1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: வியாழன், 20 நவம்பர் 2014 (15:23 IST)

வால் நட்சத்திரத்தில் உயிர் உருவாவதற்கான அடிப்படை மூலக்கூறுகள்

பிலே விண்கலம் தரையிறங்கிய வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் கரிமப் பொருட்களின் மூலகங்கள் இருப்பதாக அந்த விண்கலம் கண்டறிந்துள்ளது.


 
காபனைக் கொண்டுள்ள இந்த கரிமங்கள்தான் பூமியில் உயிர்கள் தோன்றியதற்கான அடிப்படையாகும். ஆகவே எமது பூமிக்கு இதுபோன்ற வால் நட்சத்திரங்களில் இருந்து முன்னர் கிடைத்திருக்க்கூடிய இரசாயன பொருட்கள் பற்றிய விபரங்களையும் இது தரக்கூடும்.
 
அந்த வால் நட்சத்திரத்தின் மெல்லிய சூழலை முகரக்கூடிய வகையில், ஜேர்மனியால், நிர்மாணிக்கப்பட்டிருந்த ஒர் கருவியால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இன்னுமொரு ஆய்வின்படி வால் நட்சத்திரத்தின் பெரும்பான்மையான மேற்பரப்பு நீரினாலான பனி படலத்தால் மூடப்பட்டுள்ளது என்றும், சிறிய அளவில் மேற்பரப்பில் ஒரு தூசியும் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
 
'வால் நட்சத்திரம் 67 பி' என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் பாறையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கலம் 10 வருட பயணத்தின் பின்னர் நவம்பர் 12 ஆம் தேதி தரையிறங்கியது.
 
கரிமச் சோதனை மூலகங்கள் பற்றியத் தகவலைக் கண்டுபிடித்த ‘கொசக்‘ கருவியை ஆராய்ந்த டாக்டர் ஃபிரட் கோஸ்மான் அவர்கள், பிபிசியிடம் பேசுகையில், தமது முடிவு குறித்து மேலும் விளக்கத்தை கண்டறிய தாம் முயன்று வருவதாகக் கூறியுள்ளார்.
 
குறிப்பாக என்ன மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டது என்றோ அல்லது அது எவ்வளவு சிக்கலானது என்றொ அந்தக் கருவி கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.


 
ஆனால், இந்த முடிவுகளின் மூலம் இப்படியான வால் நட்சத்திரங்களில் இருந்து பூமிக்கு கிடைத்திருக்கக் கூடிய இரசாயன திண்மக் கட்டிகள் எவ்வாறு புவியில் உயிர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கும் என்ற சூட்சுமத்தை கண்டறிய முடியும் என்றும் அவர் நம்புகிறார்.
 
பிலே தரையிறங்கிய பிறகு வால் நட்சத்திரத்தில் ஒரு சுத்தியலை பிரயோகிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ‘முபுஸ்‘ என்னும் கருவியின் ஆரம்ப கட்ட தகவல்களின்படி, அங்கு 10 முதல் 25 செண்டிமீட்டர் கனதியான தூசிப்படலமும் அதற்கு கீழே நீரினால் ஆன பனிக்கட்டியும் இறுக்கமாகப் படர்ந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
 
சூரிய குடும்பத்தின் வெளிவட்டப் பாதையில் இருக்கக்கூடிய வெப்ப நிலை காரணமாக இந்த பனி நன்றாக இறுகி இருப்பதாகவும், அது மணற்கற்களின் அளவுக்கு திண்மமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
 
ஆயினும் மேலும் இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.