1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2017 (15:53 IST)

பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது ஏன்? அமைச்சரின் கருத்தால் ஆர்வலர்கள் ஆத்திரம்!

பெங்களூரு நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தொல்லை குறித்த விசாரணையில், கண்காணிப்பு காணொளி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


 
 
கட்டுக்கடங்காத ஆண்களின் கூட்டத்தால், இருட்டில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை அழுது கொண்டும், பெண் காவல்துறையினரின் அரவணைப்பிலும் புகார் அளிக்கின்ற பெண்களின் புகைப்படங்களை நகர செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருந்தது.
 
சமூக ஊடகங்களின் அறிக்கைகளை தவிர வேறு எந்த புகார்களையும் இது தொடர்பாக காவல்துறை பெறவில்லை என்பது குறிப்படத்தக்கது.
 
அமைச்சரின் கருத்தால் ஆர்வலர்கள் ஆத்திரம்:
 
இதேவேளையில், "இத்தகைய விடயங்கள் நிச்சயம் நடக்கதான் செய்யும்" என்கிற அமைச்சரின் கூற்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
"மனப்பான்மையில் மட்டுமல்ல, அவர்களை போல ஆடை அணிவதிலும் மேற்குலகினரை பார்த்து இளைஞர்கள் நடக்கின்றனர்" என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
கடந்த சனிக்கிழமை இரவு புத்தாண்டை கொண்டாடும் வகையில் மத்திய வர்த்தக மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் மகாத்மா காந்தி சாலை மற்றும் பிரகாடே சாலை பகுதியில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டதாக பெங்களூரில் இருக்கும் பிபிசி இந்தி மொழி பிரிவின் இம்ரான் குரேஷி தெரிவிக்கிறார்.
 
பாதுகாப்புக்கு 1500 ஆண் மற்றும் பெண் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
 
"இந்த பகுதியில் வழக்கமாக கூடும் மக்களை விட அன்று மூன்று மடங்கு மக்கள் அதிகமாக கூடியதாக, பெங்களூரு மிரர் செய்தித்தாளின் புகைப்படக் கலைஞர் ஆனந்த சுப்பிரமணியன் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
இவருடைய புகைப்படங்கள் இந்த நகரின் ஆண்களின் நடத்தை பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளன.
 
சனிக்கிழமை இரவு நடந்தது என்ன?
 
"இரவு 11:45 முதல் நள்ளிரவு 12:30 வரை இந்த பகுதியில் மக்கள் நகரக்கூட முடியவில்லை. இரண்டு சாலைகளின் சந்திப்புக்கு அருகில்தான் காவல்துறை மக்கள் கூட்டத்தை கலைக்க முடிந்தது. ஆனால், மீண்டும் மக்கள் அங்கு கூடத் தொடங்கினர்" என்று அவர் கூறினார்.
 
"அந்த மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட சிறு வழியில், காவல் துறையினரிடம் வந்தடைந்த மக்களில், தாங்களுக்கு பாலியல் தெந்தரவு கொடுக்கப்பட்டதை புகாராக தெரிவிக்கும் பெண்களை என்னால் காண முடிந்தது. அந்த மனிதர்களை இனம்காட்ட முடியுமா என்று காவல்துறையினர் கேட்டபோது, அங்கே பெருங்கூட்டமாக இருந்தால், அவர்களால் இயலவில்லை".
 
"பல ஆண்களால் சூழப்பட்டிருந்த பெண்ணொருவர் அழுது கொண்டிருந்ததை நான் பார்த்தேன்" என்று அவர் மேலும் கூறினார்.
 
பழிவாங்குதல் மற்றும் சமூக அளவில் முத்திரை குத்தப்படுவதால், பாலியல் தாக்குதல்களை பற்றி புகார் தெரிவிக்க இந்தியாவிலுள்ள பெண்கள் தயங்குகின்றனர்.
 
ஆனால், சனிக்கிழமையன்று தங்களுக்கு நடைபெற்ற இந்த கொடுமையை பற்றி எடுத்துக் கூற பல பெண்கள் முன்வந்தனர்.
 
பணியில் இருந்து திரும்புகையில் இரவு நேரத்தில் தனக்கு ஓர் ஆண் பாலியில் தொல்லை கொடுத்ததை புகைப்படக் கலைஞர் சாய்தாலி வாஸ்நிக் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றினார்.
 
"நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்று எண்ணி, லாவகமாக அவர் அவ்வாறு செய்தார்" என்று அவர் கூறினார். நான் அந்த மனிதரோடு போராடிய போதும் காவல்துறையினர் தலையிடவில்லை என்றும் தெரிவித்தார்,
 
அந்த இரவில் அங்கிருந்த பெண்களில் ஒருவர் தான் எஷிதா (முழு பெயரல்ல). "20-30 ஆண்கள் திடீரென சாலையில் ஓடத் தொடங்கியபோது, சில பெண்களை தொட்டு பாலியல் தொல்லை அளித்தனர்" என்று அவர் உறுதி செய்தார்.
 
"நான் என்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரர்களோடு 12-15 பேராக குழுவாக இருந்தேன். அதனால் நாங்கள் பாதுகாப்பாக இருந்தோம்" என்று அவர் கூறினார். அங்கு நின்றிருந்த பல காவல்துறையினர் அருகில் இருந்த மெட்ரோ ரயில் நிலையம் வரை எங்களை பாதுகாப்பாக அழைத்து சென்றதால், நாங்கள் தொல்லைக்கு உள்ளாகவில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.
 
அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு காணொளி பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன" என்று பெங்களூரு காவல்துறை ஆணையாளர் பிரவீன் சூட் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.
 
"இந்த காணொளி பதிவுகளிலும், புகைப்படங்களிலும் பாலியல் தொந்தரவு வழங்கப்பட்டதற்கான சான்றுகளை தேடி வருகின்றோம். சான்றுகளை கண்டறிந்தவுடன் அது தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு நிமிடம் கூட தாமதிக்க மாட்டோம்" என்று அவர் கூறியுள்ளார்.
 
அவ்வாறு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதற்கான காணொளி பதிவுகள் அல்லது புகைப்படங்கள் இருந்தால் வழங்க வேண்டும் என சூட் பத்திரிகையாளர்கள் மற்றும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
"இதில் பாதிக்கப்பட்டவர்களிடம் நாங்களே சென்று அவர்களின் புகார்களை பெறுவோம்" என்று அவர் தெரிவித்தார்.