வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (12:34 IST)

பிகாரில் தேசியக் கொடியுடன் போராடிய இளைஞரை தாக்கிய அதிகாரி - விசாரணை நடத்த உத்தரவு

BBC
(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (23/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

பிகாரில் ஆசிரியர் பணி நியமனத்தை தாமதப்படுத்துவதற்கு எதிராக போராடிய இளைஞரை கூடுதல் மாவட்ட ஆட்சியர் தாக்கியதாக, 'தினமணி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

பாட்னாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பணி நியமனத்தை தாமதம் செய்வதற்கு எதிராக நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காவல்துறையினருடன் பாட்னா கூடுதல் மாவட்ட ஆட்சியர் கே.கே.சிங் சென்றுள்ளார்.

போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியும் போராட்டத்தை தொடர்ந்ததால் தடியடி நடத்தவும் தண்ணீர் பீய்ச்சி கூட்டத்தை கலைக்கவும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் காவல்துறைக்கு உத்தரவிட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

தொடர்ந்து தேசியக்கொடியுடன் சாலையில் படுத்து போராட்டம் நடத்திய இளைஞர் ஒருவரை தடியால் கூடுதல் மாவட்ட ஆட்சியர் தாக்கியதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கிய நிலையில், நிகழ்விடத்திற்கு வந்த பாட்னா மாவட்ட ஆட்சியர் விசாரணைக்குழு ஒன்றை அமைத்தார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "பாட்னாவில் போராட்டத்தைக் கட்டுப்படுத்தவே தடியடி நடத்தப்பட்டது. இளைஞரை கூடுதல் மாவட்ட ஆட்சியர் தாக்கியதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்மீது தவறு இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'ஷாப்பிங்' அழைத்து செல்லாததால் 5-ம் வகுப்பு மாணவி தற்கொலை - போலீசார் விசாரணை

பெங்களூரு அருகே 5-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அனந்தபுராவில் வசிக்கும் தம்பதியின் 11 வயது மகள் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த தம்பதிக்கு மேலும் 2 குழந்தைகள் உள்ளனர். சிறுமியின் தந்தை கூலித் தொழிலாளி ஆவார்.

திருவிழாவுக்காக சிறுமிக்கு அவரது தந்தை துணி வாங்கி கொடுத்ததாகவும் அன்றைய தினம் மற்ற 2 குழந்தைகளுக்கும் துணி எடுத்து கொடுக்கவில்லை எனவும் அச்செய்தி தெரிவிக்கிறது.

இதையடுத்து, நேற்று முன்தினம் (ஆக. 21) தனது மற்ற 2 குழந்தைகளுக்கும் துணி வாங்கி கொடுப்பதற்காக அந்த தம்பதியினர் வெளியே புறப்பட்டு சென்றனர். அப்போது தனக்கு துணி வாங்கி கொடுத்திருந்தாலும், தன்னையும் 'ஷாப்பிங்' அழைத்து செல்லும்படியும், மற்றொரு ஆடை வாங்கி கொடுக்கும்படியும் சிறுமி தனது தந்தையிடம் கேட்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், சிறுமியை, அவரது தந்தை 'ஷாப்பிங்' அழைத்து செல்லாமல், மற்ற 2 குழந்தைகளை மட்டும் அழைத்து சென்றதாகவும், இதனால் வீட்டில் தனியாக இருந்த வைஷாலி தற்கொலை செய்து கொண்டதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.

போலீஸ் விசாரணையில், ஷாப்பிங் அழைத்து செல்லாததாலும், கூடுதலாக ஆடை வாங்கி கொடுக்காததாலும் வைஷாலி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சாம்ராஜ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு நிதி அமைச்சர் கார் மீது காலணி வீச்சு விவகாரம்: பாஜக மகளிரணி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு

தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் பாஜக மகளிரணியைச் சேர்ந்த 3 பெண்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் முறைகேடாக செய்த செலவு ரூ.1 லட்சம் கோடி: பிடிஆர்

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர்.

இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த குமார், பாலா, கோபிநாத், மற்றொரு கோபிநாத், ஜெயகர்ணா, முகமது யாகூப், தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோரை அவனியாபுரம் போலீசார் கைது செய்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் 6-வது நீதித்துறை நடுவர் சந்தானகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும், குமார் உட்பட 6 பேருக்கு ஜாமீன் வழங்கியும் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

தனலெட்சுமி உட்பட 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி போலீசார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

'.எம்.எப் கடன் இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும்'

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து கடன் வசதி இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாயண நிதியத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், அதன் முதல் படி, அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பில் பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

உள்நாட்டு கடன் இலக்குகளை அடைவதில் எந்த சிக்கலும் இல்லையெனவும், இதனால் உள்நாட்டு கடனை மறுசீரமைக்காமல் நிலைமையை நிர்வகிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.