ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (14:13 IST)

வெங்காயம் ஏற்றுமதிக்கு உடனடி தடை - திடீர் நடவடிக்கையின் காரணம் என்ன?

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த அனைத்து ரக வெங்காயத்துக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கான உத்தரவை அன்னிய வர்த்தக தலைமை இயக்குநரகம் பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் வெங்காய விலை சமீப நாட்களாக திடீரென அதிகரித்து வருகிறது. இதனால், உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் வரத்து குறைந்து காணப்படுகிறது. 
 
கன மழை, வெள்ளம் போன்றவை இதற்கு காரணமாக கூறப்பட்டாலும், விலை உயர்வு மேலும் ஏற்படாமல் தவிர்க்க தற்போதைய தடை நடவடிக்கை உதவும் என்று இந்திய வர்த்தகத்துறை அமைச்சக உயரதிகாரி தெரிவித்தார்.
 
இந்தியாவில் வெங்காயத்தின் சில்லறை விலை மற்றும் மொத்த விலை முறையே 4% மற்றும் 34.5 சதவீதம் அதிகரித்தது. டெல்லியில் கிலோ வெங்காயம் திடீரென ரூ. 40க்கு விற்பனையானது. இதன் அறிகுறி, இந்தியாவில் வெங்காயம் விலை திடீரென அதிகமாகலாம் என்ற உணர்வை அரசுக்கு அளித்ததால் தற்போதைய தடை நடவடிக்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டு வெங்காய வியாபாரிகள் தெரிவித்தனர்.
 
முன்னதாக, இந்தியாவில் வெங்காய சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளின் வருவாயை ஊக்குவிக்கும் நோக்குடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி முதல், ஆறு மாதங்களுக்கு அமலில் இருந்த வெங்காய ஏற்றுமதி தடையை இந்திய அரசு தளர்த்தியது.
 
ஆனால், அந்த தடை அமலுக்கு வந்த அடுத்த மாதமே சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவிருந்த ஹரியாணா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்தது. டெல்லியில் கூட வெங்காய வரத்து குறைந்ததால் கிலோ ரூ. 80க்கு விற்கப்பட்டது. சில இடங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரூ. 160 வரை கூட கிலோ வெங்காயம் விற்பனையானது.
 
வெங்காயம் என சாதாரணமாக நினைத்த விஷயம், நாடாளுமன்றத்தில் கூட எதிரொலித்தது. இதையடுத்து இந்திய அரசு தலையிட்டு, வெங்காய வரத்து அனைத்து மாநிலங்களிலும் இருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் பகுதி, பகுதியாக விலக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென்று வெளிநாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.