வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 26 நவம்பர் 2014 (03:20 IST)

வேர்களை வெறுக்கும் விழுதுகள்

கால்நூற்றாண்டுக்கு முன்னர் பெண் சிசுக்கொலைகள் நடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய தமிழ்நாட்டில் இன்று பெற்றோர் கொலைகள் நடக்கத்துவங்கியிருக்கின்றன.


 
தமிழ்நாட்டின் முதியோர் பராமரிப்பின் மோசமான நிலைமையே இத்தகைய மவுனக்கொலைகள். இந்த நிலைமை உருவானதற்கான சமூக, பொருளாதார, கலாச்சார பின்னணியை ஆராயும் பெட்டகத்தொடரின் முதல் பகுதி.
 
"100 கிராமங்களில் மட்டும் 200 பேர் கொலை?"
 
மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு நிறுவனமான யுரைஸ் என்கிற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் நூறு கிராமங்களில் மட்டும் 150 முதல் 200 முதியோர் கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
 
இந்த நிலைமை வெறும் மதுரைப்பிராந்தியத்தில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டின் வேறு இடங்களிலும் இத்தகைய பெற்றோர் கொலைகள் நடந்திருக்கின்றன. இன்றும் நடப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலும் பெற்றோர்கள் அவர்களின் சொந்த பிள்ளைகளாலேயே கொல்லப்படுகிறார்கள்.
 
இத்தகைய முதியோர் கொலைகள் நடப்பது சம்பந்தப்பட்ட ஊரில் அல்லது பகுதியில் எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. ஆனால் யாரும் அதுகுறித்து பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் அது சட்டப்படி தண்டிக்கப்படுவதும் இல்லை. போதுமான சட்டரீதியிலான சாட்சியங்கள் இல்லை என்று கூறி எல்லோரும் இந்த பிரச்சனையை ஒன்று புறந்தள்லப்பார்க்கிறார்கள்; அல்லது வேகவேகமாக கடந்து செல்ல முயல்கிறார்கள்.
 
தற்கொலைத்தூண்டுதல் தவறினால் முதியோர் இல்லம்
 
மேலும் எல்லா வீட்டில் வேண்டப்படாத எல்லா முதியவர்களும் கொல்லப்படுவதும் இல்லை. பலர் தற்கொலையை நோக்கி படிப்படியாக தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் பெற்றோரை முதியோர் இல்லத்தில் பலவந்தமாக கொண்டுபோய் சேர்த்துவிடுகிறார்கள். சில சமயம் அந்த முதியவர்களுக்குத் தெரியாமலே கூட. இன்னும் பல சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் புறக்கணிப்பு மற்றும் வன்முறைகளை பொறுக்க முடியாமல் முதியவர்களில் பலர் தாமாகவே முதியோர் இல்லம் தேடி ஓடும் சூழலும் நிலவுகிறது.
 
ஆனால் முதியோர் இல்லங்களின் பராமரிப்பு சூழலோ அப்படி ஒன்றும் நல்லபடியாக இல்லை. குறிப்பாக இலவச முதியோர் இல்லங்களின் நிலைமை மோசமாகவே இருக்கிறது. கவுரவமான சிறைக்கூடம் என்று வர்ணிக்கும் அளவுக்குத்தான் சில முதியோர் இல்லங்களின் இருப்பு இருக்கிறது.
 
இப்படியான முதியோர் இல்லம் தேடிச்செல்ல விரும்பாத அல்லது முடியாதவர்கள் அல்லது முதியோர் இல்லத்தில் இடம் கிடைக்காதவர்கள் தமது பிள்ளைகளுடன் தொடர்ந்து இருக்க நேரும்போது செய்யவேண்டிய விட்டுக்கொடுப்புக்கள் ஏராளம். குறைந்தபட்சத் தேவையான மூன்றுவேளை சாப்பாட்டு கூட பல முதியவர்களுக்கு ஒழுங்காக கொடுக்கப்படுவதில்லை.

முதியோர் அனைவருக்கும் நிதியுதவி அளிக்க முடியுமா?
 
இப்படியாக, 21 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சமூக அவலமாக மாறிக்கொண்டிருக்கும் முதியோர் பராமரிப்புக்கு பின்னால் வலுவான பொருளாதார காரணிகளும் இருக்கின்றன.
 
