வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Updated : வியாழன், 24 ஜூலை 2014 (08:59 IST)

காண்டாமிருகத்தை வேட்டையாடிய ஒருவருக்கு 77 ஆண்டுகள் சிறை

தென் ஆப்ரிக்காவில் காண்டாமிருகத்தை வேட்டையாடிய ஒருவருக்கு, இதுவரை இல்லாத வகையில் 77 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக காண்டாமிருகங்களைக் கொன்று, அதன் கொம்புகளை வெட்டி விற்பனை செய்யும் நோக்கில் செயல்படுபவர்களுக்கு, ஒரு பாடம் புகட்டும் நோக்கிலேயே இந்த அளவுக்கு மிக நீண்டகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் கொம்புகள், ஆசிய நாடுகளில் பெருந்தொகைக்கு விற்கப்படுகின்றன.

இப்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ள மண்ட்லா சௌகேவுக்கு வேலை ஏதும் இல்லை. அவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை.

கடந்த 2011 ஆம் ஆண்டு, க்ரூகர் தேசிய பாதுகாப்பு சரணலாயத்தில், மூன்று காண்டாமிருகக் குட்டிகளை அவர் கொன்றார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அந்தக் குற்றத்துக்காக இப்போது 77 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலைக் குற்றச்சாட்டு வழக்கிலும் அவர் குற்றவாளி என்று கண்டறியப்பட்டுள்ளார்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தத் தீர்ப்பை, நாட்டின் கிழக்குப் பகுதி நகரான நெல்ஸ்ப்ரூயிட் நகரின் நீதிபதி ஷீலா மிசிபி வழங்கியபோது, குற்றச்சாட்டப்பட்ட சௌகே, அனைத்து விஷயங்களையும் தாமாகேவே முன்வந்து செய்தார் என்று சுட்டிக்காட்டினார்.

கடும் தண்டனை விதித்து, இதுவரை இல்லாத வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பை ஆப்ரிக்க வனவிலங்கு சரணாலயங்கள் பாதுகாப்புக் குழுவின் தலைவர் ரெனால்ட் தகுலி வரவேற்றுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையை பெரிதும் சார்ந்திருக்கும் நிலையில், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது அதன் மீது எதிர்மறையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை, நீதிமன்றங்கள் உணர்ந்துள்ளன என்று அவர் கூறுகிறார்.

ஆசியாவின் கள்ளச் சந்தைகளில் காண்டாமிருகத்தின் கொம்பு ஒன்று, 150,000 டாலர்கள் அளவுக்கு கைமாறும் வாய்ப்புகள் உள்ளன.

சீனா மற்றும் வியட்நாமில், காண்டாமிருகத்தின் கொம்புக்கு மருத்துவக் குணங்கள் உள்ளன என்று பலர் நம்பினாலும், அதற்கு போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை.

தென் ஆப்ரிக்காவில், இந்த ஆண்டு மட்டும் 500க்கும் அதிகமான காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளன.