1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (13:56 IST)

சூரிய சக்தி மின் உற்பத்தி: ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் 14,000 ஏக்கர் சோலார் பார்க் - என்ன சிறப்பு?

Dessert
ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் உள்ள பட்லா பகுதியில் சூரிய சக்தி பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்களிடையே மாறுப்பட்ட கருத்து நிலவுகிறது.

"பட்லா கிட்டத்தட்ட மனிதர்கள் வாழ முடியாத நிலையில் உள்ளது," என்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (renewable energy) நிறுவனமான சவுர்ய உர்ஜாவின் தலைமை நிர்வாகி கேசவ் பிரசாத் கூறுகிறார்.

இந்தியாவின் ராஜஸ்தானில் அமைந்துள்ள தார் பாலைவனத்தின் ஒரு பகுதியைப் பற்றி இவர் பேசுகிறார். அங்கு வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும். அவ்வப்போது மணல் புயல் ஏற்பட்டு மனிதர்கள் வாழ முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

ஆனால், மனிதர்கள் வாழ முடியாத இந்த சூழ்நிலைதான், சூரிய எரிசக்தியை உற்பத்தி செய்யும் சிறந்த இடமாக அமைந்தது. உலகில் மிகப்பெரிய சூரிய சக்தி ஆலை இருக்கும் இடமாக பட்லா உள்ளது. இதை ஐ.எஃப் & எஃப்.எஸ் நிறுவனம் உருவாக்கி, நடத்தி வருகிறது.

கடுமையான வெப்பத்தில், இந்த பகுதியில் சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்யும் ஒரு கோடி பேனல்கள். இது 2,245 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்கி, கிட்டத்தட்ட 45 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கக்கூடியது.

மணலும், தூசியும் உள்ள சுற்றுச்சூழலில், இந்த சூரிய பேனல்களைச் சுத்தமாக வைத்திருப்பது சவாலான விஷயம் என்றாலும், மற்ற ஆலைகளை நிர்வகிப்பதை விட இது போன்ற பிரம்மாண்டமான சூரிய பேனல்கள் நிர்வகிப்பது மிகவும் எளிது என்கிறார் பிரசாத்.

"இதற்கு அதிகஉபகரணங்கள் தேவைப்படுவதில்லை. சூரிய பேனல்கள், கேபில்கள், ஆலை மின்மாற்றிகள், மின்மாற்றிகள் ஆகியவை இருந்தாலே ஓர் ஆலை நடத்தப் போதுமானது," என்கிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நிறைவடைந்த இந்த ஆலை கட்டும் பணி, இந்தியாவின் மிகவும் ஒதுக்கப்பட்ட பகுதிக்கு முதலீட்டையும் வாய்ப்புகளையும் அளித்துள்ளன.

"இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான சிறுவர்கள் அதிகம் படிக்கவில்லை. அவர்களின் வாழ்க்கை இந்த கிராமத்தையே சுற்றியுள்ளதால், அவர்களுக்கு பெரிய லட்சியங்கள் இல்லை. எங்களுடைய பெற்றோர் விவசாயிகள் அல்லது கால்நடைகளை வளர்ப்பவர்கள். ஆனால், இந்த ஆலை கட்டப்பட்டது முதல், என்னுடைய கிராமத்தை விட இந்த உலகம் பெரியது என்று உணர்ந்தேன்," என்கிறார் 18 வயதான முக்தியார் அலி.
BBC

"பட்லா பார்க் (ஆலையின் பெயர்) காரணமாக பல பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் படித்தவர்கள் எங்கள் கிராமங்களுக்கு வருகிறார்கள். இது எனது வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது," என்று அவர் கூறுகிறார்.

" அதிகாரம், மரியாதை, மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய (இந்த ஆலைலயில்) ஓர் அதிகாரியாக நான் ஆக விரும்புகிறேன்," என்று அவர் கூறுகிறார்.

அனைவருக்கும் மகிழ்ச்சியில்லை

ஆனால் எல்லோரும் தங்கள் வீட்டு வாசலில் கட்டப்பட்டுள்ள மாபெரும் சோலார் பார்க் குறித்து மகிழ்ச்சியடையவில்லை.

இந்த பார்க்கை கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட 14,000 ஏக்கரில் பெரும்பாலான இடம் அரசுக்கு சொந்தமானது. ஆனால் உள்ளூர் விவசாயிகள் அங்கு தங்கள் கால்நடைகளை மேய்த்து வந்தனர்.

எங்களுக்கு பெரும்பாலும் வாழ்வாதாரமாக இருப்பது கால்நடை வளர்ப்புதான்," என்று பட்லா கிராமத்தின் தலைவர் சதார் கான் கூறுகிறார்.

"அரசு நிலங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டதால், கால்நடை மேய்ச்சலுக்கு எங்களிடம் போதுமான நிலம் இல்லை. எங்களிடம் சில கால்நடைகள் மட்டுமே உள்ளன," என்று அவர் கூறுகிறார்.

இந்த பார்க் அமைக்கப்பட்டதால் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை அவர் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் அந்த வேலைகளில் பலவற்றில் வாழ்வதற்கு போதுமான ஊதியம் இல்லை என்று கூறுகிறார்.

"இந்த பார்க்கில், தொழிலாளர் வேலையை தவிர உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் இல்லை. ஏனெனில் எங்களுள் பெரும்பாலோர் படிக்காதவர்கள்."