உதாரணமாக தமிழக அரசு மாதந்தோரும் ஏழை முதியோர் பராமரிப்புக்காக ஆளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தருகிறது. இந்த உதவித்தொகையை தமிழ்நாட்டின் 75 லட்சம் முதியவர்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை எழுப்புகிறார்கள். ஆனால் அப்படி செய்யவேண்டுமானால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிதியில் 10 சதவீதம் அதற்கு மட்டுமே செலவாகும். அவ்வளவு நிதிவசதி தமிழக அரசிடம் இல்லை. விளைவு பல முதியோர்களுக்கு இந்த நிதிஉதவி கிடைக்கவில்லை.
அதேபோல முதியோருக்குத் தேவைப்படும் சிறப்பு மருத்துவ வசதிகளும் தமிழ்நாட்டில் போதுமானதாக இல்லை. இருப்பவையும் தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் மட்டுமே இருக்கின்றன. கிராமப்புற முதியவர்கள் தான் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்.
 
பெண் முதுமை என்னும் பெருஞ்சுமை
 
இதில் கூடுதலான கவலை தரும் அம்சம் என்னவென்றால், ஆதரவு தேவைப்படும் முதியோரில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகம். இத்தகைய வயதான மூதாட்டிகள் பலருக்கு ஓய்வூதியமும் இல்லாமல், உடல் நலமும் குறைந்த நிலையில் தனிமை சூழ் முதுமை பெரும் பாரமாக இருந்து அவர்களை அழுத்துகிறது.
 
முதுமை, தனிமை, இயலாமை, வறுமை என தமிழ்நாட்டின் முதியோர் பராமரிப்பில் நிலவும் வெறுமையும் விரக்தியும் சூழ்ந்த அந்திமவாழ்வின் அவலங்களை அலசும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்துப்பேசும் பெட்டகத்தொடர் பிபிசி தமிழோசையில் ஞாயிறுதோறும் இடம்பெறும்.

தமிழ்நாட்டில் தற்போது முதியோர் பராமரிப்பு என்பது மிகப்பெரிய சமூக சிக்கலாக மாறியதற்கான முதன்மைக்காரணிகளில் முக்கியமானது தமிழ்ச்சமூகத்தில் உடைந்து சிதறிய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையும், பெருகிவிட்ட சிறுகுடும்ப வாழ்வும் என்கிறார்கள் சமூகவியலாளர்கள்.


 
ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு என்பது குடும்பம் என்கிற அமைப்பு. பல தலைமுறைகளாக தமிழ்ச்சமூகம் என்பது கிராமப்புற விவசாய சமூகமாக இருந்தது. அதில் பெரும்பாலானவை கூட்டுக்குடும்பங்களாக இருந்தன. இத்தகைய கூட்டுக்குடும்ப முறையில் ஒரே குடும்பத்தில் திருமணமான பல பெண்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் முதியோர் பராமரிப்பு என்பது இயல்பாக, எளிதாக இருந்தது என்கிறார் கோவையில் இருக்கும் பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் முதியோர் பராமரிப்புத்துறையின் ஒருங்கிணைப்பாளர் ச அருள்மொழி.
 
குடும்பநலத்திட்டம் கூட்டுக்குடும்ப சிதைவை வேகப்படுத்தியது
 
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டில் சிறுகுடும்பம் என்கிற கருத்தாக்கமும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்கிற வலுவான பிரச்சாரமும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாக தமிழ்ச்சமூகத்தில் இருபத்திஓராம் நூற்றாண்டில் கூட்டுக்குடும்பம் என்கிற அமைப்பு காணாமல் போய்விட்டது. ஒட்டுமொத்த இந்தியாவில் மிகவும் குறைவான பிறப்பு விகிதம் கொண்ட பெரிய மாநிலம் தமிழ்நாடு என்கிற நிலையும் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் பராமரிப்பு தேவைப்படும் முதியோரின் எண்ணிக்கை அதிகமாகவும், அவர்களை பராமரிக்க வேண்டிய இளையோரின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கும் சென்னை வளர்ச்சி நிறுவனத்தின் துணைப்பேராசிரியர் விஜயபாஸ்கர், இது முதியோர் பராமரிப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
 
முதியோர் பராமரிப்பிலிருந்து விலகிய பெண்கள்
 
ஒரு பக்கம், கூட்டுக்குடும்பம் சிறுத்து தனிக்குடும்பமானது மட்டுமல்ல, குடும்பம் என்கிற அமைப்பிற்குள்ளேயே தலைமுறை தலைமுறையாக எந்த எதிர்க்கேள்வியும் கேட்காமல் முதியோரை முழுநேரமும் பராமரித்துவந்த பெண்கள், அதிலிருந்து விலகவேண்டிய பரிணாம வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டுகிறார் பெண்ணியவாதி ஓவியா.
 
நன்கு கல்விகற்ற, வேலைக்குப்போய் சம்பாதிக்கக்கூடிய, சுயமரியாதை மிக்க பெண்கள் இனியும் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளையும் முதியோரையும் முழுநேரமும் பராமரிக்கும் தாதிகளாக மட்டும் தொடர்ந்து இருக்கவும் முடியாது; இயங்கவும் முடியாது என்கிறார் ஓவியா.
 
சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பம், அந்த குடும்பத்தில் முதியோரை பராமரிப்பதை முழுநேர வேலையாக செய்துகொண்டிருந்த பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஆகிய காரணங்கள் தவிர, ஒட்டுமொத்த இந்தியாவில் வேகமாக நகர்மயமாகும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதும் முதியோரின் இன்றைய நிலைமைக்கு முக்கிய காரணம் என்கிறார் விஜயபாஸ்கர்.
 
அதிகபட்ச நகர்மயமான மாநிலம் தமிழ்நாடு
 
இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் பெருமளவு கிராமப்புறம் சார்ந்த விவசாய வருமானமாக இருந்தது. ஆனால் இன்றைய தமிழ்நாட்டின் மொத்த வருமானத்தில் விவசாயத்தின் பங்கு வெறும் 8 சதவீதமாக சுருங்கிவிட்டது என்கிறார் விஜயபாஸ்கர்.
இதன் விளைவாக படித்த கிராமப்புற இளம் தலைமுறையினர் விவாசயத்தை விட்டும் கிராமங்களைவிட்டும் நகரங்களை நோக்கி வரவேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்திருப்பதாக கூறுகிறார் பாஸ்கர். இந்த வரலாற்றுப்போக்கின் விளைவாக கிராமங்களில் விடுபட்டுப்போகும் எச்சமாக தொக்கி நிற்கும் முதியவர் நிலைமை மோசமாவதாக கூறுகிறார் முதியவர்களுக்கான தேசிய கூட்டமைப்பின் துணை இயக்குநர் ஆர் சுப்பராஜ்.
 
ஆயுட்காலத்தை அதிகரித்திருக்கும் மருத்துவ முன்னேற்றம்.
 
கூட்டுக்குடும்ப அமைப்பின் சிதைவு, குடும்பத்து முதியவர்களை பராமரிப்பதில் குறைந்துவரும் பெண்களின் பங்களிப்பு, வேகமான நகர்மயமாதல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, மருத்துவ விஞ்ஞான முன்னேற்றங்கள் தமிழர்களின் வாழ்நாளை மிகப்பெரிய அளவுக்கு அதிகப்படுத்தியிருப்பதும் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம் என்கிறார் இந்தியாவின் முன்னணி முதியோர் மருத்துவர்களில் ஒருவரான வி எஸ் நடராஜன்.
 
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 40 ஆண்டுகள் என்றிருந்த நிலைமை மாறி, இன்று தமிழர்களின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகளைத்தாண்டி வேகமாக உயர்ந்து கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டுகிறார் நடராஜன்.
 
இப்படி அதிக ஆயுட்காலம் வாழநேரும் முதியவர்களை கையாள்வதற்குத் தேவைப்படும் பக்குவம் இளம்தலைமுறையினரிடம் போதுமான அளவு இல்லை என்று கூறும் ஹெல்ப் ஏஜ் இந்தியா என்கிற முதியவர்களுக்கான தொண்டு நிறுவனத்தின் துணை இயக்குநர் சத்தியபாபு, இவர்களில் சிலர் பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகளாக மாறிவிடுகிற அவலமும் தமிழ்நாட்டில் பரவலாகநடக்கிறது என்கிறார்.

தமிழ்நாட்டில் மதுரை மற்றும் அதையொட்டிய விருதுநகர் மாவட்டங்களில் நடப்பதாக கருதப்படும் முதியோர் கொலைகள் சமீபகாலமாக சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தொகுக்கப்பட்டு வருகின்றன. அப்படியான முதியோர் சந்தேக மரணங்கள் மற்றும் கொலைகளை தடுப்பதற்கான களப்பணி செய்துவரும் தொண்டு நிறுவன ஊழியர் முத்துப்பிள்ளை. இந்த இரு மாவட்டங்களில் முதியோர் கொலைகள் பரவலாக நடப்பதை தன்னுடைய களப்பணியில் கண்டறிந்ததாக பிபிசி தமிழோசையிடம் விவரித்தார் முத்துப்பிள்ளை.


 
தனக்குத்தெரிய வந்த முதியோர் சந்தேக மரணம் மற்றும் கொலைகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் விளக்கிய அவர் தென்னை மரத்தைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்வதற்கான பூச்சிக்கொல்லி மாத்திரைகள் முதியோர்களைக் கொல்லவும் பரவலாக பயன்படுத்தப்படுவதாக கூறினார். பல சம்பவங்களில் இந்த பூச்சிக்கொல்லி மாத்திரைகள் முதியவர்களின் நோய்தீர்க்கும் மருந்து என்று கூறி அவர்களின் வாரிசுகளால் அவர்களுக்கு கொடுக்கப்படுவதாகவும், சிலசமயங்களில் தம் நோயின் கடுமை அல்லது தங்களின் பிள்ளைகளின் புறக்கணிப்பு ஆகியவற்றை தாள முடியாத முதியவர்கள் தாமாகவே முன்வந்து இந்த மாத்திரைகளை வாங்கி அரைத்து குடிப்பதாகவும் தெரிவித்தார்.
 
