வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (13:04 IST)

இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஆட்டோ கட்டணம் 1 கி.மீ.க்கு ரூ.100!

இலங்கையில் பெட்ரோல் டீசல் விலையை மறுபரிசீலனை செய்து உயர்த்தியுள்ளதாக இலங்கை ஆற்றல்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக நியூஸ்ஃபர்ஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு மறுசீரமைக்கப்பட்ட விலைப்பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, பெட்ரோல் விலை ரூபாய் 450 ஆகவும், டீசல் விலை 445 ஆகவும் மாறியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் தன் ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்ட விலைப்பட்டியல் இதோ.

1 கிலோமீட்டருக்கு 100 ரூபாய்
இன்று காலை முதல் இலங்கையில் புதிய விலை உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், மூன்று சக்கர வாகனங்களில் பயணக்கட்டணம் உயர்ந்துள்ளதாக டெய்லி மிர்ரர் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
 
சிலோன் பெட்ரோலிய கழகம் அறிவித்தபடி, இன்று முதல் நாட்டில் எரிபொருள் விலை உயரும் நிலையில், இலங்கை மூன்று சக்கர வாகன ஓட்டிகள் அமைப்பு தங்கள் பயணக்கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
 
கடந்த இரண்டு முறை நாட்டில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டபோதும் நாங்கள் உயர்த்தவிலை என்கிறார் அந்த அமைப்பின் தலைவர் லலித் தர்மசேகர. அந்த சமயத்தில், பயணியுடன் பேசி ஒரு விலையை முடிசெய்து கொள்ளும்படி ஒட்டுநர்களிடம் கேட்டிருந்தோம். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. எனவே முதல் 1 கி.மீ.க்கு 100 ரூபாயும், இரண்டாவது கி.மீக்கு 80 ருபாயும் கட்டணமாக விதித்துளளோம் என்று கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவோம் : உலக சுகாதார நிறுவனம்
மருந்து தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்கு உலக சுகாதார நிறுவனம் இலங்கையுடன் இணைந்து செயற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாக வீரகேசரி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
 
இலங்கைக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண உதவிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர்,
 
கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகம் கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது; இதுவரையிலும் அது முடிவிற்கு வரவில்லை. இந்த நெருக்கடிகளுடன் இலங்கை பொருளாதார நெருக்கடிகளையும் தற்போது எதிர்கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
 
கடந்த சில மாதங்களாக இலங்கையின் நிலவரம் தொடர்பில் அவதானித்து வருவதோடு, அது தொடர்பில் கரிசனை கொண்டுள்ளோம். உலக சுகாதார நிறுவனம் இலங்கையின் சுகாதார அமைச்சுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படும். மருந்துகள் , மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவசர தேவைகள் குறித்து முன்னுரிமையளித்து அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும்.
 
ஏனைய நாடுகளையும் இலங்கைக்கான நன்கொடைகளை தொடர்ச்சியாக வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் இலங்கையின் சுகாதார ஊழியர்கள் மதிப்பிற்குரியவர்கள். இலங்கைக்கான சுகாதார தேவையை உணர்ந்து ஒத்துழைப்பை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்" என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.