வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 13 ஆகஸ்ட் 2014 (06:41 IST)

தேயிலை தூள்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள்..???

இந்தியாவில் உற்பத்தியாகும் பெரும்பாலான தேயிலை தூளில் உயிரைக் கொல்லும் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக ‘க்ரீன் பீஸ்’ என்ற சுற்றுச்சூழல் தன்னார்வ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தியாளர்களில் ஒன்றான இந்தியாவின் தேயிலை உற்பத்தி முறை குறித்து சுமத்தப்பட்டுள்ள இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நச்சுப் பொருட்கள்
 
கிரீன் பீஸ் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் பரிசோதிக்கப்பட்ட தேயிலை மாதிரிகளில் கிட்டத்தட்ட 94% தேயிலை தூள்களில் குறைந்தது ஒரு பூச்சிக்கொல்லியின் எச்சங்களாவது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
முன்னணி தேயிலை உற்பத்தி நிறுவனங்களின் கிட்ட தட்ட 49 மாதிரிகளில் ஆராய்ச்சி நடத்தப்பட்டதாகவும் அதில் 46 மாதிரிகளில் பூச்சிக்கொல்லியின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கண்டெடுக்கப்பட்ட மொத்தம் 34 வகை பூச்சிகொல்லிகளில், 68 சதவிகிதமானவை இந்திய தேயிலை சாகுபடிக்கு பயன்படுத்தக் கூடியதாக பதிவு செய்யப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெறாத பூச்சிக் கொல்லிகள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அங்கீகரிக்கப்படாத நச்சு பூச்சிக்கொல்லியான டிரையாசோபாஸ், சுவாச உறுத்தலை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லியான சைபர்மெத்ரின் மற்றும் விலங்குகளின் இனப்பெருக்கத்திலும் வளர்ச்சியிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லியான இமிடாக்லோப்ரிட் உள்ளிட்டவை அந்த தேயிலை தூள்களில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தேயிலை வாரியம் மறுப்பு
 
இந்த சர்ச்சை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய தேயிலை வாரியம், கிரீன் பீஸ் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. பரிசோதிக்கப்பட்ட அனைத்து தேயிலை தூள் மாதிரிகளும், இந்திய சட்ட விதிகளை பின்பற்றியே உற்பத்தி செய்யப்பட்டதாகவும் நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் தான் அவை இருப்பதாகவும் இந்திய தேயிலை வாரியத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
 
இந்திய தேயிலை சாகுபடியை நீடித்து நிலைத்து இருக்கும் வகையில் செயல்படுத்துவதற்கும் , செயற்கை தாவர பாதுகாப்பு பொருட்கள் மீது சார்ந்திருக்கும் நிலையை குறைக்கவும் தகுந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் எடுத்துவரப்படுவதாகவும் இந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
 
கிரீன் பீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பிலான உண்மை தகவல்களும் பதில்களும் தேயிலை வாரியத்தின் இணையதளத்தில் விரைவில் பிரசுரிக்கப்படும் எனவும் தேயிலை வாரியம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.