வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 27 செப்டம்பர் 2015 (17:07 IST)

தேனை விற்று தீவிரவாத அமைப்பை நடத்த முடியுமா?

தேனை விற்று தீவிரவாத அமைப்பை நடத்த முடியுமா? அது ஓரளவுக்கு முடியும் என தாலிபான்கள் நிரூபித்துள்ளனர்.
 

 
உலகின் பல நாடுகளில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் தமது நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை பல வகைகளில் ஈட்டுகின்றனர்.
 
அவ்வகையில் ஆப்கானிஸ்தானில் செயல்படும் தாலிபான்கள் தமது இயக்கத்துக்கான நிதியை பல வழிகளிலும் ஈட்டுகிறார்கள் என்றும் அதில் தேன் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமும் ஒன்று என புதிய ஆய்வுத் தகவல் ஒன்று கூறுகிறது.
 
தாலிபான் அமைப்பினர் எப்படிச் செயல்படுகின்றனர், அவர்களுக்கு நிதியாதாரங்கள் எங்கிருந்து வருகின்றன என்பது தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இதுவரை தெரியாதது என கருதப்பட்ட பல விஷயங்கள் தெரியவந்துள்ளன.
 
ஆப்கானிஸ்தானுக்குள் பாதுகாப்பு அளிக்கிறோம் எனக் கூறி பெறப்படும் கப்பம், சோதனைச் சாவடிகளில் வசூல், கையூட்டு மற்றும் வரிகள் மூலம் நிர்பந்தித்து பணம் வசூலிப்பது ஆகியவற்றின் மூலம் தாலிபான்களுக்கு நிதி வருகிறது.
 
சொந்தத் தொழில்:
 
இவை தவிர ஐக்கிய அரசு அமீரகம், கத்தார், சவுதி அரேபியாவில் தாலிபான்களுக்கு சொந்தமாக வர்த்தகம் இருக்கிறது.
 
தாலிபான் அமைப்பில் முக்கியமானதொரு அங்கமான ஹக்கானிகள் பாகிஸ்தான், ஆப்காஸ்தான் மற்றும் பாரசீக வளைகுடாவில் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கும் வியாபார நடவடிக்கைகளில் தேன் விற்பனையும் முக்கியப் பங்கு வக்கிறது என ஆய்வாளர்களில் ஒருவரான பார்னெட் ரூபின் கூறுகிறார்.
 

 
உள்நாட்டில் விளையும் கோதுமை, கஞ்சா உட்பட பல விளைபொருட்கள் மீதும் தாலிபான்கள் வரிவிதித்து அதன் மூலமும் தமது வருவாயை ஈட்டுகின்றனர்.
 
அதன் உறுப்பினர்கள் விசுவாசத்தின் அடிப்படையில் தலைமைக்கு கீழ்படிந்து நடப்பவர்களாக இருக்கின்றனர் என்று ஆப்கன் தலைநகர் காபூலை தளமாகக் கொண்டு செயற்படும் வல்லுநரான வாஹீத் மொஸ்தா கூறுகிறார்.
 
ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் ஒப்பந்தக்காரர்கள் தங்களது வேலைகளை முன்னெடுத்துச் செல்ல, கடந்த 12 வருடங்களாக தாலிபான்களுக்கு பணம்கொடுத்து வருகின்றனர் என்று வாஹீத் கூறுகிறார்.
 
அல்-கொய்தா தொடர்புகள்:
 

 
தாலிபான்களின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் உட்பட அவர்களுக்கு பல வகையிலும் அல்-கொய்தா உதவிகளை செய்கிறது. ஆனால் அல்-கொய்தாவின் இராணுவ உதவிளை தாலிபான்கள் விரும்புவதில்லை.
 
அத்தோடு அவர்களின் ஜிஹாதி நடவடிக்கைகளுக்கும் தாலிபான்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை.
 
மறுபுறத்தில் இஸ்லாமிய அரசினர் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ் அமைப்பினரும் தாலிபான்களும் பரஸ்பர எதிரிகளாக இருக்கின்றனர் என்று டாக்டர் பார்னட் ஆர் ரூபின் கூறுகிறார்.