1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (13:39 IST)

தென் கொரியா: அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம் - இனி என்ன நடக்கும்?

South Korea

தென் கொரியா அதிபர் யூன் சுக் யோல் ராணுவ ஆட்சியை அமல்படுத்துவதற்கான முயற்சியில் தோல்வியடைந்தார். இது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பினை தூண்டியது. இந்தநிலையில் யூனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

 

 

யூனின் கட்சியான மக்கள் சக்தி கட்சியின் சில உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்து அவருக்கு எதிராக வாக்களித்தனர். இதனை தொடர்ந்து அவர் அதிபர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இந்த முடிவினை அரசியலமைப்பு நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும்.

 

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, சனிக்கிழமையன்று மாலை, அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு வெளியே யூனுக்கு எதிரான போராட்டக்காரர்கள் கூடி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

 

இந்த தீர்மானம் தனது அதிபர் பதவிக்கான தற்காலிக இடைநிறுத்தம் என்று கூறிய யூன், தொடர்ந்து போராடப் போவதாக கூறியுள்ளார்.

 

"உங்கள் விமர்சனங்கள், பாராட்டுக்கள் மற்றும் ஆதரவை நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன், மேலும் இந்த நாட்டிற்காக இறுதிவரை என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன்", என்று யூன் கூறினார்.

 

இந்த மாத தொடக்கத்தில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தியதற்காக யூன் தென் கொரியா மக்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் தற்போது அவர் பேசி இருக்கும் தொனி அதிலிருந்து மாறுபட்டதாக இருக்கின்றது.

 

வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக ராணுவ ஆட்சியை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் சாசன அமைப்பை காப்பாற்றவே இது செய்யப்பட்டுள்ளதாகவும் யூன் இதற்கு முன்பு அறிவித்திருந்தார்.

 

ஆனால் அந்த அறிவிப்பு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததால், சில மணிநேரங்களில் இது ரத்து செய்யப்பட்டது.

 

யூனை பதவி நீக்கம் செய்யக் கோரும் இந்த தீர்மானத்திற்கு தென் கொரியா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கின்றது. சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் முக்கால்வாசி தென் கொரிய மக்கள், யூன் அதிபர் பதிவில் இருக்கக்கூடாது என்றே விரும்புவதாக தெரியவந்துள்ளது.

 

பல நாட்களாக பொதுமக்கள் மத்தியில் இருந்து வந்த அழுத்தத்தைத் தொடர்ந்து தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை யூனுக்கு எதிராக வாக்களிக்க அனுமதிக்கும் முடிவினை மக்கள் சக்தி கட்சி எடுத்தது.

 

இதற்கு முன்னர் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீது வாக்களிப்பதில் இருந்து மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர். இதனால், யூனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

 

சனிக்கிழமையன்று, யூனின் கட்சியைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, தென் கொரியா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் வூ வோன்-ஷிக், "உங்களுக்கு 2024-ஆம் ஆண்டு இப்போது சிறிது மகிழ்ச்சியாக முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

 

"கொரியா குடியரசின் எதிர்காலம் மற்றும் எங்கள் நம்பிக்கை மக்களின் கைகளில் உள்ளது. அதனால் எங்களது நம்பிக்கை வலுவாக இருக்கிறது", என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் வூ கூறினார்.

 

யூனின் இந்த பதவி நீக்கத் தீர்மானம் செல்லுபடியாகுமா அல்லது அவர் மீண்டும் பதவிக்கு திரும்புவாரா என்பது குறித்து 180 நாட்களில் அரசியலமைப்பு நீதிமன்றம் முடிவெடுக்கும். பதவி நீக்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பு அமைந்தால், அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 60 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும்.

 

தற்காலிக அதிபர்

யூன் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தென் கொரியாவின் பிரதமர் ஹான் டக்-சூ தற்காலிக அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

 

அதிபர் பதவிக்கான போட்டியில் பிரதமர் ஹான் மற்றும் நிதி அமைச்சர் சோய் சாங்-மோக் ஆகிய இருவரும் உள்ளனர்.

 

ராணுவ ஆட்சியை அமல்படுத்தியது தொடர்பாக காவல்துறை விசாரணையில் இருவரது பெயரும் உள்ளது.

 

தென்கொரியாவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நாள் முழுவதும் யூனுக்கு எதிரான பல்லாயிரக்கணக்கான மக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடி இருந்தனர்.

 

அவர்கள் இந்த தீர்மானத்தை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று பாராட்டினர்

 

"இந்த தீர்மானம் நிறைவேறியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதே நேரத்தில், இந்த பிரச்னை இன்னும் முடியவில்லை," என்று பிபிசியிடம் பேசிய சிம் ஹீ-சியோன் கூறினார்.

 

" நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அதற்காக மிகவும் ஆவலுடன் இருக்கிறோம்".

 

ஆனால் தென் கொரியாவின் குவாங்வாமுன் சதுக்கத்தில் நிலைமை வேறாக இருந்தது. அங்கு யூனுக்கு ஆதரவாக பேரணி நடத்தப்பட்டது.

 

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட செய்தியை கேட்டதும் அவரது ஆதரவாளர்கள் அமைதியாக இருந்தனர். சிலர் மிகவும் கோபமாக இருந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

 

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட, மக்கள் சக்தி கட்சியின் ஆதரவு அவசியமாக இருந்தது.

 

ஏனெனில் தீர்மானத்தை தாக்கல் செய்த எதிர்க்கட்சிக்கு அதை நிறைவேற்ற 8 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது

 

கடந்த சனிக்கிழமை, எதிர்க்கட்சிகள் முதலில் யூனை பதவி நீக்கம் செய்ய முயன்றபோது, மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த சிலர் வாக்களிக்காமல் விளக்கியதால் தோல்வியில் முடிந்தது.

 

குழப்பமான சூழ்நிலை

ராணுவ ஆட்சியை அமல்படுத்த யூனின் முயற்சியை அடுத்து தென்கொரியாவில் சுமார் இரண்டு வாரங்களுக்கு குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.

 

தனது தொலைக்காட்சி உரையில், "அரசு எதிர்ப்புப் சக்திகள்" மற்றும் "வட கொரியாவின் அச்சுறுத்தல்" ஆகியவை பற்றி யூன் குறிப்பிட்டார்.

 

ஆனால் அவரது இந்த முடிவு வெளிப்புற அச்சுறுத்தல்களால் தூண்டப்படவில்லை. மாறாக அவரது சொந்த அரசியல் பிரச்னைகளால் தூண்டப்பட்டது என்பது விரைவில் தெளிவாகியது.

 

சில மணி நேரங்களுக்குப் பிறகு, 300 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 190 பேர் ராணுவ ஆட்சியை அமல்படுத்துவதற்கு எதிராக வாக்களித்தனர்.

 

யூன் அவரது இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டார்.நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

 

பின்னர் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க முயற்சிப்பதாகவும், அதற்காக 'இறுதிவரை போராடுவதாகவும்' உறுதி அளித்தார்.

 

இதுபோல நடப்பது தென்கொரியாவில் இது முதன்முறை அல்ல. கடந்த 2016-ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹேய், இதே போல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்

 

அப்போது வழக்கறிஞராக இருந்த யூன், பார்க்கிற்கு எதிரான விசாரணையை வழிநடத்தினார். இறுதியில் பார்க் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.