திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 8 மே 2018 (12:05 IST)

சிரியா போர்: குடும்பத்தோடு வெளியேறும் சிரியா போராளிகள்

போரால் சிதைந்துள்ள சிரியாவில் தங்களின் கடைசியாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஸ்டன் பகுதியை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளனர் சிரிய கிளர்ச்சியாளர்கள். மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் மற்றும் ஹாமாவுக்கு இடையிலான ஒரு பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான போராளிகள்  தங்களின் குடும்பத்தோடு பேருந்து வழியாக வெளியேறி வருகின்றனர்.
சிரியா அரசு மற்றும் அதன் ரஷ்ய கூட்டணியுடன் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், வடக்கு சிரியாவில் எதிராளியின் கட்டுப்பாட்டில் இருக்கும்  பிரதேசத்திற்கு இப்போராளிகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். நீண்டகால முற்றுகைக்கு பிறகு கிளர்ச்சியாளர்கள் வெளியேறும் கடைசி பகுதி இது. சிரியாவின் வடக்குப் பகுதி எல்லை மற்றும் தென் பகுதி எல்லை ஆகியவை இன்னமும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
 
எப்படி வெளியேற்றத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது?
 
சுதந்திர சிரியா ராணுவ படை மற்றும் ரஷ்ய அதிகாரிகளிடையே சிரியாவின் ஹோம்ஸ் பகுதியில் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்பட்டது  என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் தங்களிடம் இருந்த வலுவான ஆயுதங்களை ஒப்படைத்துள்ளனர். ஆனால் லேசான  ஆயுதங்களை தங்களுடன் எடுத்துச் செல்ல போராளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேருந்து வட கிழக்கு பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்கள்  கட்டுப்பாட்டில் இருக்கும் இட்லிப் மாகாணத்துக்குச் செல்கிறது. ரஷ்ய ராணுவப் போலீஸ் இந்த பேருந்துக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
 
உள்ளூர் மக்களின் கருத்துப்படி, அந்நிய எல்லைக்குட்பட்ட இப்பகுதியிலுள்ள ராஸ்டன் நகரமும் இந்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்னதாக ரஷ்ய  வான்தாக்குதலில் கடுமையான குண்டு மழையால் பாதிக்கப்பட்டது.
 
''பொதுமக்களின் மீது குண்டு மழை பொழிந்த பிறகு அவர்கள் கிளர்ச்சியாளர்களுக்கு வேறு வாய்ப்பின்றி விட்டுச்சென்றனர். கிளர்ச்சியாளர்கள் தங்களது பகுதியை  ஒப்படைக்க வேண்டும் அல்லது அவர்களின் பகுதி அழிக்கப்படும் என்ற வாய்ப்புகளே இருந்தன. இதற்கு குடிமக்கள் பெரும் விலை கொடுக்கவைத்துள்ளனர்'' என  ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார் அபுல் அஸீஸ் அல் பராஜி.
 
இந்த வெளியேற்றத்துக்கு இரண்டு நாட்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்களன்று ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்து வழியாக  வெளியேறியுள்ளனர். ஏழு வருட போருக்கு பிறகு, ரஷ்ய மற்றும் இரானிய ராணுவப் படை ஆதரவுடன் அஸ்ஸாத் அரசு, இரண்டாவது நகரமான அலெப்போ  உட்பட மத்திய சிரியாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
 
ஹோம்ஸ் மற்றும் ஹாமாவுக்கு இடையில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்த பகுதி மீண்டும் அரசின் பிடியில் வந்துள்ள நிலையில் போரின் காரணமாக பல  வருடங்களாக மூடப்பட்டிருந்த முக்கியமான நெடுஞ்சாலை அரசுக்கு பாதுகாப்பாக உள்ளது. எம் 5 எனும் நெடுஞ்சாலையானது ஹோம்ஸ் வழியாக தலைநகர்  டமாஸ்கஸ் மற்றும் அலெப்போவை இணைக்கிறது.
கிளர்ச்சிப் படைகள் தற்போது இட்லிப் மீது கவனம் செலுத்தி வருகின்றன. கடந்த மாதம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் முன்னதாக இருந்த கிழக்கு  கூட்டா பகுதியிருந்து ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இட்லிப்பிற்கு வருகை தந்தனர். கிளர்ச்சியாளர்கள் இன்னமும் நாட்டின்  தென் கிழக்கு பகுதியிலுள்ள டேரா மாகாணத்தின் பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
 
சிரியாவில் குர்திஷ் ஆதிக்கம் அதிகரிப்பதை கண்டு எச்சரிக்கையுடன் இருக்கிறது துருக்கி. சமீபத்தில் சிரிய குர்தீஷ் ஒய்பிஜி போராளிகளிடம் இருந்த தென்  மேற்கு பகுதியான ஆஃப்ரின் பிராந்தியத்தை துருக்கி கைப்பற்றியது. ஐஎஸ் குழுவுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வரும் குர்திஷ் ஆதிக்கம் கொண்ட சிரிய  ஜனநாயக படைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவருகிறது.
 
பிரிட்டனை தளமாக கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் அறிக்கையின் படி, ஏழு வருட போரில், நான்கு லட்சம் பேர்  கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். 22 மில்லியன் பேரை கொண்ட நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர்  தங்களது வீடுகளை இழந்து வெளியேறியுள்ளனர். குறைந்தபட்சம் 6.1 மில்லியன் மக்கள் நாட்டுக்குள்ளாகவே இடம் பெயர்ந்துள்ளனர். 5.6 மில்லியன் பேர் அயல்  நாட்டுக்குச் சென்றுவிட்டனர். அதில் பெரும்பாலானோர் அண்டை நாடான லெபனான் போன்றவற்றில் வசிக்கின்றனர்.