1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (15:52 IST)

மரணம் நிகழும் கடைசி நொடியில் வாழ்க்கையின் பிளாஷ்பேக் தெரியும் - ஆய்வு

நாம் இறக்கும் போது வாழ்க்கை நம் கண்களுக்கு முன்பாக வந்துபோகும் என்று ஒரு அறிவியல் "விபத்தின்" மூலம் கிடைத்திருக்கும் புதிய தரவில் தெரியவந்திருக்கிறது.

கால்-கை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 87 வயது நோயாளியின் மூளை அலைகளை விஞ்ஞானிகள் குழு அளவிட்டது. ஆனால் நரம்பியல் பதிவின் போது, ​​அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் இறக்கும்போது மூளையில் இருந்து எதிர்பாராத அலைகள் பதிவாகின.

இறப்பதற்கு முன்னும் பின்னும் 30 வினாடிகளில், மனிதனின் மூளை அலைகள் கனவு காண்பது, பழையவற்றை நினைத்துப் பார்ப்பது போன்ற அதே அலைவடிவங்கள் அப்போது தென்பட்டன.

ஒரு நபரின் கடைசி தருணங்களில் "வாழ்க்கையின் நினைவுகள்" வந்துபோகும் என்று இது நமக்குச் சொல்வதாக இந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த ஆய்வு ஃபிரான்டியர்ஸ் இன் ஏஜிங் நியூரோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இறந்து கொண்டிருக்கும் மூளையின் முதல் பதிவு இது என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியரான அஜ்மல் ஸெம்மர் கூறுகிறார். இவர் கனடாவின் வான்கூவரைச் சேர்ந்தவர்.

"இது முற்றிலும் தற்செயலாக நடந்தது, நாங்கள் இந்த பரிசோதனையை செய்யவோ அல்லது இந்த சமிக்ஞைகளை பதிவு செய்யவோ திட்டமிடவில்லை." என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"ஆகவே, நமது அன்புக்குரியவர்களைப் பற்றியோ, பிற மகிழ்ச்சியான நினைவுகளைப் பற்றியோ நமக்கு மீண்டும் ஒருமுறை பிளாஷ்பேக்கில் தெரியுமா என்று நம்மால் சொல்ல முடியாது" என்கிறார் ஸெம்மர்

"நான் தத்துவங்களை நம்புகிறவனாக இருந்தால், மூளை ஒரு ஃப்ளாஷ்பேக்கை காட்டும்போது கெட்ட விஷயங்களைக் காட்டிலும் நல்ல விஷயங்களை உங்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்று நான் கருதுகிறேன்"

"ஆனால் இது ஒவ்வொரு நபருக்கும் மாறுபட்டு இருக்கும் என்பதை மறுக்க இயலாது."

இப்போது லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார் ஸெம்மர்.

நோயாளியின் இதயம் மூளைக்கு ரத்தம் கொண்டு செல்வதை வழங்குவதை நிறுத்துவதற்கு 30 வினாடிகளுக்கு முன்பு, அதிக அறிவாற்றல் தேவைப்படும் பணிகளான கவனக் குவிப்பு, கனவு காண்பது, நினைவுபடுத்துவது ஆகியவற்றைப் போன்ற பணிகளைப் பின்பற்றின என்று அவர் கூறுகிறார்.

இதயம் துடிப்பதை நிறுத்திய 30 நொடிகளில் ஒருவர் இறந்துவிட்டார் என்று கூறலாம். அந்தப் புள்ளி வரைக்கும் மேற்சொன்ன மூளையின் பணிகள் தொடர்ந்தன.

"இது வாழ்க்கையில் நாம் அனுபவித்த நினைவுகளின் கடைசி பிளாஷ்பேக்காக இருக்கலாம். நாம் இறப்பதற்கு முந்தைய கடைசி நொடிகளில் அவை நம் மூளையில் மீண்டும் தென்படுகின்றன"

வாழ்க்கை எப்போது முடிவடைகிறது? இதயம் துடிப்பதை நிறுத்தும்போதா அல்லது, மூளை செயல்படுவதை நிறுத்தும்போதா என்ற கேள்வியையும் இந்த ஆய்வு எழுப்புகிறது.

எனினும் இந்த ஒரேயொரு ஆய்வில் இருந்து பரந்த, தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாது என்று ஸெம்மரின் குழு எச்சரிக்கிறது. ரத்தப்போக்கு மற்றும் வீங்கிய மூளை, வலிப்பு நோய் ஆகியவற்றை ஆய்வு செய்யப்பட்ட நோயாளி கொண்டிருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

"ஒரேயொரு நபரை மட்டும் ஆய்வு செய்து அதைக் கொண்டு ஆய்வறிக்கை அளிக்க எனக்குப் பிடிக்கவில்லை" என்று ஸெம்மர் கூறுகிறார். 2016-ஆம் ஆண்டு தொடக்கப் பதிவுக்குப் பிறகு பல ஆண்டுகளாக, பகுப்பாய்வை வலுப்படுத்த உதவுவதற்காக அவர் இதே போன்ற நிகழ்வுகளைத் தேடிக் கொண்டிருந்தார். ஆனால் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.

எனினும் 2013-ஆம் ஆண்டு ஆரோக்கியமான எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் இதுபோன்ற ஒரு முடிவு கிடைத்திருக்கிறது.

எலிகளின் இதயம் துடிப்பதை நிறுத்திய 30 வினாடிகள் வரை மரணத்தின் கட்டத்தில் அதிக அளவு மூளை அலைகள் இருப்பதாக தெரிவித்தனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இது ஸெம்மரின் வலிப்பு நோயாளியிடம் தென்பட்டதை ஒத்திருந்தது.

இந்த ஆய்வுகளுக்கு இடையிலான ஒற்றுமைகள் "வியக்கத்தக்கவை" என்று ஸெம்மர் கூறுகிறார்.

இந்தய ஆய்வு முடிவு வாழ்க்கையின் இறுதி தருணங்கள் குறித்த மற்ற ஆய்வுகளுக்கான கதவைத் திறக்கும் என்று ஸெம்மர் குழு இப்போது நம்புகிறது.

"இந்த முழு மரண அனுபவத்திலும் ஏதோ மாய மற்றும் ஆன்மிகம் இருப்பதாக நான் நினைக்கிறேன்" என்று ஸெம்மர் கூறுகிறார்.

"இது போன்ற கண்டுபிடிப்புகள் - இது விஞ்ஞானிகள் வாழும் ஒரு தருணம்."