வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 16 அக்டோபர் 2014 (17:23 IST)

மீனவர் படகுகளை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

இலங்கை வசம் இருக்கும் தமிழக மீனவர்களின் 75 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் இந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 75 மீன்பிடிப் படகுகளையும் இலங்கை வசம் இருக்கும் 24 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த எட்டாம் தேதி எழுதியுள்ள கடிதத்தை பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தங்கள் வாழ்வாதாரமான படகுகள் இன்றி, மீன்பிடிக் குடும்பங்கள் நிராதரவாக இருப்பதாகவும் வடகிழக்குப் பருவமழை நெருங்கிவரும் நிலையில், படகுகளை திறந்த வெளியில் பராமரிப்பின்றி வைத்திருந்தால், அவை சரிசெய்ய முடியாத அளவு சேதமடைந்துவிடும் என்றும் அந்தக் கடிதத்தில் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
 
தொடர்ந்து பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருப்பதால், அந்தப் படகுகள், மோசமடைந்திருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் தனது கடிதத்தில் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அந்தப் படகுகளை உடனடியாக பாதுகாப்பாக நிறுத்தி வைக்க இலங்கை அரசிடம் கோருவதோடு, அந்தப் படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென தனது கடிதத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.