பல உள்ளூர் மக்களுக்கு இன்னும் மின் இணைப்பு இல்லை என்றும் சதார் கான் புகார் கூறுகிறார்.

"நாங்கள் மின்சாரம் உற்பத்தி செய்கிறோம். ஆனால் , அருகிலுள்ள பல கிராமங்களில் இன்னும் மின்சாரம் இல்லை. இங்கு மிகப்பெரிய சோலார் பார்க் இருப்பது நல்லது. ஆனால் அது எங்கள் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்," என்கிறார்.

சதார் கானின் இந்த புகார்களை, ராஜஸ்தான் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனில் டாக்கா மறுத்தார். அரசுக்கு சொந்தமான அவரது நிறுவனம், ராஜஸ்தானில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மேற்பார்வையிடுகிறது.

"பட்லா பார்க்கை பொருத்த வரையில், நிலத்திற்கு இழப்பீடு கேட்டு அதிகாரபூர்வமான புகார்களோ அல்லது குறைகளோ எதுவும் வரவில்லை. பட்லா பார்க் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கு சொந்தமானது," என்று அவர் கூறுகிறார்.

மேற்கு ராஜஸ்தானில் சூரிய மின்சக்தி திட்டங்களில் முதலீடு செய்தால் நிலத்தின் விலையும், வாடகையும் உயர்ந்துள்ளன. அதனால் பல சிறுதொழில் உரிமையாளர்கள் பயனடைந்துள்ளனர் என்று டாக்கா கூறுகிறார்.
 
BBC

மேலும், மின் இணைப்பு பிரச்னை எளிமையான ஒன்றல்ல என்றும் அவர் விளக்குகிறார். பட்லா சூரிய சக்தி ஆலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உயர் மின்னழுத்தத்தில் உள்ளதால், உள்ளூர் கிராமங்களுக்கு நேரடியாக வழங்க முடியாது. ஆனால் பட்லா போன்ற ஆலைகள் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து மின்சாரத்தின் விலையை கணிசமாகக் குறைப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவின் சுமார் 75% நிலக்கரியை எரிப்பதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் 2030ஆம் ஆண்டில், இந்த மின்சாரம் உற்பத்தியில் 40%, சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் வர வேண்டும் என்று அரசு விரும்புகிறது. அதற்கு நிறைய நிலம் தேவைப்படும்.

இந்த நூற்றாண்டின் மத்தியில் இந்தியா நிகர-பூஜ்ஜிய உமிழ்வை (net-zero emissions) இலக்காகக் கொண்டால், அது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1.7% முதல் 2.5% வரை சூரியசக்தி பேனல்களை கொண்டிருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம் (IEEFA) நடத்திய ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 34 பெரிய சூரிய சக்தி திட்டங்கள் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. ஆகவே, அவை அமைக்கப்படும் இடங்கள் குறித்து மேலும் சர்ச்சை ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மிகப்பெரிய மாற்றத்திற்கு பெரும் வளங்கள் தேவைப்படுகின்றன. மேலும் இதில் நிலம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்," என்கிறார் என்விரோன்மெண்ட்ல் சப்போர்ட் குரூப்பின் (Environmental Support Group) முதுநிலை ஆராய்ச்சியாளர் பார்கவி எஸ் ராவ்.

"நிலம் சார்ந்த மிகப்பெரிய-எரிசக்தி திட்டங்களை ஊக்குவிக்கும் நடைமுறையில் உள்ள மாதிரியானது, ஒரு முரண்பாடாண சூழ்நிலையை உருவாக்குகிறது. ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மற்றும் அரசு தலைமையிலான அமைப்புகளால் விவசாயிகள் சூழப்பட்டுள்ளனர். விவசாயிகள் தங்கள் நிலத்தை குத்தகைக்கு விடவும் விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

இதுவரை, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மாற்றம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், பிரச்னை ஆங்காங்கே உள்ளது. ஆனால் திட்டமிடப்பட்ட வளர்ச்சியின் அளவைப் பொருத்தவரை, நிலைமை மோசமாகிவிடும்.

"2030ஆம் ஆண்டுக்குள் விவசாயிகள் தங்கள் நிலங்களை கொடுக்க கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள். இது விவசாய சமூகத்திற்கு, குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பிரச்னையாக இருக்கும்."

பார்க்வி எஸ் ராவின் கூற்றுகள் குறித்து, பிபிசி தொடர்பு கொண்டபோது, ராஜன்தான் அரசு பதிலளிக்க விரும்பவில்லை.

ஆனால் மீண்டும் பட்லாவில், ராஜஸ்தானின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை தலைமை தாங்கும் பிரசாத், அங்குள்ள மாபெரும் சோலார் ஆலை உள்ளூர் மக்களுக்கு நல்லது என்று வலியுறுத்துகிறார்.

"சோலார் பார்க்கைச் சுற்றி சுமார் 60 கிராமங்கள் பயனடைந்துள்ளன. வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன." என்கிறார்.

"இங்கு முன்பு மருத்துவ வசதிகள் இல்லை, ஆனால் இப்போது மொபைல் மருத்துவ வேன்கள் கிராமங்களுக்குச் செல்கின்றன. ஆகவே இது பசுமை எரிசக்தியைப் பற்றியது மட்டுமல்ல. இது மக்களின் முன்னேற்றமும் கூட," என்கிறார்.

Updated By: Prasanth.K