'பொன்னியின் செல்வன் - 2' ஏப்ரல் 28இல் ரிலீஸ் - லைகா அறிவிப்பு!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டது.
இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகுமெனத் தெரியாமல் இருந்த நிலையில், 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமென தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் இரு பாகங்களுக்குமான படப்பிடிப்புப் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், முதல் பாகத்திற்கான படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் முடிக்கப்பட்டு, அந்த பாகம் வெளியானது. தற்போது இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
கல்கி ஐந்து பாகங்களாக எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.
ராஜராஜசோழனின் தந்தையான இரண்டாம் பராந்தகச் சோழன் காலத்தில் இந்தப் படத்தின் கதை நடக்கிறது.
இரண்டாம் பராந்தகச் சோழனுக்குப் பிறகு, யார் பட்டத்திற்கு வருவது என்பது குறித்த சதியே இந்தக் கதையின் மையம்.
முதலாம் பாகத்தில், முக்கியக் கதாபாத்திரங்களின் அறிமுகம், கடம்பூர் சதிக் கூட்டம், வந்தியத்தேவன் இலங்கைக்குச் சென்று அருள்மொழிவர்மனைச் சந்திப்பது, நண்பராவது போன்ற பகுதிகள் இடம்பெற்றிருந்தன. இலங்கையிலிருந்து அருள்மொழி வர்மன் திரும்பும்போது, புயலில் சிக்கி கடலில் வீழ்ந்தவுடன் மந்தாகினி தேவி அவனை மீட்பதுடன் முதல் பாகம் முடிவுக்கு வந்தது.
ஆகவே, இந்த இரண்டாம் பாகத்திலேயே ஆதித்த கரிகாலனின் படுகொலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் இடம்பெறவிருக்கின்றன.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.