1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (15:02 IST)

இலங்கை நெருக்கடி: 'மனித பேரழிவை ஏற்படுத்த முயற்சி' - விமல் வீரவங்ச குற்றச்சாட்டு

(இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (06/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சிலர் மனித பேரழிவாக மாற்றுவதற்கு முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுளதாக, 'தமிழ் மிரர்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

கொழும்பில், நேற்று (மே 05) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "ரஷ்ய விமானம் ஒன்று தடுத்துவைக்கப்பட்டுள்ளமையினால், ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இதுவரையில் காணப்பட்ட நட்புறவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அங்குள்ள சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படும். அத்துடன் தேயிலை ஏற்றுமதிக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளால் நாடு மேலும் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்க நேரிடும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சிலர் மனித பேரழிவாக மாற்றுவதற்கு முயற்சி நடக்கிறது" என அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

21 ஆவது திருத்த வரைவு இன்று அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிப்பு

உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்ட மூலத்தின் முழுமையான அறிக்கையினை நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், "அமைச்சரவையின் அங்கீகரத்தை பெற்று இன்றைய தினமே 21 ஆவது திருத்த வரைவினை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிட்டு ஒருவார காலத்துக்குள் வரைவினை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நீதியமைச்சர் எதிர்பார்த்துள்ளதாக நீதியமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

21 ஆவது திருத்த வரைவினை இறுதிப்படுத்தும் வகையிலான சந்திப்பு நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களும் இணக்கப்பாட்டுக்கு வந்த 4 திருத்த யோசனைகளை முழுமையாக செயற்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் சமர்ப்பிக்கும் 21 ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றால் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து ஒரு வாரகாலத்துக்குள் திருத்த வரைவு நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். 21ஆவது திருத்த வரைவு நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒருவார காலத்துக்குள் திருத்த வரைவை இலங்கை பிரஜைகள் எவரும் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் விநியோகத்தில் இனி கட்டுப்பாடு

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் டீசல் விநியோக செயற்பாட்டை மட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டீசல் கையிருப்பு குறைந்தளவில் காணப்படுவதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் டீசல் விநியோகிக்கப்படும் என அதன் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்துள்ளதாக, 'தினகரன் - வாரமஞ்சரி' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், "தற்போது தினசரி டீசல் விநியோகம் சுமார் 2,500 மெட்ரிக் டன் வரையில் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் தற்போது சுமார் 40,000 மெட்ரிக் டன் டீசல் மாத்திரமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் 9 அல்லது 10 நாட்களில் ஒரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் ஆனால் அது தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரையில் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் உதவியுடன், அடுத்த டீசல் கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டை வந்தடையும் வரையில், தற்போது கையிருப்பில் உள்ள டீசலை வைத்து தற்போதைய நிலைமையை முன்னெடுத்துச் செல்ல முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.