வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Geetha Priya
Last Updated : செவ்வாய், 9 செப்டம்பர் 2014 (12:59 IST)

அமெரிக்க அதிபரைச் சந்திக்கிறார் மோதி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் ஒபாமாவைச் சந்தித்து இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதனை அமெரிக்க அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
2005ஆம் ஆண்டில் மோதி அமெரிக்காவுக்கு வருவதற்குத் தடைவிதிக்கப்பட்ட பிறகு, அவர் மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் பயணம் இது. செப்டம்பர் 29-30ஆம் தேதிகளில் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்கிறார் மோதி.
 
இந்த இரண்டு தலைவர்களும் இந்தியா - அமெரிக்கா இடையிலான வியூகரீதியிலான கூட்டுறவை விரிவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்.
 
மோதி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது நிகழ்ந்த மதக் கலவரங்களையடுத்து, 2005ஆம் ஆண்டில் மோதிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது.
 
இந்தியா - அமெரிக்கா இடையிலான வியூக ரீதியிலான ஒத்துழைப்பின் வாக்குறுதிகளை நிறைவேற்ற, மோதியுடன் சேர்ந்து செயல்பட ஒபாமா ஆர்வத்துடன் இருப்பதாக வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வழிகள், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலகிற்கும் நீண்ட காலத்தில் பலனளிக்கும் நடவடிக்கைகள் ஆகிய விவகாரங்கள் அவர்கள் விவாதிப்பார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இந்தியாவும் அமெரிக்காவும் வேறு சில கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படக்கூடிய ஆஃப்கானிஸ்தான், சிரியா, ஈராக் போன்ற பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இவர்கள் விவாதிக்கவிருக்கின்றனர்.
 
தடைக்குப் பிறகு முதல் பயணம்
 
மத சுதந்திரத்தை மீறும் வெளிநாட்டு அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கும் சட்டத்தின்படி 2005ஆம் ஆண்டில் மோதி அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடைவிதிக்க முடிவெடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு மோதி மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் பயணம் இதுவாகும்.
 
2002ஆம் ஆண்டில், குஜராத் முதலமைச்சராக மோதி இருந்தபோது, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்தக் கலவரத்தில் சுமார் 1000 பேர் வரை கொல்லப்பட்டனர். இதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்.
 
இந்தக் கலவரங்களைத் தடுக்கும்வகையில் மோதி போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையென குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், மோதி இதனை மறுத்தார். இது தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், மோதியை விடுவித்தது. ஆனால், மோதியின் எதிர்ப்பாளர்கள் இதனை ஏற்கவில்லை.