1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (16:44 IST)

பொள்ளாச்சி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டால் நீதி கிடைக்குமா?

பொள்ளாச்சியில் கல்லூரி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றியதோடு, சிபிஐக்கு பரிந்துரை செய்துள்ளது என்ற கருத்து நிலவுகிறது.
சிபிஐ மற்றும் சிபிசிஐடி ஆகிய விசாரணை அமைப்புகள் ஆளும்கட்சிக்கு சாதகமாக அல்லது அவற்றின் கைப்பாவையாகச் செயல்படுவதாக எப்போதும் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் விமர்சனங்கள் வைக்கின்றனர். இந்நிலையில் பரபரப்பான வழக்குகள் ஏன் சிபிசிஐடிஅல்லது சிபிஐ போன்ற அமைப்புகளிடம் விசாரணைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன, அவ்வாறான வழக்குகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை கவனிக்கவேண்டியுள்ளது.
 
ஒரு வழக்கு சிபிசிஐடி அல்லது சிபிஐக்கு மாற்றப்பட்டவுடன் அந்த வழக்கு மீதான கவனம் பொதுத்தளத்தில் குறைந்துவிடுகிறது என்ற கருத்தை வைக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.
 
''பரபரப்பான வழக்கு சிபிசிஐடி அல்லது சிபிஐக்கு மாற்றப்பட்டவுடன், அந்த வழக்கைப் பற்றி பலரும் மறந்துவிடுகின்றனர் என்பதை பார்க்கமுடிகிறது. வழக்கு நடக்கும் விதம், பாதிக்கப்பட்ட பிற நபர்கள் நம்பிக்கையுடன் புகார் கொடுக்க முன்வருகிறார்களா என்பது போன்ற விவரங்களை அரசாங்கம், சமூகநல அமைப்புகள் மற்றும் ஊடகத்தினர் தொடர்ந்து கவனிக்கவேண்டும். எல்லா அமைப்புகளும் விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற வழக்குகளில் நியாயம் கிடைக்கும். இல்லாவிட்டால் வழக்கு காவல்நிலையத்தில் இருந்து வேறு அமைப்புக்கு விசாரணைக்கு மாற்றப்படுவது ஒரு கண்துடைப்பு நாடகமாக முடிந்துவிடும்,''என்கிறார் சுதா ராமலிங்கம்.
 
வழக்குப் பதிவான காவல் நிலையத்தில் ஏற்கனவே உள்ள வழக்குகளோடு மற்றொரு வழக்காக நடத்துவதற்கு பதிலாக, விரைந்து முடிக்கவேண்டும் என்பதாலும் சிபிசிஐடிக்கு பரிந்துரைக்கப்படுகிறது என்று கூறும் சுதா ராமலிங்கம் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் உறுதியாக வழக்கை கொண்டுசெல்ல வேண்டும் என்கிறார்.
 
''பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் ஒரு புகார் மட்டுமே வந்துள்ளது. இதுபோல பாதிக்கப்பட்ட பிற நபர்கள் முன்வந்து புகார் கொடுத்தால், இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் கூடும். பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டார் அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, புகார் கொடுப்பது அவசியம். நம் சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை அவமரியாதையாக நடத்துவது குறையும்போதுதான், இதுபோன்ற வழக்குகளில் குற்றம் புரிந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை சாத்தியமாகும்,''என்றார் சுதா ராமலிங்கம்.
 
பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் அரசியல் பின்னணி கொண்டவர்கள் இருப்பதாக எழுந்த சலசலப்புக்கு பின்னர் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஓய்வுபெற்ற டிஜிபி திலகவதி.
 
''அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தன்னுடைய குடும்பத்துக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிவித்தார். அரசியல் பின்னணி கொண்டவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி பரவியதும் மக்கள் மத்தியில் இந்த வழக்கில் விசாரணை முறையாக நடைபெறுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன்காரணமாக அரசு சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது. பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், வழக்கு காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதால், கவனம் அதிகமாகும்,''என்கிறார் திலகவதி.
பொள்ளாச்சி வழக்கில் உள்ளூர் காவல்நிலையத்தில் விசாரணை நடத்துவதைவிட, கோவை அல்லது சேலம் மாவட்டத்தில் சிறப்பு அலுவலரை கொண்டு புகார் பெற்றால், பாதிக்கப்பட்டவர்கள் பலரும் புகார் அளிக்க வாய்ப்புள்ளது என்கிறார் திலகவதி.
 
''உள்ளூரில் விசாரணை நடந்தால், அந்த காவல்நிலையத்திற்கு வரும் நபர்கள் மீது கவனம் இருக்கும். வேறு இடத்தில் புகார் அளிக்க வசதி இருந்தால், அச்சமின்றி பிறர் முன்வருவார்கள். சிபிசிஐடியில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களை ஆறுதல்படுத்தி, வழக்கை துரிதமாக கொண்டுசெல்வது அவசியம்,''என்றார் திலகவதி.
 
சிறைச்சாலையில் பாலியல் தாக்குதலுக்கு ஆளான ரீட்டா மேரியின் வழக்கை நடத்திய விதத்தை விவரித்த திலகவதி, ''பாதிக்கப்பட்ட ரீட்டா மேரி, தனக்கு நேர்ந்த பாதிப்பை சொல்லும் போது பலமுறை மயங்கிவிழுந்துவிட்டார். அவருக்கு ஆறுதல் சொல்லி, ஆலோசனை கொடுத்துதான் முழுவிவரங்களை பெற முடிந்தது. விசாரணை அதிகாரியாக இருப்பவர் பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தால் மட்டுமே இதுபோன்ற வழக்கை முறையாக கொண்டுசெல்ல முடியும்,''என்கிறார் திலகவதி.
 
பொள்ளாச்சி வழக்கின் மீது கவனம் குவிந்துள்ள வேளையில் ஏற்கனவே பாலியல் வன்கொடுமை தொடர்பாக நீதிமன்றங்களில் நடந்துவரும் வழக்குகளின் நிலையைப் பற்றி யோசிக்கவேண்டும் என்ற வாதத்தை வைக்கிறார் சமூக ஆர்வலர் தேவநேயன்.
 
''தற்போது கிடைத்துள்ள அரசின் புள்ளிவிவரங்களின் படி, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக 2014ல் 1,543 வழக்குகள் பதிவாகின. ஆனால் வெறும் 119 வழக்குகளில், 213 நபர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். வழக்குகள் பதிவான ஆறு மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்படவேண்டும் என சட்ட விதிகள் இருந்தாலும், அவை பின்பற்றப்படவில்லை என்பது தெளிவு. பல வழக்குகளில் காலம் தாழ்த்தி விசாரணை நடத்துவது, விசாரணை முறையாக நடத்தாமல் இருப்பது ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது,''என்கிறார் தேவநேயன்.
 
ஒரு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதால் மட்டுமே நீதி கிடைத்துவிடும் என்று சொல்லமுடியாது என்று கூறும் தேவநேயன், ''தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ள ஆதங்கத்தைக் கட்டுப்படுத்த சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது என தோன்றுகிறது. நேர்மையான விசாரணை நடைபெற சரியான அதிகாரிகளை நியமிப்பதும் முக்கியம்,''என்கிறார் தேவநேயன்.