திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (09:34 IST)

நீண்ட காலம் பதவி வகித்த நான்காவது இந்தியப் பிரதமரானார் நரேந்திர மோதி

இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: நீண்ட காலம் பதவி வகித்த நான்காவது இந்தியப் பிரதமரானார் மோதி
இந்தியாவில் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர்களின் பட்டியலில் தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாகத் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர்கள் பட்டியலில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோருக்கு அடுத்த நிலையை நரேந்திர மோதி அடைந்துள்ளார்.

அதே சமயத்தில், இதற்கு முன்னர் நான்காவது இடத்திலிருந்த அடல் பிகாரி வாஜ்பேயியை விஞ்சியதன் மூலம், நீண்ட காலம் பதவி வகித்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற நிலையையும் பெறுகிறார் மோதி.

2014ஆம் ஆண்டு மே 26ஆம் நாள் நாட்டின் 14-வது பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோதி. தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019ஆம் ஆண்டு மே 30ஆம் மீண்டும் பிரதமர் பொறுப்பேற்றார்.

நாட்டில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு. ஏறத்தாழ 17 ஆண்டுகள். அவருக்கு அடுத்தபடியாக அவருடைய மகள் இந்திரா காந்தி, 11 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். மன்மோகன் சிங் தொடர்ந்தாற்போல 10 ஆண்டுகள்.

நாளை நாட்டின் 74-வது சுதந்திர நாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நீண்ட காலம் பதவியிலிருந்த நான்காவது பிரதமர் என்ற தகுதியைப் பெறுகிறார் மோதி" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.