புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : திங்கள், 2 மார்ச் 2020 (13:10 IST)

8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த மாணவர்கள்'

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் 8 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
 
அவர்களின் பிள்ளைகள் முகாமிற்கு அருகே உள்ள முதலியார்குப்பம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் முகாமை சார்ந்த நான்காம் வகுப்பு படிக்கின்ற 8வயது சிறுமி ஒருவர் பள்ளியின் அருகே, கடந்த சனிக்கிழமை அன்று விளையாடிக் கொண்டிருந்தார்.
 
அப்போது, அதே முகாமை சேர்ந்த 13 மற்றும் 15 வயதுடைய மாணவர்கள் இருவர் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு வீட்டுக்கு சென்ற சிறுமி சோர்வுடன், உடல் முடியாமல் இருப்பதை அறிந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்ததை தொடர்ந்து, நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் சிறுமி.
 
இதனையடுத்து சிறுமியை புதுச்சேரி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர்.
 
பின்னர் சோதனையில், சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை மருத்துவர்கள் உறுதிபடுத்தினர். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில், நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளனர்.
 
இதனால் குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள் இருவரையும், கோட்டக்குப்பம் மகளிர் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யதுள்ளனர். பிறகு அவர்கள் இருவரையும் விழுப்புரம் மாவட்டம் இளஞ்சிறார் நீதிக் குழும நிதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மாவட்டம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி புதுச்சேரி அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட உதவி காவல் ஆய்வாளர் முத்துலட்சுமிடம் விளக்கம் கேட்டபோது, அவர் கூறுகையில், "காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் விசாரனையானது மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 1மணிக்கு நடந்துள்ளது,
 
இது தொடர்பான புகாரை நேற்று(ஞாயிற்றுக்கிழமை) காலையில் தான் சிறுமியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் 8வயது சிறுமியை, அதே முகாமை சார்ந்த 13 மற்றும் 15 வயதுடைய மாணவர்கள் இருவர் படிக்கும் பள்ளியிலேயே பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். மேலும் குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, கடலூர் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டனர்," என தெரிவித்தார்.
 
கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமின் தலைவர் குற்றச் சம்பவம் குறித்து கூறுகையில், "சிறுமி வல்லுறவு செய்யப்பட்டது உண்மைதான். இச்சம்பவம் தொடர்பாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் பெற்றோருடன் சென்று புகார் கொடுத்தோம்.
 
குழந்தைகள் பொதுவாகவே முகாமிற்கு அருகாமையிலும், வெளியிலும் சென்று விளையாடுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், குழந்தைகள் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது பெற்றோர்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை கண்டுகொள்ளாமல் விட்டதன் காரணத்தினாலேயே இவ்வாறு நடந்துள்ளது.
 
எங்களது முகாமில் அதிகபடியான மக்கள் சூழ்ந்திருப்பதால் முகாமிற்குள் இப்படி நடந்திருக்க விடமாட்டோம். முகாமிற்கு வெளியே இச்சம்பவம் நடைபெற்றதால் எங்களால் இவற்றை தடுக்க முடியாமல் போனது. எதிர்பாராதவிதமாக நடைபெற்ற இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற குற்றங்கள் வரும் நாட்களில் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம், பெற்றோர்களும் கவனமாக இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
 
சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழிடம் கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமின் வருவாய் ஆய்வாளர் தினகரன் கூறுகையில், "இந்த சம்பவம் பெற்றோரின் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளது. முகாமில் வசிக்கும் அனைவருக்கும் தேவையான பாதுகாப்பை நாங்கள் வழங்கி வருகிறோம், இங்கே 416 குடும்பத்தில், 1452க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்குமான பாதுகாப்பை நாங்கள் வழங்கி வருகிறோம்'' என்று கூறினார்.
 
"ஆனால் அவர்களின் குழந்தைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவர்களது பெற்றோர்கள் தான். மேலும், நடந்த சம்பவம் குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற விஷயங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை எங்களுக்குள்ளது. ஆகவே, வரும் நாட்களில் இது தொடர்பாக குழந்தைதள் மற்றும் முகாமில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசு உயர்அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளருடன் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களுக்கு விழிப்புணர்வு செய்ய இருக்கிறோம்''
 
"எங்கள் கண்காணிப்பில் இருப்பதால், முகாமில் வசிக்கும் மக்களுக்கு எங்களால் முடிந்தவரை அனைத்தையும் செய்துதான் வருகிறோம். பாதுகாப்பு கருதி முகாம்வாசிகளிடம் அறிவுரைகள் செய்வது வழக்கம். ஆனால், எங்களால் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. காரணம், மக்களிடையே அதிகாரம் செய்கின்றனர் என்ற தவறுதலான எண்ணம் எழுகிறது," என தெரிவித்தார்.