ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 3 ஜூன் 2019 (19:58 IST)

இலங்கை நாடாளுமன்றம்: முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா!

இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்கள் பதவியை கூட்டாக ராஜிநாமா செய்துள்ளனர்.
 
தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முடியும் வரை தாங்கள் பதவியில் இருக்க விரும்பவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
முன்னதாக, முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை காரணமாக, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை தான் ராஜிநாமா செய்துள்ளதாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
 
"இன ரீதியாக முஸ்லிம்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே, முஸ்லிம்களின் சொத்துக்கள் வன்முறையின் மூலம் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீண்டும் முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு அழிவு ஏற்படக் கூடாது என்பதில் நான் கவனமாக உள்ளேன்.


 
எனவே, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், அந்த சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வேண்டியும் நான் ராஜிநாமா செய்துள்ளேன்" என்றும் ஆளுநர் ஹிஸ்புல்லா கூறினார்.
 
இதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம், இந்த ராஜிநாமா மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிபிசியிடம் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்.
 
ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ மற்றும் எம்.ஹிஸ்புல்லா ஆகியோரின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவின் ட்விட்டர் தளத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
 
முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மற்றும் இரண்டு முஸ்லிம் ஆளுநர்களை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி கண்டி நகரில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
 
அமைச்சர் ரிசாட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரையே பதவி நீக்குமாறு வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் கடந்த 31ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
 
கண்டி தலதா மாளிகைக்கு முன்னபாக அத்துரெலிய ரத்தன தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
இந்த நிலையில், அத்துரெலிய ரத்தன தேரர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பில் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர்.
 
அத்துடன், அத்துரெலிய ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கண்டி தலதா மாளிகைக்கு அருகில் சென்ற பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், நேற்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
 
இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னதாக குறித்த அரசியல்வாதிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு கலகொடஅத்தே ஞானசார தேரர் காலக்கேடு விதித்தார்.
 
இந்த நிலையில், கண்டி நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு கண்டி வர்த்தக சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.
 
இதன்படி, கண்டி நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், பல்வேறு ஆர்ப்பாட்ட பேரணிகளும் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
கண்டி நகரை சேர்ந்த வர்த்தகர்கள், தேரர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 
அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
கண்டி நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு மக்கள் நடமாட்டமும் குறைவடைந்துள்ளது.