ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (21:18 IST)

ராட்சசி' படத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் பார்க்க வேண்டும்: மலேசிய கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்

'ராட்சசி' தமிழ்த் திரைப்படத்தை மலேசிய கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
மலேசியக் கல்வி அமைப்பில் அமல்படுத்தப்பட்டு வரும் புது மாற்றங்கள், கொள்கைகள் இப்படத்தில் அழகாக சித்தரித்திருக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 
'ராட்சசி' படத்தில் இடம்பெற்றுள்ள சில கருத்துக்களையும் காட்சிகளையும் அவர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.
 
மலேசிய பள்ளிகளில் இலவச காலை உணவுத் திட்டம்
 
மலேசியாவில் பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது அமைச்சர் மஸ்லீ மாலிக்கின் பெரும் விருப்பமாகும். இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அமலுக்கு வருகிறது.
 
இத்திட்டம் தொடர்பாகவும், பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் எனும் தமது ஆசை, எதிர்பார்ப்புகளையும் 'ராட்சசி' மிக நன்றாகத் திரையில் வெளிப்படுத்தி உள்ளது என்கிறார் மஸ்லீ மாலிக்.
 
'ராட்சசி'யில் பள்ளித் தலைமை ஆசிரியையாக உள்ள ஜோதிகா, தமது பள்ளி மாணவிகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, அவர்களுடன் சகஜமாகப் பேசி உரையாடுவது, அறிவுரைகள் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
 
கடந்த சனிக்கிழமையன்று தமது கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் சேர்ந்து இப்படத்தைக் கண்டு ரசித்தார் அமைச்சர் மஸ்லீ. பின்னர் படம் குறித்த தனது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
 
"அசாதாரண கதை அம்சமும், முக்கிய கதாபாத்திரத்தின் (ஜோதிகா) அபாரமான நடிப்பும் கொண்டுள்ள திரைப்படம் இது.
 
"நாட்டின் கல்வித்துறை அமைச்சராக மட்டுமே இத்திரைப்படத்தைப் பார்க்கவில்லை. மாறாக, அதன் ஒவ்வொரு பகுதியையும் மலேசியாவின் தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன்.
 
"ஒரு சூப்பர் ஹீரோவின் கதாபாத்திரத்திரமாக கீதா ராணி (ஜோதிகா) இடம்பெற்றுள்ளது. பெரிய மாற்றங்கள் சாத்தியமில்லை என்பது தவறு என அவர் நிரூபித்துள்ளார்," என்று அமைச்சர் மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.
 
கௌதம்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ராட்சசி'. மிகவும் சீரழிந்து கிடக்கும் ஓர் அரசுப் பள்ளியில் தலைமையாசிரியையாக பொறுப்பேற்கும் கீதா ராணி, கடும் ஒழுக்க விதிமுறைகளைப் பின்பற்றி அதைச் சிறந்த பள்ளியாக எப்படி மாற்றிக் காட்டுகிறார் என்பதே இப்படத்தின் கதை.
 
"ஆசிரியர்களும், மாணவர்களும் பெற்றோருடனும் ராட்சசியைப் பார்க்க வேண்டும்"
 
பள்ளி மாணவர்களின் சில தோல்விகள் குறித்து இப்படம் பேசுகிறது. இந்நிலையில் காவல்துறை உதவியுடன் இத்தோல்விக்கான காரணிகளைக் களைய தீர்வு காண்கிறார் கீதா ராணி. தனித்துச் செயல்படாமல், இந்த முயற்சியில் அனைவரையும் ஈடுபட வைக்கிறார்.
 
"நாமும் மலேசியாவில் இதைச் செய்யவே முற்படுகிறோம். அமலாக்கம் என்பது அனைத்து கோணங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் மாணவர்கள் எதிர்காலத்தில் தோல்வியைச் சந்திக்காத நிலை ஏற்படும்," என்கிறார் அமைச்சர் மஸ்லீ மாலிக்.
 
கல்வி மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என உறுதியாக நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், 'ராட்சசி' திரைப்படத்தை ஆசிரியர்களும், தங்கள் பெற்றோருடன் சேர்ந்து மாணவர்களும் கண்டு ரசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
அவரது சமூக வலைத்தளப் பதிவு தற்போது வைரலாகி உள்ளது. அவர் பதிவிட்ட சில மணி நேரங்களுக்குள் ஆயிரக்கணக்கானோர் இப்பதிவைக் கண்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.