ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 24 மே 2021 (09:43 IST)

கங்கையில் பிணங்கள் மிதந்ததற்கு மத்திய அரசே காரணம்

கங்கை நதியில் பிணங்கள் மிதந்து வந்ததற்கு இந்திய அரசுதான் காரணம், இதற்கு அனைவரும் ஒட்டுமொத்தமாகப் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஞாயிறன்று தெரிவித்துள்ளார்.

தங்களது குடும்ப உறுப்பினர்களின் உடல்களை நதிக்கரையோரம் விட்டுச் சென்றவர்களின் வலியை நான் புரிந்து கொள்கிறேன். இது அவர்கள் தவறல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
"இறந்த உடல்களின் படங்களைப் பகிர்வதை நான் விரும்பவில்லை. இந்த ஒட்டுமொத்த நாடும் உலகமும் அத்தகைய படங்களை பார்த்து சோகத்தில் உள்ளன.  வேறு வழி இல்லாமல் கங்கை நதியோரம் தங்களது குடும்ப உறுப்பினர்களின் உடல்களை விட்டுச் சென்றவர்களின் வலியை புரிந்து கொள்ளவேண்டும். இது  அவர்களின் தவறல்ல," என்று ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
"இது அனைவரும் பொறுப்பேற்க வேண்டிய விஷயம் அல்ல; மத்திய அரசு மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்," என்று இந்தியில் உள்ள அப்பதிவில் கூறியுள்ளார்.
 
சில நாட்களுக்கு முன்பு பிகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் கங்கை நதியில் பிணங்கள் மிதந்து வருவது அதிக அளவில் காணப்பட்டன.
 
இவர்கள் இறப்புக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று  அஞ்சப்படுகிறது.
 
நரேந்திர மோதி அரசு இந்தியாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கையாளும் விதம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து  வருகின்றன.
 
ஆனால், உலகிலேயே குறுகிய காலத்தில் 12 கோடிப் பேருக்கும் மேல் தடுப்பூசி வழங்கிய நாடு இந்தியாதான் என்றும் சென்ற ஆண்டு கொரோனா முதல் அலை  வந்த காலத்திலேயே இரண்டாம் அலை குறித்து மாநில முதல்வர்களுக்கு நரேந்திர மோதி எச்சரித்தார் என்றும் பாரதிய ஜனதா கட்சி கூறுகிறது.
 
பிகார், உத்தரப் பிரதேசம் - கங்கையில் மிதந்த உடல்கள்
 
உத்தரப் பிரதேசத்தின் கான்பூர், உன்னாவ் மற்றும் ஃபதேபூரில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மக்கள் மத்தியில் பரபரப்பு  ஏற்பட்டது.
 
இடுகாடுகளில் கூட்டம் மற்றும் ஈமக்கிரியைகளுக்கு ஆகும் அதிக செலவு காரணமாக மக்கள் இறந்தவர்களை ஆற்றங்கரை மணலில் அடக்கம் செய்துவிட்டுச்  சென்றுவிடுகிறார்கள் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
அதேபோல பிகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தின் சௌஸா பகுதியில் உள்ள மயானத்தில் கங்கையின் கரையில் குறைந்தது 40 சடலங்கள் மிதந்து கிடந்தன. உள்ளூர் நிர்வாகம் பிபிசியுடனான உரையாடலில் இதை உறுதிப்படுத்தியது.
 
ஆனால் உள்ளூர் பத்திரிகையாளர்கள் சடலங்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருந்ததைத் தாங்கள் கண்டதாக தெரிவித்துள்ளனர்.
 
பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வந்த நிகழ்வுகளுக்குப், பிறகு இப்போது கங்கைக் கரை மணலில் புதைக்கப்பட்ட ஏராளமான  உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.