குடும்பத்துக்கு தெரிந்தே கொலைகள் நடக்கின்றன
 
சில சமயம் இத்தகைய கொலைகள் சம்பந்தப்பட்ட முதியவர்களின் மருமகள்களால் மகன்களுக்குத் தெரியாமல் நடத்தப்பட்டாலும் பெரும்பான்மையானவை மகன்களுக்கும் தெரிந்தே அவர்களின் துணையுடனே செய்யப்படுவதாக கூறுகிறார் மற்றொரு களப்பணியாளர் ராசாத்தி. இத்தகைய சந்தேக மரணங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு மட்டுமல்ல, பெரும்பாலும் ஒட்டுமொத்த ஊருக்கும் தெரியும் என்கிறார் அவர்.
 
சொத்துக்காக, பணத்துக்காக, பராமரிக்க முடியாமல் என்று பலப்பல காரணங்களுக்காக இத்தகைய முதியோர் படுகொலைகள் நடப்பதாக ஆய்வுகள் கூறினாலும், படுத்த படுக்கையாக கிடக்கும் முதியோர்கள் தான் பெருமளவில் இப்படி பலவந்தமாகக் கொல்லப்படுகிறார்கள் என்கிறார் ராசாத்தி.

தொடரும் முதியவர்களின் கொலைகளுக்கு மத்தியில் அவற்றுக்கு சமாந்திரமாக, முதியோர் தற்கொலைகளும் இந்த பகுதியில் அதிகம் நடக்கின்றன என்கிறார் மற்றொரு களப்பணியாளர் செல்வராணி. குறிப்பிட்ட ஒரு கிராமத்தின் தலையாரியாக இருந்து பணி ஓய்வு பெற்ற ஒரு முதியவர், தன்னுடைய குடும்பத்தவர் தன்னை சரியாக பராமரிக்காத நிலையில், ஊரின் மயானத்தில் இருக்கும் சிதையை எரியூட்டும் மேடையில் சென்று படுத்துக்கொண்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார் செல்வராணி. காரணம் தன்னுடைய தகன செலவுக்கு யார் பணம் செலவழிப்பது என்பது தொடர்பில் தன் வாரிசுகள் மத்தியில் சண்டை வரக்கூடாது என்பதே அந்த முதியவரின் நோக்கமாக இருந்திருக்கக் கூடும் என்கிறார் அவர்.
 
வெளி உலகுக்கு வேண்டுமானால் பெருமளவில் இந்த முதியோர் சந்தேக மரணங்கள் அல்லது கொலைகள் குறித்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் இத்தகைய மரணங்கள் நடந்த ஊர்களில் ஏறக்குறைய ஒட்டுமொத்த ஊருக்கே இவை குறித்து தெரிந்தே இருக்கிறது. குறிப்பாக இத்தகைய கொலைகள் நடப்பதற்கு முன்பு தெரியாவிட்டாலும் நடந்து முடிந்தபிறகு பெரும்பாலான சம்பவங்கள் ஊராருக்கு தெரியவருகிறது.
 
உறவுகள் செய்யும் கொலைகளை ஊரார் கண்டுகொள்வதில்லை
 
ஆனால் யாரும் இத்தகைய மரணங்கள் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை; ஆராய்வதும் இல்லை. காரணம் வயதான பெற்றோர்கள் அவர்களின் சொந்தப்பிள்ளைகளால் கொல்லப்படும் நிகழ்வுகள் தினசரி செய்தியாகிவிட்ட சூழலில் இப்படிப்பட்ட சந்தேக மரணங்கள் சமூகத்தால் வெகு எளிதில் கடந்து செல்லப்படுகின்றன.
 
முதுமை என்பது வாழ்வின் இயல்பானதொரு வளர்ச்சி நிலை. ஆனால் முதுமை என்பது மரணத்தை எதிர்நோக்கி வெறுமனே காத்திருக்கும் வாழ்நிலை என்கிற கருத்து பரவலாக கடைபிடிக்கப்படும் தமிழ்ச்சமூகத்தில் இப்படியான மறக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட முதியோரின் சந்தேக மரணங்கள், கொலைகள் ஏராளம். அவை இன்றும் நின்றபாடில்லை.