1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (15:02 IST)

வட தமிழ்நாட்டில் கன மழைக்கான ரெட் அலர்ட் - 10 முக்கியத் தகவல்கள்

வட தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
 
1. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
 
2. ஆரம்பத்தில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுப்பெறாது என கணிக்கப்பட்டது. ஆனால், இப்போது, இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
 
3. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இப்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 300 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டிருக்கிறது. இது நாளை காலை சென்னைக்கு அருகில் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
 
4. இதன் காரணமாக கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
 
5. சேலம், பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும்.
 
6. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிக அளவாக திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தாராபுரத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
 
7. தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துவருவதால் 26 மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
8. வைகை அணியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2,668 கன அடியிலிருந்து 4,420 கன அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 141 அடியை எட்டியது நீர் மட்டம்.
 
9. மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியுள்ளது. அணைக்கு வரும் 45,000 கன அடி நீர் (விநாடிக்கு) அப்படியே திறந்துவிடப்படுகிறது.
 
10. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 17.11.2021 இரவு 10.00 மணிக்கு 104.01 அடியை எட்டியது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மூலம் அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து எதிர்பார்க்கப்படுவதால் அணையின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நீர்மட்டத்தை 104.00 அடியில் பராமரிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கு மேல் வரும் நீர் காலை 6.00 மணி முதல் திறந்துவிடப்படுகிறது.