புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 26 அக்டோபர் 2021 (09:33 IST)

போராட்டக்காரர்களை சுட்ட சூடான் ராணுவம் - 7 பேர் பலி, நிதி உதவியை நிறுத்திய அமெரிக்கா

போராட்டக்காரர்களை நோக்கி, சூடான் ராணுவத்தினர் சுட்டதில் குறைந்தபட்சம் ஏழு பேர் பலியானதாகவும்,140 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சூடானில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்சிக் கவிழ்ப்பை நடவடிக்கையை உலக நாடுகள் பலதும் கண்டித்துள்ளன. அமெரிக்கா சூடானுக்கு வழங்கவிருந்த $700 மில்லியன் நிதி உதவியை நிறுத்தியுள்ளது.
 
நாட்டில் நிலவிய அரசியல் சண்டைகள் மற்றும் சச்சரவுகள்தான் ராணுவத்தின் இந்த செயல்பாட்டுக்கு காரணம் என ஆட்சிக் கவிழ்ப்பு தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபடாஹ் புர்ஹான் குற்றம்சாட்டினார்.
 
இரு ஆண்டுகளுக்கு முன்பு, சூடானை நீண்ட காலம் ஆட்சி செய்துவந்த ஓமர் அல் பஷீர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, ஓர் இடைக்கால அரசு குடிமைத் தலைவர்களைக் கொண்டு நிறுவப்பட்டது. அப்போது முதலே குடிமை அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவத்தினருக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.
 
இந்த ராணுவ ஆட்சியை எதிர்த்தும், மீண்டும் குடிமை (சிவில்) அரசு நிறுவப்பட வேண்டும் என்றும் பெரும் எண்ணிக்கையில் போராட்டக்காரர்கள், சூடானின் தலைநகர் கார்தூம் உட்பட பல்வேறு நகரங்களில் வீதியில் இறங்கி போராடியதாக பிபிசி அரபு மொழி சேவையின் மொஹம்மத் ஓஸ்மான் கூறினார்.
 
காயம்பட்ட போராட்டக்காரர் ஒருவர், சூடான் நாட்டின் ராணுவ தலைமையக வளாகத்தின் முன், அந்நாட்டு ராணுவத்தினர் தன் காலில் சுட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
 
மற்றொரு போராட்டக்காரரோ, முதலில் ராணுவம் ஸ்டன் க்ரனேடை (பெருங்சத்தத்தை ஏற்படுத்தி நிலைகுலையச் செய்யும், பொதுவாக உயிர் சேதம் ஏற்படாது) பயன்படுத்தியதாகவும், அதன் பின் துப்பாக்கிகளை பயன்படுத்தியதாகவும் கூறினார்.
 
"இருவர் இறந்துவிட்டனர். அதை நான் என் கண்ணால் பார்த்தேன்" என்கிறார் அல் தயீப் மொஹம்மத் அஹ்மத். சூடான் ராணுவ தலைமையக வளாகத்துக்கு வெளியே உயிரைப் பறிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக சூடானின் தகவல் அமைச்சகம் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது.
 
அந்நகரத்தில் உள்ள மருத்துவமனையில் இருந்து வெளியான படங்களில், ரத்தம் தொய்ந்த ஆடைகளோடும், பல்வேறு காயங்களோடும் மக்கள் இருப்பதைக் காட்டுகிறது.
 
கற்கள் மற்றும் எரியும் டயர்களைக் கொண்டு போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்தனர். இப்போராட்டத்தில் பல பெண்களும் பங்கெடுத்து ராணுவ ஆட்சி வேண்டாம் என முழக்கமிட்டனர்.
 
நகரத்தின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது, சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இணைய சேவை, தொலைபேசி சேவைகளும் இல்லை.
 
சூடான் நாட்டின் மத்திய வங்கியின் ஊழியர்கள் நாடு முழுக்க வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ராணுவம் நடத்தும் மருத்துவமனைகளில், மருத்துவர்கள் அவசர தேவைகளைத் தவிர மற்ற பணிகளை மேற்கொள்ள மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
 
பெயர் குறிப்பிடப்படாத இடங்களில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, ஆப்பிரிக்க யூனியன் ஆகிய நாடுகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
 
இதில் சூடானின் பிரதமர் அப்தெல்லா ஹம்தோக், அவரது மனைவி, அவரது கேபினெட் உறுப்பினர்கள், மற்ற அரசியல் தலைவர்கள் அடக்கம்.
 
கடந்த 2019ஆம் ஆண்டு நீண்ட காலமாக சூடானை ஆட்சி செய்து வந்த ஒமர் அல் பஷீர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின், குடிமை அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ தலைவர்கள், ஒரு சிக்கலான அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையின் கீழ் அந்நாட்டை நிர்வகித்து வருகின்றனர்.
 
சூடானை, ஜனநாயகத்தை நோக்கி நகர்த்தும் வகையில் அந்த உடன்படிக்கை வடிவமைக்கப்பட்டது, ஆனால் கடந்த காலங்களில் பல முறை ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
அரசியல் சண்டை சச்சரவுகள் காரணமாக, புரட்சிப்பாதையை திருத்த இந்த அதிகார கைப்பற்றல் அவசியமாகிறது என ஆட்சிக் கவிழ்ப்புத் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபடாஹ் புர்ஹான் கூறியுள்ளார்.
 
இப்போதும் சூடான் குடிமை ஆட்சிப் பாதை மாற்றத்தில் உறுதியோடுள்ளது என கூறினார் ஜெனரல் அப்தெல். அந்நாட்டில் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதை போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.