1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: ஞாயிறு, 27 ஜூலை 2014 (11:58 IST)

ஓமந்தையில் நிறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் வண்டியில் கஞ்சா: பொலிஸ்

கொழும்பில் இரண்டு நாள் ஊடகப் பயிற்சியொன்றிற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றபோது, ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து வெள்ளிக்கிழமை இரவு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏழு ஊடகவியலாளர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த ஊடகவியலாளர்கள் பயணம் செய்த வாகனத்தில் சிகரட் பெட்டியொன்றில் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்தே வாகனமும் ஊடகவியலாளர்களும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டதாகக் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
 
வாகன சாரதியையும் ஊடகவியலாளர்களையும் வாகனத்துடன் 6 மணித்தியாலங்கள் தடுத்து வைத்திருந்த காவல் துறையினர், சாரதியைக் கைது செய்து நீதிமன்றத்தில் அவரை ஆஜர் செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தனர்.
 
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கொண்டிருந்த தங்களுடைய வாகனத்தை மாங்குளம் பகுதியில் இராணுத்தினர் மறித்து சோதனையிட்டு அனுப்பி வைத்ததாகவும், தாங்கள் ஓமந்தை சோதனைச் சாவடியை வந்தடைந்தபோது அங்கேயும் இராணுவத்தினர் சோதனையிட்டதாகவும் ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர்.
 
ஓமந்தையில் சோதனையிட்ட இராணுவத்தினர் தங்களுடைய வாகனத்தில் சிகரட் பெட்டியொன்றில் கஞ்சா இருந்ததைக் கண்டுபிடித்ததாகக் கூறி, விசாரணை செய்தபோது கடுமையாக நடந்து கொண்டதாகவும், பின்னர் தங்களை ஓமந்தை காவல் துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஓமந்தை காவல் துறையினர் வாகன சாரதியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து அவரைக் கைது செய்ததையடுத்து, உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து, தாங்கள் காவல் துறையிடம் முறைப்பாடு செய்ய வேண்டும் என கூறியபோது, தங்களுடைய முறைப்பாட்டை ஏற்பதற்குக் காவல் துறையினர் முதலில் மறுத்துவிட்டதாவும், அதனையடுத்து தாங்கள், ஏ 9 வீதியை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் தமது முறைப்பாட்டை அவர்கள் பதிவு செய்ததாகவும் ஊடகவியலாளர்கள் விபரம் தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து கொழும்பு நோக்கி வேறு வாகனத்தில் அந்த ஊடகவியலாளர்கள் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.
 
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட வாகன சாரதியை பிணையில் செல்ல அனுமதித்துள்ள காவல் துறையினர், வாகனத்தைத் தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளனர்.
 
இதே வேளை கொழும்பில் ஊடகப் பயிற்சி நடைபெறவிருந்த இலங்கை மண்டபத்திற்கெதிரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றினையடுத்து, அந்தப் பயிற்சி நெறியும் கைவிடப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
 
கொழும்பு சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
யாழ் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் ஊடக சுதந்திர உரிமை மீறல் என்றும் வர்ணித்துள்ள வடமாகாண விவசாயத் துறை அமைச்சர் ஐங்கரநேசன், ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளைக் கண்டித்துள்ளதுடன், ஜனநாயக ஊடகக் குரலை ஒடுக்க முற்படுவோர்களுக்கு எதிராக இன, மொழி பேதங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
 
இராணுவம் மறுப்பு
 
யாழ்ப்பாணத்தில் இருந்து ஊடகப் பயிற்சிக்காகக் கொழும்புக்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் இடைஞ்சல் ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது அபாண்டமான குற்றச்சாட்டு என்று இராணுவ பேச்சாளர் மறுத்துள்ளார்.
 
வான் ஒன்றில் பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாகப் பேருந்து ஒன்றில் வந்த ஒருவர் அளித்த தகவலையடுத்து, இராணுவத்தினரும் காவல் துறையினரும் வழமை போல நடத்திய சோதனையின்போதே சிகரட் பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
 
அதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே அந்த வாகனத்தில் ஊடகவியலாளர்கள் பயணம் செய்தமை தெரியவந்ததாகவும் இராணுவ பேச்சாளர் சனிக்கிழமை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் விபரித்துள்ளார்.