருக்கியில் சௌதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை சௌதி உளவாளிகள் கொலை செய்த சில நாட்களுக்குப் பிறகு, தன்னைக் கொல்லவும் ஒரு குழுவை அனுப்பியதாக ஜாப்ரி தனது பேட்டியில் கூறினார்.
 
"கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள ஒரு விமான நிலையத்தில் ஆறு பேர் கொண்ட குழு தரையிறங்கியது, ஆனால் "டிஎன்ஏ பகுப்பாய்வுக்காக சந்தேகத்திற்கிடமான உபகரணங்களை" எடுத்துச் சென்றதை சுங்கத் துறையினர் கண்டறிந்ததை அடுத்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்" என்று ஜாப்ரி கூறினார்.
 
அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தன்னைக் கொல்ல முயன்றதாக ஜாப்ரி குற்றம்சாட்டினார்.
 
ஆனால் இளவரசர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார். ஜமால் கஷோக்ஜியின் கொலையிலும் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் அவர் இந்தக் கொலைக்கு ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கணித்துள்ளனர்.
மன்னர் அப்துல்லா (முன் இடது) 2015-ஆம் ஆண்டு 90 வயதில் இறந்த பிறகு அவரது சகோதரர் சல்மான் மன்னரானார்
 
குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துக் கேட்பதற்காக சௌதி அரேபிய அரசை பிபிசி தொடர்பு கொண்டது.
 
சிபிஎஸ் நிறுவனத்துக்கு வாஷிங்டனில் உள்ள சௌதி அரேபிய தூதரகம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் "ஆடம்பரமாக வாழ்வதற்காக தாம் செய்த பில்லியன் கணக்கான டாலர் நிதி குற்றங்களில் இருந்து திசை திருப்புவதற்காக புனைக் கதைகளைக் கூறும் வழக்கம் கொண்டவர்" என்று குறிப்பிட்டுள்ளது.
 
ஜாப்ரி மீது பல்வேறு சவுதி நிறுவனங்கள் ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளன. மோசடி செய்ததற்கான ஆதாரம் இருப்பதாகக் கூறி அவரு சொத்துகளை கனடா நீதிபதி ஒருவர் முடக்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
 
அரசுப் பணத்தை திருடியதாகக் கூறும் குற்றச்சாட்டை ஜாப்ரி மறுக்கிறார். தனது முன்னாள் முதலாளிகள் தமக்கு தாராளமாக வெகுமதி அளித்ததாக அவர் கூறுகிறார்.
 
2020 மார்ச்சில் ஜாப்ரியின் மகன் உமர் மற்றும் மகள் சாராவை சவுதி அதிகாரிகள் கைது செய்தனர். ஜாப்ரியை சௌதி அரேபியாவுக்கு வர வைப்பதற்கான முயற்சி இது என மனித உரிமை அமைப்புகள் கூறின.
 
பட்டத்து இளவரசருக்கு ஜாப்ரி வழக்குத் தொடுத்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவரது மகன் மற்றும் மகளுக்கு பணமோசடி மற்றும் நாட்டை விட்டு "தப்பிச் செல்லமுயன்ற" குற்றத்திற்காக சௌதி நீதிமன்றத்தால் முறையே ஒன்பது மற்றும் ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.ரகசிய விசாரணை நடத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் அவர்களின் தண்டனையை உறுதி செய்தது.