வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 28 அக்டோபர் 2014 (10:16 IST)

இலங்கை அணியின் 'நன்றிக்கடனாக' இந்திய சுற்றுப் பயணம்

இந்தியா செல்கின்ற இலங்கை அணி வரும் நவம்பர் 2 ஆம் தேதி முதல் ஐந்து ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகின்றது.



கட்டாக், ஹைதராபாத், ராஞ்சி, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த ஐந்து ஆட்டங்களும் நடைபெறுகின்றன.
 
இலங்கை அணி குறுகிய காலஅவகாசத்தில் இந்தியா செல்கின்ற காரணத்தினால், அணி வீரர்கள் கலந்துகொண்டிருந்த 6 வாரகால உடற்தகுதி பயிற்சிகள் இடைநடுவில் கைவிடப்படுகின்றமை தொடர்பில் விமர்சினங்கள் எழுந்திருந்தன.
 
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்தில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை போட்டிகளுக்காக இலங்கை வீரர்கள் தயாராகிவருகின்ற சூழ்நிலையில் இந்தியாவிடமிருந்து வந்த திடீர் அழைப்பிலேயே இலங்கை அணி இந்தியா செல்கின்றது.
 
நவம்பர் மாத இறுதியில் இங்கிலாந்துடனான தொடரிலும் இலங்கை வீரர்கள் விளையாடவுள்ளனர். அதற்கு முன்னதாக அணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களும் இலங்கை கிரிக்கெட் வட்டாரங்களில் நிலவின.
 
இன்னொரு பயிற்சிக் களம்
 
எனினும், இலங்கை அணியின் இந்த இந்திய சுற்றுப்பயணம் அணிக்கு மேலும் ஒரு பயிற்சிக் களமாகவே அமையும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 
உலகக் கோப்பை போட்டிகளுக்கான இலங்கை அணியை தீர்மானிப்பதில் இந்திய அணியுடனான ஒருநாள் தொடர் தேர்வாளர்களுக்கு முக்கிய வாய்ப்பாக அமையும் என்று இலங்கையின் சூரியன் எப்எம் வானொலியின் விளையாட்டுத்துறை செய்தியாளர் தி. தரணிதரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
 
ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்றுவருகின்ற லசித் மாலிங்கவுக்கு பதிலாக நல்லதொரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்யும் முயற்சியில் தேர்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தரணிதரன் தெரிவித்தார்.
 
இந்தியாவில் விளையாடிவந்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, தொடரைப் அரைவாசியிலேயே ரத்து செய்வதாக அறிவித்திருந்த நிலையில், இந்தியாவுக்கு இலங்கை அணியை அனுப்பி உதவுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்திருந்தது.
 
குறைந்த கால-அவகாசத்தில் இதற்கு சம்மதித்தமைக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் இலங்கைக்கு நன்றி கூறியிருந்தது. பார்வையாளர் அரங்க டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், மூன்று டெஸ்ட் ஆட்டங்கள், ஒரு ஒருநாள் ஆட்டம், ஒரு இருபது ஓவர் ஆட்டம் ஆகிய 5 போட்டிகள் ரத்தானதால் இந்திய கிரிக்கெட் வாரியம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கும் நிலையே முன்னர் ஏற்பட்டிருந்தது.