Widgets Magazine

தொழில் வளர்ச்சி: பின்தங்கிய மாநிலங்கள் தமிழகத்தை முந்துகின்றனவா?

tamilnadu
Last Modified வெள்ளி, 13 ஜூலை 2018 (15:23 IST)
உலக வங்கி மற்றும் மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (Department of Industrial Policy and Promotion) ஆகியவை இணைந்து, 2018ஆம் ஆண்டுக்கான தொழில் செய்ய உகந்த இந்திய மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகம் 15ஆம் இடம் பிடித்துள்ளது.
முதல் இரண்டு இடங்களை ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன. தமிழகத்தைவிடவும் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களான ஜார்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தைவிடவும் உயரிய இடத்தைப் பிடித்துள்ளன.

தமிழகத்தைவிடவும் அதிக மதிப்பெண் பெற்று தரவரிசையில் முன்னேறியுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலரும் வேலைவாய்ப்பு தேடி தமிழகம் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.தொழில் தொடங்க அனுமதி அளித்தல் மற்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள தொழில்களுக்கான அனுமதியை நீட்டித்தல், கட்டடம் கட்ட அனுமதி, நிறுவனங்கள் உடனான சட்ட விவகாரங்களை முடிவுக்கு கொண்டு வருதல், தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களை அமல்படுத்துதல், ஒற்றைச் சாளர முறையில் தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகளை அளித்தல், இணையம் மூலம் விண்ணப்பித்தல், பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் கண்காணித்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கான இந்தத் தரவரிசை தயார் செய்யப்பட்டுள்ளது.


tamilnadu

இதில் முதலிடம் பிடித்துள்ள ஆந்திரா 98.42% மதிப்பெண் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்திலுள்ள தெலங்கானா 98.33%, மூன்றாம் இடத்திலுள்ள ஹரியானா 98.07% பெற்றுள்ளன. இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சி அதிகம் உள்ள மாநிலமான மகாராஷ்டிரா இந்தப் பட்டியலில் 92.71% பெற்று 13ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசம், லட்சத்தீவு, மேகாலயா ஆகியவை மதிப்பெண் ஏதும் பெறவில்லை. மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகிய சிறு மாநிலங்கள் முறையே 0.27% மற்றும் 0.13% மதிப்பெண் பெற்றுள்ளன.

மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 15 மாநிலங்கள் 90%க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளன. 15ஆம் இடத்திலுள்ள தமிழகம் பெற்றுள்ள மதிப்பெண் 90.68%. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 2016க்கான தரவரிசையில் 62.80% பெற்று 18ஆம் இடத்தில் இருந்த தமிழகத்துக்கு இது ஒரு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம்தான்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கிறுஸ்துதாஸ் காந்தி, "தமிழகத்தைவிட தரவரிசையில் மேலே உள்ளி மாநிலங்கள் இன்னும் வளர்ச்சி அடையாத மாநிலங்கள். ஆனால் அங்கு கனிம வளங்கள் அதிகமாக உள்ளன. அம்மாநிலங்களில் முன்பு நிலவிய சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகள் தற்போது ஓரளவு சுமூகமாகியுள்ளதால் நிச்சயமாக அங்கு முதலீடுகள் முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிகரிக்கும்," என்கிறார்.


"முதல் இடத்தில் இருக்கும் மாநிலம் முதல் 15ஆம் இடத்தில் இருக்கும் மாநிலம் வரை அனைத்தும் 90%க்கும் அதிகமான மதிப்பெண் பெற்று இருப்பதால், இவற்றுக்கிடையே பெரிய வேறுபாடு இருப்பதாகக் கருத முடியாது. இங்கு எட்டு வழிச்சாலை மக்களுக்காக அமைக்கப்படவில்லை. தொழில் நிறுவனங்களுக்காகவே அமைக்கப்படுகிறது. மக்கள் தொழில் நிறுவனத்தை எதிர்த்துப் போராடினால் அவர்களை சுட்டுக் கொல்லவும் தயாராக உள்ள அளவுக்கு மாநில அரசு தொழில்துறைக்கு ஆதரவாக உள்ளபோது, மாநில அரசு தொழில் துறைக்கு எதையும் செய்யவில்லை என்று கூற முடியாது," என்று அவர் தெரிவித்தார்.

"இணையதளம் மூலம் தொழில் நிறுவனங்களுக்குத் அனுமதி, ஒப்புதல் ஆகியன வழங்கப்படுவதால் பயண தூரம், கால விரயம், செலவுகள் ஆகியன தவிர்க்கப்படுகிறது. அதற்கான பெயர் உரியவர்களைப் போய்ச் சேரவும் வேண்டும். மற்றபடி தமிழகம் தொழில்துறையில் முன்பு இருந்த அதே நிலையில்தான் உள்ளது," என்று கூறினார் கிறிஸ்துதாஸ் காந்தி.


tamilnadu


தொழில் நகரான கோவையின் சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான மிகப்பெரிய கூட்டமைப்புகளில் ஒன்றான கொடிசியா அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி இது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.

"இணையம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்படுவது சரியான பாதையில் போகிறது. கடந்த ஆண்டு 62.80% இருந்த தமிழகத்துக்கான மதிப்பீடு இப்போது 90.68%ஆக அதிகரித்துள்ளதே அதற்குச் சான்று. அரசின் விதிமுறைகளின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு அனுமதி கிடைப்பதும் தற்போது எளிதாக உள்ளது," என்று கூறுகிறார் ராமமூர்த்தி.

மத்திய அரசின் இந்த தர வரிசையில் 95%ஐ விட அதிக மதிப்பெண் பெற்ற மாநிலங்கள் உயரிய சாதனையாளர்கள் (Top Achievers) என்றும் 90% முதல் 95% வரையிலான மதிப்பெண் பெற்ற தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் சாதனையாளர்கள் (Achievers) என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

உலக வங்கியின் தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 100வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள இந்தப் பட்டியலில் மொத்தம் 190 நாடுகள் உள்ளன.

இதில் மேலும் படிக்கவும் :