1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 டிசம்பர் 2020 (15:27 IST)

ஆஸ்டெக் பேரரசின் பழங்கால மண்டை ஓட்டு கோபுரம்: வியப்பில் மெக்சிகோ அகழ்வாராய்ச்சியாளர்கள்

மெக்சிகோ சிட்டி நகரில் ஓர் அசாதாரணமான பழங்கால மனித மண்டை ஓடுகள் கோபுரத்தின் மேலதிக பகுதிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கோபுரம் முன்னரே பகுதி அளவு கண்டறியப்பட்டிருந்தது.
 
 
இதற்கு முன்பும் மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்ட அந்த இடத்தில், 119 மண்டை ஓடுகள் கூடுதலாக கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக, மெக்சிகோவின் தேசிய மானிடவியல் மற்றும் வரலாற்று மையம் கூறியுள்ளது. இந்த கோபுரம் கடந்த 2015-ம் ஆண்டு, மெக்சிகோ நாட்டின் தலைநகரமான மெக்சிகோ சிட்டியில், ஒரு கட்டடத்தை புனரமைக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இந்த மண்டை ஓடுகள், ஆஸ்டெக் இன மக்களின் கதிர், போர் மற்றும் நரபலிக்கான ஆஸ்டெக் கடவுளின் கோயிலில் இருக்கும் மண்டை ஓடு அடுக்கைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஹுட்சிலோபோச்ட்லி தேவாலயத்தின் ஒரு மூலையில், ஹுவே சொம்பாண்ட்லி என்கிற இந்த மனித மண்டை ஓடு அடுக்கு காணப்படுகிறது.
 
நவ்ஹாத்ல் எனும் மொழியைப் பேசிய மக்கள் இந்த ஆஸ்டெக் இனக் குழுவினர். இவர்கள் 14-ம் நூற்றாண்டு முதல் 16-ம் நூற்றாண்டு வரை, இன்றைய மத்திய மெக்சிகோவை ஆண்டு வந்தார்கள். தற்கால மெக்சிகோ சிட்டி உள்ள இடத்தில் அமைந்திருந்த, டெனோஷ்டிட்லன் இவர்களின் தலை நகரமாக இருந்தது.
 
கடந்த 1521-ம் ஆண்டில், ஆஸ்டெக்குகளின் பேரரசை, ஸ்பானியரான ஹெர்னன் கார்டெஸ் தலைமையிலான ஸ்பானியப் படை கைப்பற்றியது. ஹுவே சொம்பாண்ட்லி மாதிரியான அமைப்பு, ஆஸ்டெக்குகளின் நகரத்தின் மீது, ஹெர்னன் உடன் படையெடுத்து வந்தவர்களை அச்சம் கொள்ளச் செய்தது.
 
உருளை வடிவிலான இந்த அமைப்பு, பெரிய மெட்ரோபொலிடன் தேவாலயத்துக்கு அருகில், டெம்ப்ளோ மயோரில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இது டெனோஷ்டிட்லன் நகரத்தில் இருந்த முக்கிய தேவாலயங்களில் ஒன்று.
 
டெம்பிளோ மயோர் தொடர்ந்து எங்களை வியக்க வைக்கிறது, கடந்த சில ஆண்டுகளில், எங்கள் நாட்டில் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாதமான விஷயங்களில் ஹுவே சொம்பாண்ட்லியும் ஒன்று என எந்த வித சந்தேகமுமின்றிக் கூறலாம் என்கிறார் மெக்சிகோவின் கலாசார அமைச்சர் அலெஜாண்ட்ரா ஃப்ராஸ்டோ.
 
இந்த கோபுரத்தை 1486-ம் ஆண்டு முதல் 1502-ம் ஆண்டு வரையான கால கட்டத்தில், மூன்று கட்டமாக கட்டமைத்து இருக்கிறார்கள் என்பதையும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
 
இந்த மண்டை ஓட்டுக் கோபுர கண்டுபிடிப்பு, மானிடவியலாளர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த கோபுரத்தில், இளம் வயது போர் வீரர்களின் மண்டை ஓடுகள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.
 
ஆனால் அவற்றுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மண்டை ஓடுகளைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள். இது, ஆஸ்டெக் பேரரசில் மனித உயிர்களை பலிகொடுப்பது அல்லது தியாகம் செய்வது தொடர்பாக கேள்விகளை எழுப்புகின்றன.
 
இந்த மண்டை ஓட்டுக் கோபுரத்தில் இருக்கும் மண்டை ஓடுகளில், எத்தனை மண்டை ஓடுகள் போர் வீரர்களுடையவை என குறிப்பிட்டுக் கூற முடியாது, இதில் சிலர் கைது செய்யப்பட்டவர்களாகக் கூட இருக்கலாம். அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம். அதே நேரத்தில் இந்த மண்டை ஓடுகள் அனைத்துமே உயிர் பலி கொடுக்கப்பட்டவை தானா எனவும் நமக்குத் தெரியாது என்கிறார் அகழ்வாராய்ச்சியாளரான ரால் பரேரா.